---Advertisement---

ரபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு

On: October 29, 2025 8:19 AM
Follow Us:
---Advertisement---

ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று பயணித்தார்.

ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு இன்று (அக்டோபர் 29) ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகை தந்தார். அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் ரபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். ரபேல் விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன.

ஏப்ரல் 22ம் தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூரின் போது ரபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் ரபேல் போர் விமானத்திற்கு மவுசு கூடியது.

ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ரபேல் போர் விமானத்தின் பங்கு முக்கியத்துவமாக இருந்ததால், செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று பயணம் செய்து இருக்கிறார்.

ஏற்கனவே, 2023ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரௌபதி முர்மு பயணம் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் பயணம் செய்து இருக்கின்றனர்.

இதனால், சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் தலைவர் ஆனார். தற்போது 2 வது முறையாக போர் விமானத்தில் திரௌபதி முர்மு பயணம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

Leave a Comment