---Advertisement---

இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

On: October 13, 2025 5:59 AM
Follow Us:
---Advertisement---

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் மருந்து நிறுவன உரிமையாளர் மற்றும் மருந்து ஆய்வாளர் வீடுகளில் இன்று (அக்டோபர் 13) அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1- 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதேபோல, ராஜஸ்தானிலும் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற அந்த குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகள் குடித்த, ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தில், நச்சுத் தன்மை ஏற்படுத்தும், ‘டை எத்திலின் கிளைகால்’ என்ற ரசாயனம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்திருக்கும் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தான் 22க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அதன் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். ‘ஸ்ரீசன்’ நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்பது தற்போது அம்பலமாகி உள்ளது.

இந்த நிலையில், இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோடம்பாக்கம் நாகார்ஜூனா 2வது தெருவில் உள்ள மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் அபார்ட்மென்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரத்தில் இவர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் முறையாக சோதனை நடத்தாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.

அதேவேளையில், அண்ணா நகரில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு உள்ளது. சோதனையின் முடிவில் பல தகவல்கள் வெளியாகும் எனகூறப்படுகிறது.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment