அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியை அவரது இல்லத்தில் (ஜூலை 15) பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் சந்தித்தார். அப்போது அவரை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து அங்கு குழுமியிருந்த பாஜக மற்றும் அதிமுகவினரிடையே கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் நகரத்தில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். மக்களுக்கான போராட்டங்களில் இரு கட்சி தொண்டர்களும் இணைந்து பங்கேற்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் இருகட்சி தொண்டர்களும் இணைந்து பூத் கமிட்டிகளை அமைத்து களப்பணியாற்ற வேண்டும்.
அதிமுக பாஜக போன்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும்போது தமிழகம் வளர்ச்சியடையும். வரும் பேரவைத் தேர்தலில் திமுகவை தோற்கடித்து, அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும். இவ்வாறு கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கவியரசு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் நாராயணன், தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணன், அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், பாஜக மண்டல் தலைவர்கள் சக்திவேல், குமார், சாமிநாதன், விமலா, பழனி, சுகந்தி மற்றும் பாஜக, அதிமுக தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.