ஞானசுந்தரம் ஐயா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தமிழ் கலாச்சாரத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும் தமது முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அறிஞர் ஞானசுந்தரம் மறைவுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; திரு. தெ. ஞானசுந்தரம் ஐயா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தமிழ் கலாச்சாரத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும் தமது முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர். இறை நூல்கள் முதல் இலக்கிய நூல்கள் வரை தமது ஆழ்ந்த அறிவாற்றலாலும் எழுத்தாற்றலாலும் சமூகத்தின் பண்பாட்டு உணர்வை வளப்படுத்தியவர்.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி, தமிழை உலகளாவிய அளவில் அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பரப்பிய அவரது சேவை என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது படைப்புகள் வருங்காலத் தலைமுறை வாசகர்களுக்கும் அறிஞர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
அன்னாரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது குடும்பத்தாருக்கும், மாணவர்களுக்கும், அவரை மதித்து நேசித்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி. இவ்வாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.







