திமுகவிற்கு செல்லக்கூடிய ஒவ்வொரு வாக்கும் கூட ஒரு தீய சக்தியை இன்னும் தீய சக்தியாக மாற்றுவதற்கான வாக்கு. ஒரு வாக்கை கூட நாம் போடப்போறதில்லை. பொதுமக்களையும் போடவிடக்கூடாது என்று தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் (ஜனவரி 23) நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தொண்டர்கள், தலைவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் குழுமி ஒரு பெரிய மாற்றத்திற்கான விதையை எல்லோரும் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான ஒரு அற்புதமான கூட்டம். இயற்கையுடன் சாட்சியாக இங்கே நடந்துக்கொண்டிருக்கிறது. நேற்று வரை கடுமையான சூரிய வெளிச்சம், ஆனால் இன்று ஒரு பக்கம் சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு தெரியும் சூரியன் மறையும்போது மழை வரப்போகிறது. மழை வந்தால் தாமரை மலரும், மழை வந்தால் இரட்டை இலை மலரும் என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும் அன்பு சொந்தங்களே. இயற்கையுடன் சாட்சியாக நம் கண் முன்னால் நடந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம்.
எல்லோருக்குமே ஆச்சரியம். நேற்றுவரை கொளுத்தின வெயில் இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கும்பொழுது எப்படி இந்த பருவநிலை மாறியிருக்கிறது.
பருவநிலைக்கூட மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. வருண பகவான் கூட தமிழ்நாட்டு மக்கள் இந்த நான்கரை ஆண்டுகளில் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள், எந்த அளவிற்கு கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று இயற்கைக்கும் தெரியும்.
அருமை சொந்தங்களே நமக்கு இன்னும் 60 நாட்கள்தான் பாக்கி இருக்கிறது. முதல் கூட்டமாக பிரமாண்டமான பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.
நம்முடைய தலைவர்கள் எல்லாம் வந்துக்கொண்டிருக்கிறார்கள். நான் பேச ஆரம்பிக்கும்போது நமது தலைவர்கள் எல்லாம் பேசி கொண்டிருக்கும் பொழுது பா£ரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஹெலிகாப்டர் கூட தரையிறங்கி உள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து வருகிறார். திருவனந்தபுரத்தில் பாஜக மேயர் அங்கு முதன் முதலாக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற கூட்டத்தில் மேயருடன் உரையாடிவிட்டு இங்கே பிரதமர் வந்திருக்கிறார். இதுவும் ஒரு சாதாரண கூட்டம் இல்லை. தமிழகத்தில் ஏப்ரல் 2026க்கு பிறகு நமது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்பதற்காக நடக்கக்கூடிய முதல் கூட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காக எல்லா தலைவர்களும் இங்கு ஒற்றை இலக்கோடு நின்றுக்கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நமது அன்புச்சொந்தங்கள் தாய்மார்கள், பெரியவர்கள், குழந்தைகள் உட்பட எல்லோரும் கூட எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது ஏப்ரல் வரும், எப்பொழுது தேர்தல் தேதி வரும், எப்பொழுது இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பலாம் என மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நான் படிக்கிற காலத்தில் செய்தித்தாளை பார்த்தேன் என்றால் 80 சதவீதம் நல்ல செய்தியாக இருக்கும். 20 சதவீதம் கெட்ட செய்தியாக இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்த 2021 மே மாதத்திற்கு பிறகு ஒரு செய்தித்தாளை திறந்து பார்த்தோம் ஆனால் குற்றம், கொலைகள், கற்பழிப்பு, ஆணவப்படுகொலை, ஊழல் இருக்கும். திமுக அமைச்சர்கள் பொதுமக்களை எந்த அளவிற்கு இழிவவாக நடத்துகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.
நான்கரை ஆண்டுகளாக இந்த ஆட்சியை பார்த்து, பார்த்து அவர்கள் செய்வதை பார்த்து நமக்கே ஒரு நெகட்டிவெட் வருகிறது. அது எல்லாம் மாற வேண்டும். ஒரு சாதாரண மனிதனுக்கு தன்னுடைய வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கை வரவேண்டும். இதற்கு ஆட்சி மாற்றம் தேவை. எனவே திமுகவை அகற்ற வேண்டும்.
இன்றைக்கு மிக அருமையாக, ஒற்றுமையாக எல்லா தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
திமுகவிற்கு செல்லக்கூடிய ஒவ்வொரு வாக்கும் கூட ஒரு தீய சக்தியை இன்னும் தீய சக்தியாக மாற்றுவதற்கான வாக்கு. ஒரு வாக்கை கூட நாம் போடப்போறதில்லை. பொதுமக்களையும் போடவிடக்கூடாது.
வீடு, வீடாக செல்ல வேண்டும். பொதுமக்களிடம் பேச வேண்டும். அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நம்முடைய முதலமைச்சர் வேட்பாளராக நம்முன்னாடி வருவார் இன்னும் சற்று நேரத்தில் நம்முடன் பேசுவார். 234 தொகுதிகளிலும் போட்டியிடும் நமது வேட்பாளர்களுக்கு நாம் நமது சக்தியை அளிக்க வேண்டும். இதை எல்லாம் தொண்டர்களாக செய்யும் போது இக்கூட்டத்திற்கு ஒரு மகிமை, இக்கூட்டத்திற்கு ஒரு மகத்துவம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
2026 ஆம் ஆண்டில் முதல்முறையாக, இன்றைய தினம், தமிழகத்திற்கு வருகை தந்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அருள்மிகு ஏரி காத்த ராமர் அருள்பாலிக்கும் புனித மண்ணான மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றினார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூர்ந்த பிரதமர் அவர்கள், தமிழக மக்களின் நல்வாழ்வு, செழிப்பிற்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டார்.
தமிழகம் மாற்றத்திற்கு தயாராகிவிட்டது என்று கூறிய நமது பேரன்பிற்குரிய பிரதமர் அவர்கள், பெருமளவில் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது ஒரு செய்தியை உணர்த்துகிறது, தமிழகத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வேண்டும். திமுக அரசின் கவுண்ட்டவுன் துவங்கிவிட்டது என்றார்.
தமிழகத்தில் மக்களாட்சி என்பதை, திமுக அரசு “CMC ஆட்சி”யாக, அதாவது, Corruption, Mafia, Crime ஆட்சியாக மாற்றியிருப்பதை அம்பலப்படுத்திய மாண்புமிகு பிரதமர் அவர்கள், ஜனநாயகம் இல்லாத, பொறுப்பற்ற அரசு, ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினார்.
மேலும், திமுகவில் வளரவேண்டும் என்றால், குடும்ப அரசியல், ஊழல், பெண்களை இழிவுபடுத்துவது மற்றும் நமது கலாச்சாரத்தை இழிவுபடுத்துவது உள்ளிட்ட நான்கு வழிகள் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், இதனால், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ‘டபுள் இன்ஜின்’ அரசாங்கம் அமையவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றும் கூறினார்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், தமிழக வளர்ச்சி குறித்த உண்மைகளை விரிவாக பட்டியலிட்டார். திமுக-காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தமிழகம் புறக்கணிக்கப்பட்டது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் தமிழகத்திற்கு நிதி பகிர்வாக மட்டும் ₹3 லட்சம் கோடிக்கு மேல் வழங்கியிருப்பதாக தெரிவித்த பிரதமர் அவர்கள், யுபிஏ ஆட்சியை விட 3 மடங்கு அதிக நிதி, ரயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி உட்பட மொத்தம் ₹11 லட்சம் கோடிக்கு மேல் தமிழகத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், இதுவரை ₹12,700 கோடி நமது தமிழக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட மாண்புமிகு பிரதமர் அவர்கள், நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் 50,000 மீனவர்களுக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் சொந்தக்காலில் நின்று தொழில் துவங்க, முத்ரா திட்டத்தின் கீழ், ₹3 லட்சம் கோடிக்கும் மேல் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதை பிரதமர் குறிப்பிட்டார்.
அதே சமயம், தமிழக இளைஞர்களை திமுக அரசு போதை கும்பலின் கைகளில் ஒப்படைத்து இருப்பதாக கவலையுடன் தெரிவித்த மாண்புமிகு பிரதமர் அவர்கள், என்டிஏ கூட்டணிக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும், திமுகவால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் போதை கும்பலுக்கு அடிக்கும் எச்சரிக்கை மணியாக இருக்கும் என குறிப்பிட்டார். மேலும், மக்களின் ஒவ்வொரு வாக்கும் நமது தமிழகத்தின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என கூறினார்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசு தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்திய போது, என்டிஏ கூட்டணி தான் மக்கள் பக்கம் நின்று உறுதியோடு குரல் கொடுத்ததை மாண்புமிகு பிரதமர் அவர்கள் நினைவு கூர்ந்தார்.
திமுக – காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் தமிழகத்தில் பாரம்பரிய அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்த மாண்புமிகு பிரதமர் அவர்கள், தமிழ் சமூகத்தின் அடையாளத்தை காக்கவும், மக்கள் கொண்டாடும் கலாச்சார பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியை என்டிஏ அரசுதான் தொய்வின்றி தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு மீட்டெடுத்தது என்பதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.








