மத்திய பிரதேச மாநிலத்தில் 22 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்ததற்கு காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்து தரமின்றி தயாரிக்கப்பட்டவை எனக் தெரியவந்துள்ளது. இதுப்பற்றி ஒரு செய்தித் தொகுப்பை பார்ப்போம்.
செப்டம்பர் 7 ஆம் தேதி மத்திய பிரதேசம் மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கும் அளவிற்கான மிகக் துயர சம்பவம் அரங்கேறத் தொடங்கியது. அடுத்தடுத்து குழந்தைகள் உடல்நலக்குறைவால் உயிரிழக்கத் தொடங்கினர். 6 குழந்தைகள் உயிரிழப்புக்கு பின் நடைபெற்ற தீவிர விசாரணையில் அவர்கள் அருந்திய கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்து தான் காரணம் என்பது தெரியவந்தது. உயிரிழந்த குழந்தைகள் பலருக்கு கிட்னி பாதிப்பு உள்ளானது தெரியவந்தது.
இருமல் மருந்தை மாநிலம் முழுவதும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டாலும் குழந்தைகளின் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதுவரை 22 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் நிலையில் அந்த இருமல் மருந்து தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் தான் தயாரிக்கப்பட்டது என்ற அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வெளியானது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்திருக்கும் ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல்ஸ் எனும் நிறுவனத்தில் தான் 20க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்து தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
அந்த நிறுவனத்தில் காற்று வடிகட்டிகள் மற்றும் கற்றோற்ற அமைப்புகள் வேலை செய்யாத நிலையில் இயந்திரங்களும் துருப்பிடித்த நிலையில் காட்சியளிக்கின்றன. மருந்து கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்திருக்கும் அறிக்கையின் படி இந்த நிறுவனத்தில் தர உத்தரவாதப் பிரிவு எதுவும் இல்லை என்பதோடு, மருந்துப் பரிசோதனை, தொகுதி வெளியீடு அல்லது திரும்பப் பெறுதல் போன்ற எந்த நடைமுறையும் பின்பறப்படவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.
சட்டப்படி குறிப்பிட்ட நிறுவனத்திற்கு உரிமம் வழங்கும் போது சம்பந்தப்பட்ட மாநில அரசிற்கே பொறுப்பு இருப்பதாக மத்திய பிரதேசஅரசுக் குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் அமைந்திருக்கும் நிறுவனத்தில் ஆய்வை நடத்தும் பொறுப்பு, தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கும் சான்றிதழ் வழங்கும் பொறுப்பு தமிழக அரசுக்கே இருப்பதாகவும் மத்திய பிரதேச மாநில அமைச்சர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
20 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான மருந்து நிறுவனத்தை மூட முடியாது என இரு தினங்களுக்கு முன்பாகப் பேட்டியளித்த திமுக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், விவகாரம் பெரிதான பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தற்போது மழுப்பலாக பதிலை அளிக்கிறார்.
தமிழகத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தின் தவறை கண்காணிக்கவோ, தடுத்த நிறுத்தவோ தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியமே 20 குழந்தைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லாத மத்திய பிரதேச மாநில அரசு, தங்களது காவலர்களை அனுப்பி மருந்து நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளது.
நாட்டையே உலுக்கிய பிஞ்சுகளின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பொதுவாகவே தமிழக சுகாதாரத்துறையின் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை இதுபோன்ற தனியார் நிறுவன மருந்து உற்பத்தி கிடங்குகளை குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அந்த ஆய்வை செய்ய வேண்டிய அதிகாரிகளின் பணியிடங்களே காலியாகவே திமுக அரசு வைத்துள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என அவலநிலையில் காட்சியளிக்கும் தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியத்தை மத்திய பிரதேச சம்பவம் மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுபடுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தவோ, தரச்சான்றிதழ் வழங்கவோ தவறிய தமிழக சுகாதாரத்துறையின் மீது கடும் அதிருப்தி எழுந்து வரும் நிலையில், திமுக அரசின் அலட்சியமிக்க பதில்களும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.
22 பிஞ்சுகள் இறந்த பின்பும் தனது அலட்சியத்தை நியாயமாக்கும் முயற்சியை திமுக அரசு கைவிட்டுவிட்டு உடனடியாக தமிழகம் முழுவதும் இயங்கும் மருந்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தயாரிக்கப்படும் மருந்துகளின் தரத்தை பரிசோதிக்க வேண்டும். மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் கோரிக்கையாக உள்ளது.