ஏரி காத்த ராமன் இடத்தில் தமிழனை காக்க, தமிழனை மீட்கப் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தேசிய கூட்டணியை உருவாக்கி இங்கு வருகை தந்திருக்கிறார் என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் (ஜனவரி 23) தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனார்.
இதில் மேடையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தொண்டர்களைப் பார்த்து நான் சொல்லும் கோஷத்தைத் திருப்பிச் சொல்லுங்கள் எனச் சொல்லிப் பேச ஆரம்பித்தார். முதலில் ‘‘வெல்லும் கூட்டணி.. என்டிஏ கூட்டணி..’’, ‘‘மோடி எடப்பாடி கூட்டணி தமிழனைக் காக்கும் கூட்டணி, தமிழனை காக்கும் கூட்டணி’’ என்று சொன்னார்.
பிறகு ஹர் ஹர் மோடி, ஹமாரா மோடி, ஹமேச மோடி என்று இந்தியில் கோஷத்தை எழுப்பினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஹர் ஹர் மோடி என்ற கோஷத்தை மீண்டும் எழுப்பினர். அதைத் தொடர்ந்து ஜெய் ஸ்ரீ ராம் சொல்லி தனது உரையை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆரம்பித்தார்.

அப்போது பேசிய அவர், ‘‘ஏரி காத்த ராமன் இடத்தில் தமிழனை காக்க, தமிழனை மீட்கப் பிரதமர் மோடி இந்தத் தேசிய கூட்டணியை உருவாக்கி இங்கு வருகை தந்திருக்கிறார். இது பொதுக்கூட்டம் அல்ல.. இது ஒரு மாநாடு.. இந்தக் கூட்டம் சென்னை சட்டமன்றத்திலே பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கேயே கூடுகிற கூட்டம் அவர்களின் ஆட்டத்தை முடிப்பதற்கான கூட்டம்’’
இந்த நேரத்தில் மனம் வீசுகின்ற மலர்கள் பல இருக்கும் ஒரு மாலை போல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினுடைய தலைவர்களாக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இதற்கு வானமே வாழ்த்திக் கொண்டிருக்கிறது. சூரியன் எங்குமே இல்லை.. சூரியன் மறைந்து போனது.. மோடி சென்னைக்கு வருகிறார்கள் என்றதும் சூரியன் மறைந்து போனது. தேசிய ஜனநாயகக் கூட்டம் இங்கே நடைபெறுகிறது.. சூரியன் இல்லாமல் போய்விட்டது.
அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம்.. நிச்சயமாக ஆட்சி மாற்றம் உறுதி! அதற்கான வேலைகளைப் பிரதமர் நரேந்திர மோடியும் எடப்பாடி பழனிசாமியும் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றிலிருந்து அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து தேசிய ஜனநாயக ஆட்சி மலர வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை.. சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொல்கிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் முடிவு கட்டும் நாள் வந்துவிட்டது. உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் நோக்கம்.. மக்களுக்கு மீது எந்தவொரு அக்கறையும் இல்லை.. மக்கள் மீது அக்கரை கொண்ட தலைவர் நரேந்திர மோடி! அவர் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்குத் தந்திருக்கிறார்.. 11 வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்திற்குத் தந்திருக்கிறார்கள். இந்த 11 ஆண்டுகளில் 14 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்குத் தந்த தலைவர் நரேந்திர மோடி. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
இன்றைய தினம் மதுராந்தகத்தில் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு மக்களின் உற்சாக வரவேற்புடனும் பேராதரவுடனும் வெற்றிகரமாக நடைபெற்றது.
வெற்று விளம்பரங்களை மட்டுமே நம்பி ஆட்சியை நடத்திக் கொண்டு புனித மண்ணாகவும் இருந்த தமிழ்நாட்டை கஞ்சா மன்னாகவும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொலை நகரமாகவும் மாற்றி இருக்கும் இந்த விடியா திமுக ஆட்சிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் முடிவுரை எழுவதற்கான முன்னுரை இன்று வெற்றிகரமாக தொடங்கிவிட்டது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இந்த நிகழ்வில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்கள், மத்திய அரசாங்கத்தில் கூட்டுறவு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் அவர்கள், தேசியச் செயலாளர் மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அவர்கள், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவர்கள், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள், பாஜக முன்னாள் மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை அவர்கள், அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் முன்னாள் எம்.பி., அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அவர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் அவர்கள், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அவர்கள், தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கே.சி.திருமாறன் ஜி அவர்கள், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜகன் மூர்த்தி அவர்கள், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து அவர்கள் மற்றும் ஜனதா தளம் செக்யூலர் கட்சியின் தலைவர் காலப்பட்டி பொன்னுச்சாமி அவர்கள், புரட்சித்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபால் அவர்கள் மற்றும் நம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சார்ந்த தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த பிரம்மாண்ட தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டை வெற்றிகரமாகவும் உற்சாகத்துடனும் நடத்த உதவிய தோழமைக் கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் அனைத்து தோழமைக் கட்சியின் தொண்டர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.





