விவசாயிகள் மின்சாரம் தாக்கி இறந்துபோனால் மூன்று லட்சம் கொடுகிறார்கள். ஆனால் சாராயம் குடித்துவிட்டு செத்தால் 10 லட்சம் கொடுக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என உடுமலையில் நடைபெற்ற ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’ பிரச்சாரத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’ 14வது நாள் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அவருக்கு பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உற்சாகர வேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:
இந்தியாவின் பருத்தி பின்னலாடைக்கு 90 சதவீதம் ஏற்றுமதி செய்யக்கூடிய ஊர் நமது மாவட்டம். ஒரு பக்கம் பின்னலாடையின் தலைநகர் இப்போது என்ன தெரியுமா? எங்கு பார்த்தாலும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நிரம்பியிருக்கு.
கஞ்சா போதையில் மாணவர் அரசுப்பள்ளி ஆசிரியரையே வெட்டும் சம்பவம் நமது பகுதியிலே நடந்திருக்கிறது. அதே மாதிரி மூன்று பேர் பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். வனத்துறையில் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச்செல்கிறார்கள். திரும்பவும் அந்த நபர் வரும்போது பிணமாக கொண்டு வருகின்றனர். இதுதான் திமுகவின் ஆட்சி. அது பேரு திராவிட மாடல் ஆட்சி.
அவங்க செல்லமாக சொல்வது விடியல் அரசு தருகிறோம் என்று, ஆனால் தற்போது மக்களுக்கு விடியாத அரசாக உள்ளது. இதே மாதிரி சிவகங்கையில் லாக்கப் மரணம். இதுவரையில் 31 லாக்கப் மரணங்கள் நடைபெற்றுள்ளது.
குடிபோதையில் சண்டை போட்டதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தடுக்கப்போன போலீசாரை வெட்டுகின்ற சம்பவம் இதே ஊரில் அரங்கேறியுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.
தலைமுறை, தலைமுறையாக போராடிய ஆனைமலை நல்லாறு திட்டம் இன்னும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது கேரள மாநிலத்திடம் பேசி ஆனைமலை நல்லாறு திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். தற்போது 5 ஆண்டுகள் முடியப்போகிறது திமுக அரசாங்கம் இதுவரையில் அத்திட்டத்திற்கு ஒரு துரும்புக்கூட போடவில்லை. ஆனால் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி வரும்போது ஆனைமலை, நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்.
இன்றைக்கு காலையில் அன்னூர், சோமனூர், செஞ்சேரிமலை போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தோம். அங்கு விவசாயிகள் ரொம்ப வருத்தப்பட்டார்கள். தென்னை மரங்கள் நிறைய இருக்கிறது. வாடல் நோய் வருகிறது என்று கூறியதற்கு திமுக அமைச்சர்கள் யாரும் செவி சாய்க்கவில்லை.
தமிழகத்தில் முதன் முதலில் தோன்றிய ஆலை அமராவதி சர்க்கரை ஆலை. இன்றைக்கு பராமரிப்பு இல்லை. கரும்பு விவசாயிகளுக்கு பணம் கொடுக்க மறுக்கிறார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. தற்போது ஒரு மோசமான ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கொங்கு மண்டலத்தில் நீர் ஆதாரத்தை வலுப்படுத்த பவானி நொய்யல் ஆறு இணைப்போம் என்று சொன்னார்கள் ஆனால் இதுரையில் இணைக்கவில்லை. திருப்பூர் மாவட்ட கைத்தரி நெசவாளர்களுக்கு கூட்டுறவு வங்கி அமைப்போம் என்று சொன்னார்கள். இதுவரையில் அமைக்கவில்லை.
நெசவாளர்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி தருவோம் என்றார்கள், ஆனால் இதுவரையில் செய்யவில்லை. காங்கேயம் காளைக்கு சிலை வைப்போம் என்று சொன்னார்கள், ஆனால் இதுவரையில் இல்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் சிலை வைப்போம் என்று சொன்னார்கள். அதிலும் படுதோல்வி அடைந்துவிட்டார்கள்.
திருப்பூரில் ஆடைகளின் முன்னேற்றத்திற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் வங்கதேசத்தில் இருந்து தரைவழியாக ஆடை இறக்குமதிக்கு தடை விதித்ததன் மூலம் 5 ஆண்டுகளுக்கு பிறகு 30 ஆயிரம் கோடி ரூபாய் விற்பனை அதிகமாகியுள்ளது.
அதில் 5 சதவீதம் பருத்திக்கும் 11 சதவீதம் இறக்குமதி நீக்கி பருத்தி, பட்டு, கம்பளிகள் ஆகியவற்றிற்கு 15 சதவீதம் விலை மானியம் வழங்கப்படும். ஆனால் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதால் நெசவாளர்களுக்கு மிகப்பெரிய சுமை ஏறியது. இதனை சரிசெய்ய ஜிஎஸ்டியில் வரியை குறைத்தது மத்திய அரசு என்பதை நாம் மறந்துவிட முடியாது.
தேங்காய் விவசாயத்திற்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை திட்டத்தில் ஏற்றுமதி அதிகமாகி இன்றைக்கு தேங்காய் விலை கூடியிருக்கிறது. திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை வந்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கஞ்சா, போதைப்பொருள் அதிகரித்துவிட்டது. பல்லடத்தில் மூன்றுபேரை வெட்டிக்கொள்கிறார்கள். உடுமலையில் பலர் தங்களது தோட்டங்களில் தங்குவார்கள். ஆனால் அங்கே தினசரி படுகொலை நடைபெறுவதால் தோட்டத்தில் தங்குவதற்கே பயப்படுகிறார்கள். இதற்கு காரணம் திமுக ஆட்சி.
விவசாயிகள் மின்சாரம் தாக்கி இறந்துபோனால் மூன்று லட்சம் கொடுகிறார்கள். ஆனால் சாராயம் குடித்துவிட்டு செத்தால் 10 லட்சம் கொடுக்கிறார்கள். இது என்ன ஆட்சி என்றே தெரியவில்லை. மக்கள் மீது அக்கறை இல்லை. நல்லாட்சி நடைபெற வேண்டும் என்று சொன்னால் அதிமுக தலைமையிலான ஆட்சி நடைபெற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வரவேண்டும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: கரும்பின் இனிக்கும் சுவையைப் போன்ற உள்ளம் கொண்ட உடுமலைப்பேட்டை மக்கள் மத்தியிலே ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’, 14ம் நாள் இன்று.
சாலைப் போக்குவரத்து வசதிகள் பெரிதும் இல்லாத காலத்திலேயே பக்கத்திலிருக்கும் பெரு நகரமாம் கோயம்புத்தூரை சென்றடைய பேருந்து வசதிகளை பெற்ற சிறப்பு மிக்க ஊர் இந்த உடுமலைப்பேட்டை!
கரும்பு, திணை, தேங்காய், நெல், சோளம், பருத்தி மகசூலை மையமாக கொண்டு தங்களது தேவைகளுடன் அண்டை மாநிலங்கள், மாவட்டங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து வருவது இந்த விவசாயம் சார்ந்த பூமி.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், அவர்களின் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டிருக்கும் நமது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழிவகை செய்து கொடுத்த பொது மக்கள் பயன்பெறும் திட்டங்களில் ஒன்றான ‘‘ஃபசல் பீமா யோஜனா’’ திட்டத்தின் பயணாளிகள் பலரை கொண்டுள்ளது இந்த உடுமலைப்பேட்டை
தனக்காகவும், தங்களது குடும்பத்தினருக்காகவும், தன்னை சார்ந்தவர்களுக்காகவும் சுயநல ஆட்சி நடத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு பாடம் புகட்டி, நாள்தோறும் நாட்டின் வளர்ச்சி நாட்டு மக்களின் வளர்ச்சியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி, அயராது உழைத்து வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழியிலே தமிழகத்திலும் நல்லாட்சி மலரும் நாட்கள் நெருங்கி கொண்டே வருகிறது என்பதுவே திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உடுமலைப்பேட்டையிலிருந்து உறுதிபட சொல்லப்படும் செய்தி.
இன்றைய கூட்டத்தில், தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச் செயலாளர்கள் ஏ.பி.முருகானந்தம், கருப்பு முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் மோகன பிரியா, கே.எஸ். ராதாகிருஷ்ணன், அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அவர்கள், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இராதாகிருஷ்ணன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் செயலாளர் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகேந்திரன், பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆனந்தன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தொண்டர்கள் உடன் இருந்தனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

