79வது சுதந்திரத் தினத்தையொட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் (ஆகஸ்ட் 15) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: இந்திய சுதந்திரத் திருநாள்!
‘‘கண்ணீர் விட்டோ வளர்த்தோம்! கருகத் திரு உளமோ!” என செந்நீர் விட்டு, தியாக வேள்வியில் விளைந்த விடுதலைப் பெருநாள்!
இன்று பாரதத்தின் 79-வது வருட சுதந்திர திருநாள்! முதற்கண் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நமது மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில், நம்மையெல்லாம் அனுதினமும் காத்து நிற்கும் பாரத அன்னையின் பாத கமலத்திற்கு வண்ண மலர்கள் தூவி வணங்கினேன்.
“வந்தே மாதரம்! பாரத மாதா கி ஜே!” “விடுதலை வீரர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!”
போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம், உருவாக்குவோம் என்ற உறுதிமொழியோடு, கோஷங்களை தொண்டர்கள் தன்னெழுச்சியோடும், உணர்ச்சியோடும் எழுப்பினர்.
தேசத்திற்காக தன்னுயிர் ஈந்த விடுதலை வீரர்களின் பாதங்களை மனதார நினைந்து, நமது மூவர்ண தேசியக் கொடியை வானுயர ஏற்றி மகிழ்ந்தேன்.
மகிழ்ச்சியுடன் இனிப்பைப் பகிர்ந்தேன். இந்த இனிய தேசிய விடுதலைத் திருவிழாவில் கலந்து கொண்ட என் உயிரணிய தொண்டர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாரத மாதா கி ஜே! இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.