2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 01) தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்பாக தனிநபருக்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை மற்றும் பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி வரை கடன், என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்த நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 8வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் ஜனாதிபதியை சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்துக்கு சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025,26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்;
ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை:
புதிய வருமான வரி விதிப்பு முறையின்படி வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன், கூடுதலாக ரூ.75,000 கழிவும் கிடைக்கும். வருமான வரி விலக்கு உச்ச வரம்புக்கு மேலாக ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கான வரிகள் விவரம்:
ரூ.4 லட்சம் வரை – வரி இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – 5% வரி
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10% வரி
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை – 15% வரி
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை – 20% வரி
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை – 25% வரி
ரூ.24 லட்சத்துக்கு மேல் 30% வரி
புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். வருமான வரி தாக்கல் செய்யப்படுதல் எளிதாக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரை வரி பிடித்தம் கிடையாது. தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் நடுத்தர வர்க்கத்தினர் நலனை சார்ந்ததாக இருக்கும். வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.
கிசான் அட்டை மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன்:
‘‘மத்திய அரசின் கிசான் அட்டை மூலமாக கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும். அதன்படி குழு நிறுவனங்களுக்கு கிசான் அட்டை மூலமாக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கூட்டுறவுத்துறை, சிறு, குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வசதி வழங்கப்படும்.

நிறுவனங்கள் கடன் பெறுவதற்கு வசதியாக கடன் உத்தரவாத பாதுகாப்பு அதிகரிக்கப்படும். குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை கூடுதல் கடன் வழங்கப்படும். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி கூடுதல் கடன் கிடைக்கும். சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரையிலான கடன் அனுமதி.
தொடக்க நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை, உத்தரவாதக் கட்டணம் ஒரு சதவீதமாக குறைக்கப்படும்.
பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்:
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது. பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும். பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க திட்டம் அறிமுகம் செய்யப்படும். சிறப்பான சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க திட்டம் கொண்டுவரப்படும். பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள்:
அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் மேல்நிலைப் பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம் பிராட்பேண்ட் வசதி ஆகியவை அமைக்கப்படும். இதைத்தவிர மாணவர்களுக்கான பாடங்களைத் தாய் மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.
மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்:
‘‘அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப்படிப்புக்கு கூடுதலாக 75 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்.
புதிய வருமான வரி மசோதா:
வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் விதமாக புதிய வருமான வரி மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நிதியமைச்ச்ர நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
வேளாண் துறைக்கு முன்னுரிமை:
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் போன்ற துணைத் துறைகளைப் பயன்படுத்துவது, விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறவும் பாரம்பரிய பயிர்களின் நிலையற்ற தன்மைக்கு ஏற்ற வகையில் செயல்படவும் உதவும். குறிப்பிட்ட வேளாண் காலநிலை நிலைமைகள் மற்றும் வெவ்வேறு பிராந்தியங்களின் இயற்கை வள தன்மைகளுடன் ஒத்துப்போகும் உற்பத்தி முறைகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவது இன்றியமையாததாகும்.
ஆராய்ச்சி மேம்பாடுகளில் முதலீடு செய்யப்படும், குறிப்பாக காலநிலையை எதிர்கொள்ளக்கூடிய வகைகள், மேம்படுத்தப்பட்ட வேளாண் செயல்பாடுகள் மற்றும் காலநிலையை எதிர்கொள்ளக்கூடிய பயிர்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் ஆகியவை நீண்டகால பயன்களை வழங்கலாம்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு, உற்பத்தியை அதிகரிக்க உதவும். இநாம், எஃ.பி.ஓ சேவைகளை திறம்பட பயன்படுத்துவது, வேளாண் சந்தைகளில் கூட்டுறவுகள் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பங்களிப்பை வழங்க ஆதரவளிப்பது ஆகியவை, விலை நிர்ணயம் மற்றும் சந்தை செயல்திறனை மேம்படுத்த உதவும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி தள்ளுபடி:
உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரியை தள்ளுபடி செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் மருந்துகளுக்கான சுங்க வரிகள் குறித்த சீர்த்திருத்தங்களை கொண்டுவருவதாக தெரிவித்தார்.
உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரியை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் 6 வகை மருந்துகளுக்கு 5 சதவிகிதம் வரியில் சலுகை அளிக்கப்படுகிறது என்றார்.
அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகர்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
லித்தியம் பேட்டரிக்கு வரி குறைப்பு! செல்போன், மின் வாகனங்கள் விலை குறைகிறது:
செல்போன், மின் வாகனங்களில் பயன்படுத்தும் லித்தியம் பேட்டரிகளுக்கான வரி குறைக்கப்படுகிறது என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
திருக்குறவை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர்:
நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
அதன்படி ‘‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங்குடி’’ என்ற திருக்குறளை மேற்கொள்காட்டினார்.
காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி:
காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீட்டு அனுமதி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் 74% ஆக இருந்தது என தெரிவித்தார்.

ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது:
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி புதிய வருமான வரி முறையில் தனிநபர் ஆண்டு வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக இருந்த நிலையில், ரூ.12 லட்சமாக உயர்த்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், வரிச்சலுகையாக ரூ.75,000 கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்கள் இனி வரி கட்டத் தேவையில்லை. இதனால் நடுத்தர மக்களின் சேமிப்பு மற்றும் முதலீடுகள் அதிகரிக்கும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். தனிநபர் மாத சம்பளமாக பெறாமல், மூலதன ஆதாயம் உள்பட பிற வகையில் கிடைக்கக் கூடிய வருமானங்களுக்கான வரி சதவிகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை:
அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்படி 2047ஆம் ஆண்டுக்குள் 100 கிலோவாட் அளவில் மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்படும் என தெரிவித்தார்.
இந்தியாவில் பொம்மைகள் தயாரிக்க சிறப்பு திட்டம்:
இந்தியாவில் பொம்மைகள் தயாரிக்க சிறப்பு திட்டத்தை நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய பொம்மைகளுக்கான செயல்திட்டம் மூலமாக பொம்மை தயாரிப்பில் இந்தியா உலக அளவில் மையமாக திகழ இந்தியாவில் பொம்மைகளை தயாரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு தாய்மொழியிலேயே டிஜிட்டல் கல்வி:
மாணவர்களுக்கு தாய்மொழியிலேயே டிஜிட்டல் கல்வி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும் என்றார்.
வளர்ச்சி, பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப்படும் :
வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கும் பணிகளைச் செய்து வருகிறோம். அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. வரிவிதிப்பு மற்றும் நிதித்துறை உட்பட ஆறு களங்களில் ‘‘மாற்றத்தக்க சீர்த்திருத்தங்களை’’ தொடங்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அரசாங்கத்தின் வளர்ச்சி சாதனை மற்றும் கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்தள்ளன. பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், உள்ளடக்கிய வளர்ச்சியை பாதுகாத்தல், சமூகம் மற்றும் தொழில்துறையை ஊக்குவித்தல் மற்றும் நாட்டின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் சக்திக்கான செலவினத்தை அதிகரித்தல் என நிதியமைச்சர் கூறினார்.
பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன்:
பட்டியலின, பழங்குடியின பெண் தொழில்முனைவோர் 5 லட்சம் பேருக்கு தலா ரூ 2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை உரையை நிகழ்த்தி நிறைவு செய்தார். மத்திய பட்ஜெட் உரை முடித்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி 3வரை ஒத்திவைக்கப்பட்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்த பல்வேறு திட்டங்கள், ஏழை, எளிய மக்களுக்கு பயனடையும் வகையில் இருப்பதாக தொழில்துறையினர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைவருமே தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளம் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.