பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக நேற்று பிரான்ஸ் சென்றார். அவருக்கு அந்நாட்டு ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து பாரிஸ் சென்றார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் நேற்று இரவு அவருக்கு விருந்து அளித்தார்.
பாரிஸில் இன்று நடைபெறும் 2-வது நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணை பிரதமர் டிங் சூயெக்ஸியாங் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள், ஓபன் ஏஐ உட்பட பல்வேறு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள், 3 நீர்மூழ்கிகளை வாங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் புறப்படுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை அவர் நாளை மறுநாள் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.