ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை (ஏப்ரல் 06) அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர், அவர் ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிறு (ஏப்ரல் 06) அனுராதபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, ராமேஸ்வரம் மண்டபத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் தளத்திற்கு முற்பகல் 12 மணியளவில் வந்தடைந்தார். அங்கு அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைவர் அண்ணாமலை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர், சாலை மார்க்கமாக பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி மேடைக்கு 12:45 மணியளவில் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, மதியம் 1 மணியளவில் புதிய பாம்பன் தூக்குப் பாலத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ராமேஸ்வரம் – தாம்பரம் இடையேயான ரயில் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 72 மீட்டர் உயரமுள்ள தூக்குப்பாலம் மேல்நோக்கி உயர்ந்து செல்ல கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்கள் ரயில் பாலத்தைக் கடந்து சென்றன. அப்போது, கப்பலில் இருந்த கடலோர காவல் படையினர் தேசியக்கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து அவர் ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி கார் மூலமாக சென்றபோது வழி நெடுகிலும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனையடுத்து கோவில் சென்ற பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பிரதமருக்கு மாலை அணிவித்து புனித தீர்த்தங்களை அர்ச்சகர் வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மனமுருக ராமநாதசுவாமியை வழிப்பட்டார்.

தொடர்ந்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார் பிரதமர். விழாவின் தொடக்கத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உரையாற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.8,300 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதில் வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம் –புதுச்சேரி, பூண்டியங்குப்பம் — சட்டநாதபுரம் பிரிவு, சோழபுரம் — தஞ்சாவூர் பிரிவு நான்குவழிச்சாலை திட்ட பணிகளை துவக்கி வைத்தார். மேலும் ராமேஸ்வரம் – தாம்பரம் இடையிலான ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
அரசு விழா மேடையில் ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், டாக்டர் எல்.முருகன், பாஜக சட்டமன்றக் குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் இருந்தார்கள்.
இதன்பிறகு தலைமை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம், என் அன்பு தமிழ்ச் சொந்தங்களே!! தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, மத்திய அமைச்சரவையின் என் சகாக்களான அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, டாக்டர் எல்.முருகன் அவர்களே, தமிழ்நாடு அரசின் அமைச்சர் பெருமக்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சான்றோர்களே, பெரியோர்களே, என் நெஞ்சுக்கினிய அன்பு சகோதர சகோதரிகளே! வணக்கம் என்று கூறினார்.

அப்போது விண்ணை பிளக்கும் அளவிற்கு பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்தை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து பிரதமர் தனது உரையை நிகழ்த்த தொடங்கினார். அதில்; நண்பர்களே, இன்று புனிதமான ஸ்ரீ இராமநவமி நன்னாள். சில காலம் முன்பாகத் தான், அயோத்தியிலேயே பிரமாண்டமான ராமர் ஆலயத்திலே, ராம்லலாவுடைய திருவதனத்தின் மீது சூரியனின் கதிர்கள், அற்புதமான திலகத்தைப் பொழிந்தன. பகவான் ஸ்ரீ இராமனின் வாழ்க்கை, அவருடைய ஆட்சியிலிருந்து கிடைக்கக்கூடிய நல்லாளுகை குறித்த உத்வேகம் ஆகியன, தேசத்தை நிர்மாணிப்பதில் பெரிய ஆதாரமாக இருக்கின்றன.
தமிழ்நாட்டின் சங்ககால இலக்கியத்திலும் கூட, ஸ்ரீ இராமனைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. நான் இராமேஸ்வரத்தின் இந்த பவித்திரமான பூமியிலே, நாட்டு மக்கள் அனைவருக்கும் ஸ்ரீ இராமநவமியை ஒட்டி, என் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, இன்றைய தினம் இந்த இடத்திற்கு வந்திறங்கியபோது ஆசிகள் நிரம்பப் பெற்றவனாய் நான் உணர்ந்தேன். இந்த விசேஷமான நாளன்று, 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த இரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் தமிழ்நாட்டிலே இணைப்புத்திறனை வலுப்படுத்தும். இந்தத் திட்டங்களின் பொருட்டு தமிழ்நாட்டின் என் சகோதர, சகோதரிகளுக்கு நான் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, இது பாரதரத்னா டாக்டர் கலாம் அவர்களின் பூமி. அறிவியலும், ஆன்மீகமும் ஒன்றையொன்று நிறைவு செய்பவை என்பதை அவருடைய வாழ்வு நமக்குக் காட்டுகிறது. அதே போல இராமேஸ்வரத்திற்கான இந்தப் புதிய பாம்பன் பாலமும் கூட, தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் ஒன்று சேர்க்கிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு நகரம். 21ஆம் நூற்றாண்டின் ஒரு பொறியியல் அற்புதத்தால் இணைக்கப்படுகிறது. தங்களுடைய தீவிரமான உழைப்பிற்காக நான் நமது பொறியாளர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
இந்தப் பாலம் தான் இந்தியாவின் முதல் செங்குத்தான உயர்த்தல் ரயில்வழிப் கடல் பாலம். இதற்கடியிலே பெரிய கப்பல்களாலும் பயணம் மேற்கொள்ள முடியும். ரயில்கள் இதன் மீது விரைவாகக் பயணிக்க இயலும். நான் சற்று நேரம் முன்னதாகத் தான் ஒரு புதிய ரயில் சேவையையும், ஒரு கப்பல் பயணத்தையும் துவக்கி வைத்தேன். இந்தத் திட்டத்தின் பொருட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் மீண்டும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, இந்தப் பாலத்திற்கான தேவை பல பத்தாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. உங்கள் நல்லாசிகளோடு இந்தப் பணியை நிறைவு செய்யும் நற்பேறு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
பாம்பன் பாலம், சுலபமாக வியாபாரம் செய்தல் மற்றும் சுலபமாகப் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு ஆதரவாக இருக்கிறது. பல இலட்சக்கணக்கான மனிதர்களின் வாழ்விலே இது ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இராமேஸ்வரம் தொடங்கி சென்னை வரையும், நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையிலான இணைப்பினை, இந்தப் புதிய ரயில் சேவை மேம்படுத்தும். தமிழ்நாட்டின் சுற்றுலா மற்றும் வணிகத்திற்கு இது ஆதாயங்களை அளிக்கும். இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் சந்தப்பங்களையும் இது உருவாக்கும்.
நண்பர்களே, கடந்த பத்தாண்டுகளில் பாரதம் தனது பொருளாதாரத்தின் அளவினை இரட்டிப்பாக்கி இருக்கிறது. இத்தனை விரைவான வளர்ச்சிக்கான ஒரு பெரிய காரணம் என்றால், நமது அருமையான நவீன கட்டமைப்பும் அதில் அடங்கும். கடந்த பத்தாண்டுகளில் நாம் ரயில், சாலை, விமான நிலையம், துறைமுகங்கள், மின்னாற்றல், நீர், எரிவாயுக் குழாய்கள் போன்ற கட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 6 மடங்கு உயர்த்தியிருக்கிறோம்.
இன்று தேசத்தின் மிக விரைவாக மெகா திட்டங்கள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. வடக்கிலே நீங்கள் பார்த்தீர்களென்றால், ஜம்மு கஷ்மீரத்திலே, உலகின் மிக உயரமான ரயில் பாலங்களில் ஒன்றான சினாப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேற்கிலே பார்த்தீர்களென்றால், மும்பையிலே தேசத்தின் மிக நீளமான கடல் பாலமான அடல் பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கிழக்கிலே கவனித்தோமென்றால், அஸாமின் போகீபீல் பாலத்தை நீங்கள் பார்க்கலாம். மேலும் தெற்கு நோக்கிப் பயணத்தால், உலகின் வெகு குறைவான செங்குத்து உயர்த்தல் கொண்ட பாலங்களில் ஒன்றான பாம்பன் பாலத்தின் நிர்மாணம் நிறைவடைந்திருக்கிறது.
இதைப் போலவே, கிழக்கு மற்றும் மேற்கு பிரத்யேகமான சரக்குப் போக்குவரத்து இடைவழியும் கூட அமைக்கப்பட்டு வருகிறது. தேசத்தின் முதல் புல்லட் ரயில் தொடர்பான பணிகளும் விரைவாக நடந்தேறி வருகின்றன. வந்தே பாரத், அம்ருத் பாரத் மற்றும் நமோ பாரத் போன்ற நவீன ரயில்களும், ரயில் வலைப்பின்னலை மேலும் நவீனமாக்கி வருகின்றன.
நண்பர்களே, பாரதத்தின் அனைத்துப் பகுதிகளும், பரஸ்பர இணைப்புகள் உடையவையாக ஆகும் போது, வளர்ந்த தேசமாக ஆகும் பாதை மேலும் வலுவடைகிறது. உலகின் அனைத்து வளர்ச்சியடைந்த நாடுகளின் வளர்ச்சிக்கான காரணமும் இது தான். இன்று பாரதத்தின் அனைத்து மாநிலங்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் போது, தேசத்தின் ஒட்டுமொத்த சாத்தியக்கூறுகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. இவற்றின் ஆதாயங்களும் கூட தேசத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்கின்றன. நமது தமிழ்நாட்டிற்கும் கிடைத்து வருகிறது.
நண்பர்களே, வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கிய பயணத்தில் தமிழ்நாட்டிற்கென மிகப்பெரிய பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் வல்லமை எத்தனை அதிகம் உயர்கிறதோ, பாரதத்தின் வளர்ச்சியும் அந்த அளவுக்கு விரைவாகும் என்று தான் கருதுகிறேன்.
கடந்த பத்தாண்டிலே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, 2014 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலகட்டத்தோடு ஒப்பு நோக்கும் போது, மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு அளித்திருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு இது அதிக அளவு உதவியிருக்கிறது.
நண்பர்களே, தமிழ்நாட்டின் கட்டமைப்பு தான் பாரத அரசின் முதன்மை. கடந்த பத்தாண்டிலே, தமிழ்நாட்டின் ரயில்துறை பட்ஜெட்டில், ஏழு மடங்கிற்கும் அதிகமான அதிகரிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
2014 ஆம் ஆண்டிற்கு முன்புவரை, ரயில்துறைத் திட்டங்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் வெறும் 900 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்து வந்தது. இந்த ஆண்டு, தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் 6000 கோடி ரூபாய்க்கும் அதிகம்.
பாரத அரசு, தமிழ்நாட்டில் இருக்கும் 77 ரயில் நிலையங்களையும் நவீனமயமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதிலே இராமேஸ்வரம் ரயில் நிலையமும் இடம் பெற்றிருக்கிறது.
நண்பர்களே, கடந்த பத்தாண்டுகளிலே, கிராமப்புறச் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறையிலே கூட ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில், மத்திய அரசின் உதவியோடு, 4000 கி.மீட்டர் அளவுக்கு சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. சென்னை துறைமுகத்தை இணைக்கவல்ல உயர்த்தப்பட்ட இடைவழி, அருமையான கட்டமைப்பிற்கான மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
இன்றும் கூட சுமார் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களோடு மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேசத்துடனான இணைப்பையும் மேம்படுத்தும்.
நண்பர்களே, சென்னை மெட்ரோ போன்ற நவீன பொதுமக்கள் போக்குவரத்து வசதியும் கூட, தமிழ்நாட்டிலே சுலபமான பயணம் மேற்கொள்ளுதலை மேம்படுத்துகிறது. இத்தனை பெரிய அளவில் கட்டமைப்புக்கள் தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இவற்றின் அனைத்துத் துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், மறந்து விடக்கூடாது.
நண்பர்களே, கடந்த பத்தாண்டிலே பாரதம், சமூகக் கட்டமைப்பிலும் கூட சாதனை காணும் அளவுக்கு முதலீடுகளைச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் கோடானுகோடி குடும்பங்களுக்கும் இவற்றால் ஆதாயங்கள் கிடைத்து வருவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த பத்தாண்டிலே, 4 கோடிக்கும் அதிகமானோருக்கு, கான்கிரீட் வீடுகள், தேசமெங்குக் இருக்கும் ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இவற்றிலே, பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின்படி, 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் இங்கே தமிழ்நாட்டிலே கட்டப்பட்டு விட்டன.
கடந்த பத்தாண்டுகளிலே, கிராமங்களில் 12 கோடிக் குடும்பங்களுக்கு, முதன்முறையாக குழாய்வழி குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது.
இவற்றிலே, ஒரு கோடி பதினோரு இலட்சம் குடும்பங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இவர்களுடைய இல்லங்களிலே முதன்முறையாக குழாய்வழி குடிநீர் சென்றடைந்திருக்கிறது. இதனால், மிகப்பெரிய ஆதாயம் அடைந்தவர்கள் நம்முடைய தாய்மார்கள், சகோதரிகள் தாம்.
நண்பர்களே, நாட்டு மக்களுக்கு தரமான மற்றும் விலைமலிவான சிகிச்சை அளிக்கும் விஷயத்தில் நமது அரசாங்கம் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது. நீங்களே பாருங்கள், ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தின்படி தமிழ்நாட்டிலே ஒரு கோடிக்கும் மேற்பட்ட சிகிச்சைகள் நடைபெற்றாகி விட்டது. இவற்றிலே தமிழ்நாட்டின் இந்தக் குடும்பங்கள் 8000 கோடி ரூபாய் செலவிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 1400க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் இருக்கின்றன. இங்கே 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. இந்த மலிவுவிலை மருந்துகளாலும் கூட மக்களுக்கு 700 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டிருக்கிறது.
நண்பர்களே, நாட்டின் இளைஞர்கள் மருத்துவப் படிப்பு படிக்க, அயல்நாடுகளுக்குச் செல்லக்கூடிய கட்டாயம் ஏற்படக்கூடாது என்பதே எங்களுடைய முயற்சி. கடந்த ஆண்டுகளிலே, தமிழ்நாட்டிற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்திருக்கின்றன.
நண்பர்களே, வரிசெலுத்துபவர்கள் செலுத்தும் பணம், மிகவும் ஏழ்மையில் வாடும் மக்களுக்குத் துணைவர வேண்டும். இதுதான் நல்லாளுகை. தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு பிரதம மந்திரி விவசாயிகளுக்கான வருமான ஆதரவுத் திட்டத்தின்படி, சுமார் 12,000 கோடி ரூபாய் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், 14,800 கோடி ரூபாய் காப்புறுதிப் பணம் கோரல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆனால், தமிழகத்திற்கு எவ்வளவு நிதி கொடுத்தாலும், சில பேருக்கு காரணமே இன்றி அழும்பழக்கம் இருக்கிறது. அவர்கள் அழுது கொண்டே இருக்கட்டும். அவர்களால் அழத்தான்முடியும்; அழுதுவிட்டு போகட்டும். 10 ஆண்டுகளில், தமிழகத்திற்கு மூன்று மடங்கு நிதிகொடுத்திருக்கிறேன்.
எனக்கு சில தலைவர்கள் தமிழகத்தில் இருந்து கடிதம் எழுதுவது ஆங்கிலத்தில் இருக்கும். கையெழுத்து கூட ஆங்கிலத்தில் தான் போடுகின்றனர். தமிழ் மொழியில் போடக்கூடாதா என, நான் வியப்பதுண்டு. சக்தி, தன்னிறைவு கொண்ட பாரதம் என்ற லட்சியத்திற்காக நாம் பயணிக்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன் இப்பாலத்தை கட்டியவர் குஜராத்தைச் சேர்ந்தவர். இன்று திறந்து வைத்ததும், குஜராத்தில் பிறந்த நான்.
நண்பர்களே, பாரதத்தின் வளர்ச்சியில் நமது நீலப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்கு அமைய இருக்கிறது. இதிலே தமிழ்நாட்டின் பலத்தை உலகமே பார்த்து வியக்கும். தமிழ்நாட்டின் நம்முடைய மீனவ சமூகம் மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய ஒரு சமூகமாகும். தமிழ்நாட்டின் மீன்வளத்துறை கட்டமைப்பினை வலுப்படுத்த வேண்டி, மாநிலத்திற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு அளித்து வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில், பிரதம மந்திரி மீன்வளத் திட்டத்தின்படி, தமிழ்நாட்டிற்குக் கோடிக்கணக்கான ரூபாய் நிதியாக வழங்கப்பட்டிருக்கிறது. அதிகபட்ச நவீன வசதிகள் நமது மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நம்முடைய முயற்சியாக இருக்கிறது. அது கடற்பாசிப் பூங்காவாகட்டும், மீன்பிடித் துறைமுகமாகட்டும், படகுத்துறையாகட்டும், மத்திய அரசு இங்கே பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை முதலீடு செய்து வருகிறது.
நமது பாதுகாப்புத் தொடர்பான அக்கறையும் நமக்கு இருக்கிறது. பாரத அரசு, மீனவர்களின் அனைத்துச் சங்கட காலங்களிலும் அவர்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து வருகிறது. பாரத அரசின் முயற்சிகள் காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் 3700க்கும் மேற்பட்ட மீனவர்கள், இலங்கையிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களில் 600க்கும் அதிகமான மீனவர்கள் மட்டும் கடந்த ஓராண்டில் மீட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.
நண்பர்களே, இன்று உலகில் பாரதம் அனைவரையும் ஈர்க்கும் மையமாக ஆகியிருக்கிறது. மக்கள் பாரதம் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள், புரிந்து கொள்ள விழைகிறார்கள். இதிலே பாரதத்தின் கலாச்சாரம், நம்முடைய மென்சக்திக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
தமிழ் மொழி மற்றும் மரபு, உலகின் அனைத்து இடங்களுக்குக் சென்று சேர வேண்டும், இதற்காக அரசாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த 21ஆம் நூற்றாண்டில் நாம் இந்த மகத்தான பாரம்பரியத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே என் உறுதியான கருத்து. ராமேஸ்வரம் மற்றும் தமிழ்நாட்டின் இந்த மண்…….. இன்று போல என்றும் தொடர்ந்து புதிய சக்தியை அளித்துவரும், புதிய உள்ளெழுச்சியை அளித்துவரும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.
நண்பர்களே, இன்று பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாளும் கூட, சக்திபடைத்த, தன்னிறைவு கொண்ட, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலட்சியத்தை மனதிலே தாங்கி, நாம் பயணித்து வருகிறோம். இதிலே பாரதிய ஜனதா கட்சியின் அனைத்துத் தொண்டர்களின் கடினமான உழைப்பும் அடங்கியிருக்கிறது. இன்று நாட்டு மக்கள் அனைவரும், பாரதிய ஜனதா கட்சியின் நல்லாளுகையை கவனித்து வருகிறார்கள். தேசத்தின் நலன்களின் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தீர்மானங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேசத்தின் அனைத்து மாநிலங்கள், அனைத்து மூலைகளிலும், பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கள அளவில் மக்களோடு இணைந்து, ஏழைகளுக்குச் சேவையாற்றி வருகிறார்கள் என்பதைப் பார்த்து எனக்குப் பெருமிதமாக இருக்கிறது. நான் பாரதிய ஜனதா கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
அவர்களுக்கு எல்லாம் என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டுமொருமுறை, உங்களனைவருக்கும், தமிழ்நாட்டின் இந்த அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கான வாழ்த்துக்கள். நன்றி, வணக்கம், மீண்டும் சந்திப்போம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.