
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ₹4.5 லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடனை அடைப்போம் என்று சூளுரை எடுத்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கரை வருடங்கள் ஆகி தமிழக அரசின் நிலுவையிலுள்ள கடன் இந்த நிதியாண்டு இறுதியில் ₹9.5 லட்சம் கோடியாக உயர்த்தியதே ஆட்சியின் சாதனை. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் (TANGEDCO) விதிவிலக்கல்ல, 2021-ல் TANGEDCO-வின் நிலுவையிலுள்ள கடன் ₹1.24 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2021-ல் இருந்து பலமுறை மின் கட்டணத்தை உயர்த்தியும், TANGEDCO-வின் கடன் குறையவில்லை என்பதால், 2024-ஆம் தமிழக அரசு TANGEDCO-வை நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரித்தது.
கடந்த டிசம்பர் 2025-ல், மக்களவையில் மத்திய அரசு கொடுத்த தகவலின் அடிப்படையில் 2024-25 நிதியாண்டு வரை TANGEDCO-வின் மொத்த கடன் ₹1,88,411 கோடி, ஆனால் மின் பகிர்மான கழகத்தை அரசு பிரித்து TNPDCL என பெயர் மாற்றியமைக்கப்பட்டு இதன் நிலுவையிலுள்ள கடன், தற்போது ₹1,01,782 கோடி ஆக, முதலிடம் வகிக்கிறது. இதை உறுதி செய்யும் வகையில் மத்திய மின் அமைச்சம் வெளியிட்ட அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, நாட்டிலுள்ள மொத்த மின் பகிர்மான கழகங்களின் நிலுவையிலுள்ள கடன் ₹8.05 லட்சம் கோடி ஆனால், இதில் ஏறக்குறைய 8ல் 1 பங்கு தமிழகத்தின் அரசினுடைய TANGEDCO ஆகும்.

இந்தியாவிலுள்ள மற்ற மின் பகிர்மான விநியோக நிறுவனங்கள் பல மடங்கு லாபம் ஈட்டிவரும் நிலையில், குறிப்பாக பஞ்சாப் மாநில அரசின் பகிர்மான கழகம் நிதியாண்டு 2025-ல் 677% லாபத்தை ஈட்டியுள்ளது, அதுமட்டுமல்லாமல் எல்லா தனியார் நிறுவனங்களும் இதில் லாபம் பார்த்துக் கொண்டு வரும் சூழலில், தொடர்ந்து தமிழகத்தின் TANGEDCO கடனில் மூழ்கி சிக்கித்தவித்து வருவது அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.
மின் கட்டணத்தை விண்ணை முட்டும் அளவிற்கு திமுக அரசு உயர்த்தியும் கடன் குறையாததற்கு முக்கிய காரணம், தலைவிரித்தாடும் அத்துறையில் ஊழல். திமுக ஆட்சி பொறுப்பேற்று மின் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் கீழ் மின்மாற்றிகளை வாங்கியதில் ₹397 கோடி அளவிற்கான ஊழல் நடந்துள்ளது, ஆனால் இதுவரை இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. திராவிட மாடல் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் திமுக அரசு, இதற்கும் சேர்த்து பொறுப்பேற்குமா? என்ற கேள்வியை பலர் முன்வைத்து வருகின்றனர்.








