---Advertisement---

அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை

On: February 11, 2025 5:41 PM
Follow Us:
---Advertisement---

பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில், ஊழல் நடந்திருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியதற்கு அமைச்சர் கமிஷன் காந்தி சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 11) விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : “பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில், ஊழல் நடந்திருப்பதை, தமிழக பாஜக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு குற்றச்சாட்டு வைத்தபோது. பதிலேதும் கூறாமல் ஒளிந்து கொண்ட கைத்தறித் துறை அமைச்சர் காந்தி, இந்த ஆண்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டதும், நான்கைந்து பக்கங்களுக்குக் கதை எழுதியிருக்கிறார்.

இலவச வேட்டி, சேலைக்கான நூல், தமிழக அரசு கூட்டுறவு நூற்பாலைகளிடமும், தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்திடமும், தேசிய அளவிலான ஒப்பந்தங்கள் மூலமும் கொள்முதல் செய்யப்பட்டு, நூல் மாதிரிகள் தரப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, தேர்வு பெற்ற நூல் லாட்டுகள் மட்டுமே கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வேட்டி, சேலை உற்பத்திக்காக அனுப்பப்படுகிறது என்றும், இத்திட்டத்தினைக் கண்காணித்துச் செயல்படுத்த ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கூறியிருக்கிறார் காந்தி. அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, இத்தனை தரப்பரிசோதனைகளுக்குப் பிறகு அனுப்பப்படும் நூலில் நெய்யப்பட்ட வேட்டிகளில் எப்படி சுமார் 20 லட்சம் வேட்டிகள், 65% க்கும் அதிகமான அளவு பாலியஸ்டர் கலந்திருப்பதாக நிராகரிக்கப்பட்டன? தவறு நூல் அனுப்பியதிலா அல்லது வேட்டி நெய்ததிலா, எங்கே தவறு நடைபெற்றிருக்கிறது என்பதை அமைச்சர் காந்தி தெரிவிப்பாரா?

கடந்த ஆண்டு, பொதுமக்களுக்கு கொடுத்த. 100 சதவீதம் பருத்தி இருக்க வேண்டிய வேட்டியின் வார்ப் பகுதியில், வெறும் 22 சதவிதம் மட்டுமே பருத்தி இருந்ததையும், மீதம் 78 சதவீதம் பாலியஸ்டர் இருந்ததையும், பரிசோதனை மூலம் கண்டறிந்து, பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வேட்டி உட்பட அனைத்து ஆதாரங்களுடன், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் நாங்கள் புகாரளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சர் காந்தி, சாகவாசமாக ஒரு ஆண்டுக்குப் பிறகு வந்து, கடந்த ஆண்டு 100% பருத்தி இருந்தது என்று பொய் சொல்கிறார். திமுக ஆட்சி இருக்கும்வரை. அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். திமுக ஆட்சி நிரந்தரமில்லை என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இத்தனை ஆண்டுகளில், தமிழக அரசின் பொங்கல் இலவச வேட்டி, சேலைகளின் தரத்தினைப் பரிசோதனை செய்து. அவற்றில் தரக்குறைவானவற்றை நிராகரித்ததாகப் படித்திருக்கிறோமா? இத்தனை ஆண்டுகளில், இது போன்ற தரப்பரிசோதனை நடைபெறவில்லை என்பதுதான் உண்மை. கடந்த ஆண்டு தமிழக பாஜக எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுக்குப் பிறகு, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மூன்றாம் வாரத்தில் கைத்தறித் துறை இயக்குநராகப் பொறுப்பேற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு சண்முகசுந்தரம் அவர்கள், கண்துடைப்புக்காக அல்லாமல், அதிகப்படியான மாதிரிகளை முதன்முறையாக தரப்பரிசோதனை செய்தும், தரம் குறைந்த வேட்டிகளை திருப்பி அனுப்பி. அவற்றின் எண்ணிக்கைக்கு ஈடான வேட்டிகளை மீண்டும் அனுப்பக் கோரியிருந்தார்.

பதவிக்கு வந்து ஆறே மாதத்தில், ஒரு ஐஏஎஸ் அதிகாரியைப் பணிமாற்றம் செய்வதுதான் உங்கள் வழக்கமான அதிகாரிகள் பணிமாற்றமா அமைச்சர் அவர்களே? தமிழக மக்கள் என்ன, முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

இறுதியாக, தரக்குறைவானவை என்று நிராகரிக்கப்பட்ட வேட்டிகளின் எண்ணிக்கைக்கு ஈடான எண்ணிக்கையிலான வேட்டிகளை, அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் அரசு கொள்முதல் கிடங்குக்கு, 10.02.2025 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். இல்லையேல், இழப்பீடு நடவடிக்கை எடுப்பதோடு, எதிர்காலத்தில் இந்த சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட மாட்டாது என்பதையும், கைத்தறித் துறை இயக்குநர் தனது 06.02.2025 தேதியிட்ட விரைவுக் குறிப்பாணை மூலம் தெரிவித்திருக்கிறார். அவர் விதித்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்? இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment