‘‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்’’ என தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
சேலம் பெருங்கோட்ட பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று (ஏப்ரல் 19) ஓமலூர் முன்சீப் கந்தசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சேலம் பெருங்கோட்டத்திற்குட்பட்ட கரூர், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மாநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்டத் தலைவர்கள், மண்டல் தலைவர்கள், அணிப்பிரிவு நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில், நிகழ்ச்சிக்கு தலைவர் நயினார் நாகேந்திரன் ஓமலூருக்கு இன்று வருகை தந்தார். அவரை பாஜக மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் வரவேற்றார். இதன் பின்னர் அம்பேத்கர் சிலைக்கு தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பின்னர் தொண்டர்கள் புடைசூழ மேளதாளங்களுடன் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு தலைவர் நயினார் நாகேந்திரன் அழைத்து வரப்பட்டார்.
இந்த நிகழ்வின்போது தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வேல் பரிசாக அளிக்கப்பட்டது. சேலம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள் மற்றும் மண்டல் தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதன் பின்னர் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக கட்சியை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து சென்ற அன்பு சகோதரர் அண்ணாமலைக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
அகில இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கிறது என்று அறிந்து, அதை ஏற்று கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். தேர்தலுக்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

நமது தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் செயல்படுவதை கட்டுப்பாட்டுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் வேல் யாத்திரை மூலம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கி காட்டினார்கள். மகராஷ்டிரா மாநில மேதகு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் ரத யாத்திரை மூலம் கட்சியை தமிழ்நாடு முழுவதும் வளர்த்தார்கள். அப்படி வளர்க்கப்பட்ட கட்சியை அகில இந்திய தலைமை இன்று நமக்கு இந்த பொறுப்பை அளித்துள்ளது. தேர்தலில் நாம் நடந்து கொள்ள வேண்டிய அறிவுரைகள் வழங்கியுள்ளது. அவர்கள் வழியில் நாம் நடக்க வேண்டும்.
தலைமை சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும். கூட்டணி குறித்து ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தால், அது வேறு விதமாக போய்விடும். நமது கூட்டணி உறுதியான கூட்டணி, இறுதியான கூட்டணி. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. வெற்றி கூட்டணி.
திமுக தான் சந்தர்ப்பவாத கூட்டணியின் தலைமையாக உள்ளது. எங்களது கூட்டணி தான் நியாயமான கூட்டணி, நேர்மையான கூட்டணி, ஊழல் இல்லாத கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வருவதற்கு பாடுபட வேண்டும்.
பல தியாகங்கள் செய்த உயிர்களால் தான் பாஜக இன்று மேலே வந்துள்ளது. ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் உயிர் தியாகங்களை எல்லாம் நாம் மறந்துவிட முடியாது. அந்த தியாகங்களுக்கு நாம் பெருமை சேர்த்திட வேண்டும் என்றால், மரியாதை செய்திட வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு இன்று முதல் சபதம் ஏற்போம், நமது பூத் தை கண்காணிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தனது பூத் எது என்று அறிந்துகொள்ள வேண்டும். பூத் கமிட்டியில் இருப்பவர்கள் வேலை செய்கிறார்களா என்று பாருங்கள். பூத்தை செம்மை படுத்தினால் தான் நாம் வெற்றி அடைய முடியும்.
எத்தனை தொகுதி, எப்படி கூட்டணி என்பதை எல்லாம் நாம் சொல்ல முடியாது. அதை பற்றி அகில இந்திய தலைமை, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் சேர்ந்து முடிவு எடுப்பார்கள். எனக்கு அதிகாரம் தொண்டர்களை பாதுகாப்பது தான்.
எனது அதிகாரம் என்பது எங்களது தொண்டர்களை பாதுகாப்பது, எங்களது தொண்டர்களுக்கு காலில் அடிபட்டால், அது எனக்கு கண்ணிலே ஏற்படும் வலி போன்றது. நான் தொண்டர்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறேன். கட்சியை வளர்க்க வேண்டும், கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்பது எனது பொறுப்பு. தேர்தல் என்று வரும்போது எனக்கு மேலே இருக்கும் தலைமை, அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவே பாஜகவின் கடைசி தொண்டனின் கடமையாக இருக்கும்.
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அதிக நிதி வர வேண்டும் என்பதில் தமிழ்நாடு பாஜக உறுதியாக இருக்கிறது. இந்த நிதி மூலம் தமிழக மக்கள் பயனடைய வேண்டும்.
தேவையில்லாத, மக்களின் மனநிலையை மடைமாற்றம் செய்யும் பல தீர்மானங்களை திமுக அரசு நிறைவேற்றுகிறது.
கடந்த 50 ஆண்டுகளாக மேகதாது பிரச்சனை, தாதுமணல் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை போன்ற தீர்மானங்களை மட்டும் போட்டு தீர்வு இல்லாமால் செய்கிறது. மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு காணாமல் தவிர்க்கிறது திமுக.
கச்சத்தீவை பிரதமர் நரேந்திர மோடி ஒருவரால் தான் மீட்க முடியும். இவர்கள் வெற்று தீர்மானம் போட்டு ஒன்றும் பயன் இல்லை. இவ்வாறு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.