---Advertisement---

பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

On: November 18, 2025 8:29 AM
Follow Us:
---Advertisement---

பாலக்கோடு அருகே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளிக்கு உரிய கட்டட வசதி இல்லாததால், கோவில் வளாகம் மற்றும் தெருவில் வகுப்புகள் நடந்து வருவது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பி.செட்டிஹள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட ஜோதிஅள்ளி கிராமத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வரை, 4 வகுப்பறைகளுடன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. 2018ல் அதிமுக ஆட்சியின்போது மாணவர்களின் நலன் கருதி, நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தனித்தனியாக செயல்பட்டு வந்தது. இதில் போதுமான வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் தொடக்கப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறை என்ற நிலையில் தற்போது வரை பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தொடக்கப்பள்ளியில் 72 மாணவர்கள், உயர் நிலைப்பள்ளியில் 107 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடக்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டடம் மட்டும் உள்ளதால், மற்ற மூன்று வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளியின் எதிரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் உயர்நிலைப் பள்ளிக்கும், வகுப்பறை கட்டடம் மட்டுமே உள்ளதால் மற்ற வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் வகுப்பறை முன் உள்ள வராண்டா, பள்ளி முன்பு உள்ள தெருவில் மேஜை போடப்பட்டு அதில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து பள்ளிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பள்ளி அருகில் அரசுக்கு சொந்தமான இடம் ஏதுமில்லாததால், கிராம மக்கள் சார்பில் இடம் தேர்வு செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.

கிராம மக்கள் கடந்த 2022ஆம் ஆண்டு பள்ளிக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி பாலக்கோடு பி.டி.ஓ., பெயரில் பத்திரப்பதிவு செய்து ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு கட்டடம் கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உட்பட கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்து வந்தனர்.

ஆனால் இன்றுவரை அப்பகுதியில் கட்டடங்கள் கட்ட அனுமதி மற்றும் நிதியை விடியா திமுக அரசு ஒதுக்கவில்லை. மேலும் கோவிலில் செயல்படும் மூன்று வகுப்பறைகளுக்கும் கரும்பலகைகள் வைப்பதற்கு கூட இடமில்லாத அவலநிலை உள்ளது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் மூன்று வகுப்பறைகளும் வராண்டா மற்றும் தெருவில் மூன்று வகுப்பறை என அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.

ஊர் மக்கள் சார்பில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அரசுப்பெயரில் பத்திரப்பதிவும் செய்து கொடுத்தனர். எப்படியும் தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு இந்த அரசு புதிய கட்டடம் கட்டிக்கொடுத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் இன்றுவரை அங்கு ஒரு துரும்பைக்கூட விடியா அரசு கிள்ளிப்போடவில்லை.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று முதல்வர் ஸ்டாலின் தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொள்கிறார். ஆனால் பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை விடியா திமுக அரசு என்ன செய்தது? என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இதுபோன்ற மக்களுக்கு எதிராக செயல்படும் அவல ஆட்சியை விரட்டி அடித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

வ.தங்கவேல்

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment