கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடியை விடுவித்தார்.
மத்திய அரசின் சார்பில் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கௌரவிப்பு நிதி திட்டத்தின் கீழ் (பிஎம் – கிஸான்) ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவித் தொகை விடுவிக்கும் நிகழ்வு, தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர்கள் கூட்டுக் குழு சார்பில் 3 நாள் இயற்கை விவசாயிகள் மாநாட்டு தொடக்க விழா ஆகியவை கோவை கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் (நவம்பர் 19) நடந்தது. இந்நிகழ்ச்சியை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று கோவை வந்தார்.
அவருக்கு வழிநெடுக பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார். மேலும், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், 21-வது தவணையாக நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.18 ஆயிரம் கோடியை விடுவித்தார். தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் சிறப்பாக பணியாற்றிய 7 விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: எனக்கு வரவேற்பு கொடுக்கும் போது, விவசாயிகள் தங்களது மேல் துண்டை சுழற்றினர். அதைப் பார்த்த போது பிஹாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் அளவளாவியது. கோவை என்பது கலாச்சாரம், கனிவு ஆகியவற்றை சொந்த மாக்கிக் கொண்ட பூமி. தென் இந்தியாவின் தொழில் முனைவோர் ஆற்றலின் சக்தி பீடம். இங்கு இருக்கும் ஜவுளித் துறை தேசத்தின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு அளிக்கிறது. இங்கு எம்.பி. ஆக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகி அனைவருக்கும் வழிகாட்டி வருகிறார்.
இயற்கை விவசாயம் மிகவும் சிறப்பானது. இந்த மாநாட்டில் உள்ள அரங்குகளை பார்த்தேன். ஒருவர் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு விவசாயத்துக்கு வந்திருக்கிறார். ஒருவர் இஸ்ரோவை விட்டுவிட்டு வேளாண் தொழிலுக்கு வந்துள்ளார். இந்த வேளையில் தமிழ்நாட்டின் வேளாண் பெருமக்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களை உங்களது துணிச்சலுக்காக காணிக்கையாக்குகிறேன்.
நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.18 ஆயிரம் கோடி இங்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கூட பல லட்சம் விவசாயிகளின் வங்கிகணக்கில் பிரதம மந்திரியின் விவசாய கௌரவ நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தில் ரூ.4 லட்சம் கோடி விவசாயிகளுக்கு நேரடியாக சேர்ந்துள்ளது. இந்த தொகை விவசாயத்துடன் தொடர்புடைய பல்வேறு பணிகளை செய்ய உதவியாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 37 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் இயற்கை வேளாண்மை நடைபெற்று வருகிறது. இயற்கை வேளாண்மை நமது நாட்டின் சுதேசி கருத்து. தென்னிந்திய விவசாயிகள் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் உள்ளிட்டவற்றை உள்வாங்கி உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இயற்கை வேளாண்மையுடன் சிறுதானியங்களையும் பயிர் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் முருக பெருமானுக்கு தேனும், திணையும் படைக்கிறோம். தமிழ்நாட்டில் கம்பும், சாமையும், கேரளாவில் ராகி, ஆந்திராவில் சஜ்ஜா ஆகியவை பல தலைமுறைகளாக நமது உணவு பழக்கத்துடன் ஒன்று கலந்தது. இந்த சிறந்த உணவானது உலகின் சந்தைகளில் சென்று சேர வேண்டும்.
கேரளா, கர்நாடகாவில் மலைப்பாங்கான பகுதிகளில் ஒரே வயலில் பாக்கு, தென்னை, பழ மரங்கள் இருக்கும். இவற்றுக்கு இடையில் ஊடு பயிராக, மசாலா பொருட்கள், மிளகு போன்றவை பயிரிடப்படுகின்றன. விவசாயத்தில் இந்த மாதிரியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தென்னிந்தியா விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் உலகின் பழமையான நீர்ப்பாசன முறை உள்ளது.
இதற்கு 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டை முன்னுதாரணமாக கூறலாம். மண்ணின் பராமரிப்பு முறை, குளங்கள், நீர்ப்பாசன திட்டங்கள் வழிகாட்டும் வகையில் அமைந்தன. இயற்கை வேளாண்மையை பாட திட்டத்தில் முக்கிய பங்காக கொண்டு வர வேண்டும்.
கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் வயல்களை உங்களின் பரிசோதனை கூடமாக மாற்ற வேண்டும். இயற்கை விவசாயத்தின் இந்த இயக்கத்தில் மாநில அரசு, விவசாயிகள், உற்பத்தியாளர்களின் பங்களிப்பு அவசியம். நமது விவசாயிகளின் பாரம்பரியமான ஞானம், அறிவியலின் பயன், அரசுகளின் அதரவு ஆகியவை இணையும் போது பலம் பெறுவார்கள். நமது பூமி தாயும் ஆரோக்கியமாக இருப்பாள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
முன்னதாக, மாநாட்டில் விவசாயிகள் சார்பில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் இடம் பெற்ற கண்காட்சியில் 17 அரங்குகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்களை பார்வையிட்டு, அதன் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இயற்கை விவசாயிகள் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கு.ராமசாமி, பி.ஆர்.பாண்டியன், வாழை கருப்பையா, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

