பல்லவ சாம்ராஜ்யத்தின் கோட்டையாகத் திகழ்ந்த செங்கல்பட்டு, திமுக ஆட்சியில் போதையின் கூடாரமாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பாழடைந்த கோட்டையாகவும் மாறி வருகிறது என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் (அக்டோபர் 14) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. பாதாள சாக்கடை பணியை ஒழுங்காக செய்யாததால் இங்கே தெருக்களில் கழிவுநீர் தேங்கியிருக்கிறது. நீர்நிலைகளில் பூக்களுக்கு பதிலாக குப்பைகள் மிதக்கிறது. பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மூன்று அப்பாவிகள் இறந்துள்ளனர். இதற்கு புட் பாயிசன்தான் காரணம் என திமுக அமைச்சர் கூறியிருந்தார்.
இதே போன்று குடிநீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்கள் மேலே திமுகவினர் பழியை சுமத்தினர். அந்த அளவிற்கு தாம்பரம் மாநகராட்சி மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 65 பேர் இறந்து போனார்கள். அதே போன்று கரூரில் 41 பேர் இறந்து போனார்கள். ஆனால் கள்ளக்குறிச்சிக்கு போகாதவர்கள் கரூருக்கு மட்டும் ஏன் போயிருந்தார்கள் என்பதுதான் எங்களுடைய கேள்வியாக இருக்கிறது.
இங்கே தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அருகில் இருந்தும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எவ்விதமான வளர்ச்சித் திட்டங்களையும் பெறாத இந்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கு எத்தனை ஆத்திரம் இருக்கும்.
தமிழகம் வளர்ச்சி அடைந்தது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எங்கே வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று தெரியுமா? பாலியல் வன்கொடுமையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதம் அதிகமாகி உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 19 சதவீதம் அதிகமாகி உள்ளது. வயதானவர்களின் கொலைகள் தமிழகத்தில் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் அதில் பல படுகொலைகள் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் எங்கு கூட்டம் நடத்தினாலும் அனுமதி கிடையாது. ஆனால் ஆளுங்கட்சியின் முதலமைச்சர் எங்கு போனாலும் அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. மருத்துவமனையை திறந்து வைப்பாங்க அங்கு மருந்து இருக்காது. ஆனால் எல்லாவற்றையும் சுத்தமாக்குவோம் என சொல்வாங்க இங்கே இவ்வளவு குப்பைத்தொட்டி போட்டு வைத்துள்ளார்கள்.
ஒரு அரசாங்கம் நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்று சொன்னால் நிச்சயமாக மத்திய அரசின் துணை இருந்தால்தான் செய்ய முடியும். மாநில அரசும், மத்திய அரசும் சேர்ந்திருந்தால் செய்ய முடியும் என்பதை உணர்ந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நமது எடப்பாடியார் அவர்களும் உணர்ந்தார்கள். தொடர்ந்து அவரது தலைமையில் ஒரு நல்லாட்சி மலர வேண்டும் திராவிட மாடல் ஆட்சி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக இந்த தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகியிருக்கிறது.
தமிழகத்தில் எந்த திட்டமும் வரல, வரல சொல்கிறார்கள். ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே நான்கு வழிச்சாலையை தந்தது மத்திய அரசு. அதே மாதிரி 571 கோடியில் 124 கி.மீட்டருக்கு திருப்பதி, திருத்தணி, சென்னை சாலை மத்திய அரசு கொடுத்திருக்கிறது.
295 கோடி ரூபாயில் 33 கிலோ மீட்டர் உள்ளடக்கிய சென்னை, தடா சாலை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 600 கோடி ரூபாய் திட்டத்தில் 30 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை எண்ணூர் துறைமுகம் இணைப்பு சாலை, அமிர்த பாரத திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை புதுப்பிக்க 22 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இன்றைக்கு மாமல்லபுரத்திற்கு சீன அதிபரை அழைத்து வந்து தமிழ்நாட்டிற்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்தவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். இன்றைக்கு மக்கள் எல்லோரும் முடிவு எடுத்து விட்டார்கள். இந்த ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் சபதம் ஏற்போம். மது மற்றும் போதைப் பொருளை பரப்பும் திமுகவிற்கும் முடிவு கட்டும் ஆட்சியாக தேசிய ஜனநாயக கூட்டணி வரவேண்டும் என்று அன்போடு உங்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
வாக்களித்து வாய்ப்பளித்த மக்களை அடக்குமுறைகளால் வாயடைக்டைக்கச் செய்துள்ள ஆணவ திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் குரோதம், கோரம், வன்மம், அவலம் என துன்பப்பட்டு, துயரப்பட்டு, வேதனைப்பட்டு, சோகப்பட்டு நிற்கும் மக்களுக்கு நல்ல மாற்றம் உண்டு; அதற்கான காலம் இனி தான் உண்டு.
‘நல்லாட்சி நாயகர்’. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் துணையோடு என்பதை எடுத்துச் சொல்ல ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’ மூன்றாம் நாளின் இடம் இன்று செங்கல்பட்டு, இந்த காலத்திற்கு மட்டுமல்ல, எந்த காலத்திற்கும் பொருந்தும் படி சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் வாக்கின்படி ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’ என்பதையும், நம்பி வந்தால் நன்மை உண்டு என்பதற்கு உதாரணமாக விளங்கும் ‘வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்’, சுதந்திர வேட்கை துவங்கிய போதே 1857லியே புரட்சியாளர்கள் சுல்தான் பக்ஷ், அருணகிரி, கிருஷ்ணா போன்றவர்களை சுமந்த மண் இந்த செங்கல்பட்டு. தொட்டது துலங்க வைக்கும், கேட்டதை கொடுக்கும் ஈச்சங்கரணை அருள்மிகு. பைரவரை வணங்கி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மக்களோடு மக்களாய்.
இன்றைய கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், தமிழ்நாடு பாஜக மாநில பிரிவு அமைப்பாளர் கே.டி.ராகவன், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரவீன் குமார், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ரகுராம், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சித்தாலப்பாக்கம் ராஜேந்திரன், ஆஇஅதிமுக முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா உள்ளிட்டோர், கலந்துகொண்டு பேசினர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.