நாமக்கல் மாவட்டம் சின்ன முதலைப்பட்டியில், பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் மிகுந்த கண்டனத்திற்குரியது என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (ஜனவரி 03) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம் சின்ன முதலைப்பட்டியில், பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் மிகுந்த கண்டனத்திற்குரியது. திமுக அரசின் மெத்தனப்போக்கால் பச்சிளம் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் சிறுவன் ரோகித்தின் பெற்றோருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சி முடிய மூன்று மாத காலம் மட்டுமே இருக்கும் வேளையில், கணக்கு காட்ட அவசரகதியில் செய்யும் வேலைகளிலும் அலட்சியம் காட்டி, உருப்படியாகச் செய்யாமல், வாழ வேண்டிய பச்சிளம் பிள்ளைகளின் உயிரைக் காவு வாங்குவது தான் ‘‘நாடு போற்றும்’’ நல்லாட்சியா முதல்வர் ஸ்டாலின் அவர்களே?
தனது அலட்சியப்போக்கால் கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது போதாதென்று, ஆட்சி முடியும் தருவாயில் குழந்தைகளின் உயிரையும் பறிக்கும் அரக்கனாக மாறிவரும் திமுக அரசை மீண்டுமொருமுறை அரியணை ஏற இனி என்றும் தமிழக மக்கள் விடமாட்டார்கள்! இது நிச்சயம்! இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.




