தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணனை ஆதரித்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். ஆறுமுகநேரியில் பரப்புரை மேற்கொண்டபோது பேசிய அவர், ஊழலில் ஊறிப்போன ஒரே ஒரு குடும்பம் வாழ்வதற்காக, ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சியை முடக்கி மக்களை அவதிக்குள்ளாக்கிய தீயசக்தி திமுகவின் காட்டாட்சிக்கு முடிவுகட்ட வேண்டும், தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்பதையே கடமையென கொண்டு தேர்தல் களத்தில் மக்கள் ஆதரவுடன் பயணித்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் அடையாளமே ஊழல் தான். வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. தற்போது வாக்கு சேகரிக்க செல்லும் அவரது சொந்த தொகுதியிலேயே மெய்ஞானபுரம் பகுதியில் மக்கள் அவரை விரட்டியடித்ததை நாம் பார்த்தோம். திமுகவின் ஊழல் பேர்வழிகளை மக்கள் இனியும் ஏற்கப்போவதில்லை என்பதற்கு அதுவே சாட்சி.
திருச்செந்தூர் பகுதியில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் 2வது ஏவுதளத்தை மத்திய பாஜக அரசு அமைக்கிறது. இதனால் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், முருகனின் படைவீடான திருச்செந்தூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய கோயில்களிலும் உள்ளூர் மக்கள் வழிபாடு செய்வதற்கென்றே தினமும் 2 மணிநேரம் ஒதுக்கப்படும் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி.

2019 ஆம் ஆண்டு மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கியவர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். மீனவர்கள் நலன் காக்க மத்ஸ்ய சம்பதா திட்டத்தை செயல்படுத்தி அதன் கீழ் தமிழகத்திற்கு மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1,241 கோடி நிதி வழங்கியிருக்கிறார்கள். மீனவர்கள் படகு வாங்க மானியம் வழங்குவது முதல் அவர்களுக்கு அனைத்து வழிகளிலும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கிறது.
அராஜக அரசியலையும், அடாவடி அரசியலையும் கடந்த 5 ஆண்டுகளாக செய்துவிட்டு, தேர்தலில் மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் கனவை திருச்செந்தூர் மக்கள் சிதைக்கப்போவது உறுதி. திமுகவின் ஊழல்வாதிகளை விரட்டியடிக்கவும், திருச்செந்தூர் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறவும், பாஜகவின் வெற்றி வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் அவர்களை திருச்செந்தூர் மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கட்டும்! திருச்செந்தூருக்கு திருப்பம் அமையட்டும்! இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.



