Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • உள்துறை அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: ராசா மீது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் புகார் தமிழ்நாடு
  • பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • பாஜக துவக்க நாளை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி அரசியல்
  • நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா அரசியல்
  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் அரசியல்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு
  • குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கும் சிபிஆர் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து இந்தியா

டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி

Posted on February 11, 2025 By admin No Comments on டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி

புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே சிஏஜி அறிக்கை சட்டமன்றத்தில் சமர்பிக்கப்படும். ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும். யாரெல்லாம் கொள்ளை அடித்தார்களா, அவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதுவும் மோடியின் உத்திரவாதம் என பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டெல்லியில் பாஜக அமோக வெற்றிப்பெற்றதை தொடர்ந்து தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தொண்டர்கள் மத்தியில் பாரத் மாதா கீ ஜெய், யமுனா மாதா கீ ஜெய் என்கிற கோஷங்களுடன் பிரதமர் உரையை துவக்கினார். அவர் ஆற்றிய உரையில்; இன்று (08.02.2025) டெல்லி மக்கள் மத்தியில் உற்சாகமும் அமைதியும் சேர்ந்து காணப்படுகிறது. வெற்றியினால் உற்சாகமும் ஆபத்திலிருந்து மீண்டதினால் அமைதியும் நிலவுகிறது. நான் டெல்லி மக்களுக்கும் ஒரு கடிதம் எழுதினேன். நீங்கள் அனைவரும் அந்தக் கடிதத்தை ஒவ்வொரு டெல்லி வாசிகளுக்கும் கொண்டு சேர்த்தீர்கள். 21ம் நூற்றாண்டில் டெல்லி மக்களுக்கு சேவை புரிய ஒரு வாய்ப்பு அளிக்குமாறு நான் அந்தக் கடிதத்தில் கேட்டிருந்தேன். விக்சித் பாரதத்தின் விக்சித் தலைநகரமாக டெல்லியை மாற்ற வாய்ப்பு அளிக்குமாறு கேட்டிருந்தேன். மோடியின் காரண்டீ (உத்தரவாதம்) மீது நம்பிக்கை வைத்த டெல்லியைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மடை திறந்த வெள்ளம் போல் டெல்லி நமக்கு அன்பை பொழிந்து இருக்கிறது. டெல்லியை வளர்ச்சி அடைய வைத்து அவர்கள் நம் மீது பொழிந்திருக்கும் அன்பை பல மடங்குகளாக திருப்பித் தருவோம் என்று நான் மீண்டும் உறுதி அளிக்கிறேன்.

டெல்லி மக்கள் நம் மீது வைத்திருக்கும் இந்த அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நாம் அவர்களுக்கு கடமைப் பட்டிருக்கின்றோம். டெல்லியின் டபுள் இன்ஜின் (இரட்டை இன்ஜின்) அரசு டெல்லியை விரைவில் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். இந்த வெற்றி சாதாரணமானதல்ல. டெல்லி மக்கள் ஆபத்தை விளக்கி இருக்கிறார்கள். இன்று டெல்லி விடுதலை அடைந்து விட்டது. டெல்லி மக்களின் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது. இன்று வளர்ச்சி, தொலைநோக்கு மற்றும் நம்பிக்கைக்கு ஒளி கிடைத்து இருக்கிறது. இன்று ஆடம்பரம், அராஜகம், அகங்காரம் மற்றும் டெல்லியை பிடித்த பேராபத்திற்கு தோல்வி கிடைத்து இருக்கிறது. பாஜகவின் வெற்றிக்கு பின்னால் பாஜக கார்யகர்த்தர்களின் கடின உழைப்பு மற்றும் தியாகம் உள்ளது. கார்யகர்த்தார்களாகிய நீங்கள் தான் இந்த வெற்றியின் பங்குதாரர்கள். பணியாற்றிய ஒவ்வொரு கார்யகர்த்தர்களுக்கும் நான் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, டெல்லி மக்கள் தெளிவாக ஒன்றை அறிவித்து உள்ளனர். டெல்லியின் உரிமையாளர்கள் டெல்லி மக்கள் மட்டுமே என்பது தான் அது. டெல்லியின் உரிமையாளர்கள் என்று தன்னைத்தானே கர்வத்துடன் நினைத்துக் கொண்டிருந்தவர்கள் இன்று உண்மையை உணர்ந்து இருப்பார்கள். டெல்லி மக்கள் மற்றொரு செய்தியையும் கூறி இருக்கிறார்கள். அரசியலில் குறுக்கு வழி, பொய் மற்றும் பித்தலாட்டத்திற்கு இடமில்லை என்பது தான் அது. மக்கள், குறுக்கு வழி அரசியலுக்கு முடிவு கட்டியுள்ளனர்.

நண்பர்களே, டெல்லி மக்கள் பங்கேற்ற இந்த தேர்தலில் நான் எந்த சமயத்திலும் நம்பிக்கையை இழக்கவில்லை. 2014, 2019 மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தலில் 7க்கு 7 இடங்களில் மாபெரும் வெற்றியை அளித்தார்கள். தொடர்ந்து நமக்கு 3 லோக்சபா தேர்தலில் 100% வெற்றியை அளித்த டெல்லி மக்கள், டெல்லிக்கு முழுமையாக பணியாற்ற வாய்ப்பு அளிக்கவில்லை என்கிற ஒரு சிறு ஆதங்கம் தேசம் முழுவதும் உள்ள கார்யகர்தர்கள் மனதிலும் டெல்லி பாஜக கார்யகர்தர்கள் மனிதிலும் இருந்தது. டெல்லி மக்கள் இன்று நம்முடைய அந்த கோரிக்கையையும் நிறைவேற்றி உள்ளனர். 21ம் நூற்றாண்டில் பிறந்துள்ள டெல்லி இளைஞர்கள் முதல் முறையாக பாஜகவின் நல்லாட்சியை காணப் போகிறார்கள். பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசு மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இன்று காண முடிகிறது.

2024 லோக்சபா வெற்றிக்குப் பிறகு நாம் ஹரியானா மாநிலத்தில் வெற்றி பெற்றோம். பிறகு மஹாராஷ்டிராவில் பெருவெற்றி பெற்று வரலாறு படைத்தோம். இன்று டெல்லியில் புதிய சரித்திரம் எழுதப்பட்டுள்ளது. டெல்லி ஒரு நகரம் மட்டுமல்ல, ஒரு மினி ஹிந்துஸ்தானம் என்பதும் இன்று தெளிவாகி உள்ளது. ‘‘ஒரே பாரதம் வலிமையான பாரதம்’’ என்கிற நமது முழக்கத்திற்கு இன்று வெற்றி கிடைத்து உள்ளது. டெல்லியில் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதியைச் சேர்ந்த பாரதீயர்கள் உள்ளனர். அந்த விதத்தில் பார்த்தால், வேற்றுமையில் நிறைந்து உள்ள பாரதத்தின் ஒரு எளிமையான ரூபம் என்றும் கூறலாம். டெல்லி மக்கள் பாஜகவுக்கு பெரும் வெற்றியை அளித்து ஆசிர்வதித்துள்ளனர். டெல்லியில் எந்த ஒரு பகுதியிலும் தாமரை மலரவில்லை என்கிற நிலையில்லை. எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், எந்த மாநிலத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும், பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்கு அளித்துள்ளனர்.

நான் பூர்வாஞ்சல் பகுதியில் (பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள் அடங்கிய பகுதி) இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று நான் எங்கு சென்றாலும் கூறுவேன். பூர்வாஞ்சல் பகுதியுடன் நான் ஏற்படுத்திக் கொண்ட இந்த பந்தத்திற்கு, பூர்வாஞ்சல் மக்கள் அன்பு மற்றும் நம்பிக்கை மூலம் புதிய எழுச்சியையும் சக்தியையும் அளித்துள்ளனர். இதற்கு பூர்வாஞ்சலில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி என்கிற முறையில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘சப் கா ஸாத் ; சப் கா விகாஸ்’’ என்பது ஒவ்வொரு டெல்லி மக்களுக்கும் என்னுடைய உத்திரவாதம். முழு டெல்லிக்கான வளர்ச்சி என்பதே என்னுடைய உத்திரவாதம். டெல்லியுடன் சேர்த்து உத்திர பிரதேசம் அயோத்தியாவிலுள்ள மில்கிபுர் சட்டமன்ற தொகுதியிலும் நமக்கு பெரு வெற்றி கிடைத்துள்ளது. ஒவ்வொரு வர்க்கத்தினரும் பாஜகவிற்கு பெருவாரியாக வாக்களித்து முழுமையான வெற்றியை அளித்துள்ளனர். தேசம் முழுவதும் மக்கள், ஓட்டு வங்கி அரசியலை ஒதுக்கி வளர்ச்சி அரசியலுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். தர்ணா போராட்ட அரசியல், மோதல் அரசியல் மற்றும் அரசு இயந்திரம் செயல் படாமை ஆகியவை டெல்லி மக்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் வளர்ச்சிக்கு இருந்த பெரும் தடைக்கல்லை டெல்லி மக்களாகிய நீங்கள் இன்று உடைத்து எறிந்து இருக்கிறீர்கள். மெட்ரோ பணி, குடிசைவாசிகளுக்கு வீடு வழங்கும் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் போன்ற பயன் அளிக்கக் கூடிய எல்லாத் திட்டங்களையும் ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி மக்களுக்கு சென்றடைய விடாமல் தடுத்தனர். அனால் இன்று டெல்லி மக்கள், நல்லாட்சி தான் முக்கியம் என்கிற ஒரு தீர்க்கமான முடிவை இன்று தந்திருக்கிறார்கள். அரசு இயந்திரம் என்பது நாடகம் ஆடும் மேடை அல்ல, அரசு இயந்திரம் அரசியல் பிரச்சாரம் செய்யும் மேடை அல்ல போன்ற செய்திகளையும் டெல்லி மக்கள் கூறியிருக்கிறார்கள். இரட்டை இன்ஜின் அரசு வேண்டும் என்று மக்கள் தீர்ப்பு கூறி இருக்கிறார்கள். டெல்லி மக்களின் சேவையில் இரவு பகல் பாராமல் உழைக்கும் கார்யகர்தர்கள் நாம்.

எங்கெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருக்கிறதோ அங்கெல்லாம் நல்லாட்சி நடப்பதை தேசம் அறியும். வளர்ச்சியும் நம்பிக்கையும் இருப்பதை உணர்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியும், மக்களின் தேவைக்காக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாம் தே.ஜ அரசு தேர்நதெடுக்கப்பட்டுள்ளதோ அந்த மாநிலங்களை எல்லாம் வளர்ச்சியின் உச்சத்திற்கு இட்டுச் செல்கிறோம். இதனால் தான் பாஜகவுக்கு தொடந்து வெற்றி கிடைத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் நமது அரசை இரண்டாவது முறை மூன்றாவது முறை என்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உத்தராகண்ட், ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், கோவா, மஹாராஷ்ட்ரா, பீகார், அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நமக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

டெல்லியின் அண்டை மாநிலமான உபியில் ஒரு காலத்தில் சட்டம் ஒழுங்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாக இருந்தது. நோய் பரவலும் அதிக அளவில் இருந்தது. இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட நாம் சங்கல்பம் எடுத்து பணி செய்தோம். மஹாராஷ்டிராவில் வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. நமது அரசு அமைந்தவுடன் நாம் ‘ஜல் யுக்த ஷிபிர்’’ போன்ற திட்டம் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் தண்ணீர் கொண்டு சேர்த்தோம். ஹரியானாவில் பணம் கொடுக்காமல் சிபாரிசு இல்லாமல் அரசு வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. அங்கு இன்று பாஜக நல்லாட்சியின் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களை நாட்டின் வளர்ச்சிப் பணியில் இணைக்கும் பணியை நமது அரசு செய்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் குஜராத் மாநிலத்தில் தண்ணீர் பிரச்சினை பெரும் சவாலாக இருந்தது. விவசாயம் செய்வது கஷ்டமாக இருந்தது. இன்று அதே குஜராத் விவசாயிகள் சக்தி நிலையமாக மாறி எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. நிதிஷ் குமார் அவர்களின் அரசு அமைவதற்கு முன், பீகார் மாநிலம் எப்படி இருந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். நிதிஷ் குமார் அவர்களின் தலைமையில் தே.ஜ அரசு அமைந்த பின் அங்கு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு அவர்கள் தன்னுடைய பணியின் மூலம் தனி முத்திரை பதித்தார். இந்த உதாரணங்கள் எல்லாம் தே.ஜ என்றால் வளர்ச்சிக்கு உத்திரவாதம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி என்றால் நல்லாட்சிக்கு உத்திரவாதம். வளர்ச்சியின் பயன் ஏழை மற்றும் நடுத்தர மக்களை சென்றடைகிறது.

இந்த முறை டெல்லியிலுள்ள குடிசைப் பகுதியில் வாழும் எனது சகோதர சகோதரிகளும் நடுத்தர மக்களும் பாஜகவுக்கு பெருவாரியான ஆதரவு அளித்துள்ளனர். வல்லுநர்கள் எனப்படும் படித்த வர்க்கத்தினரும் நமது கட்சியில் பணி செய்து கொண்டிருக்கின்றனர். நடுத்தர வர்க்கத்தினரை என்றுமே நாம் நினைவில் கொண்டு பணி செய்வதே இதற்குக் காரணம். டெல்லியில் தான் முதன் முதலில் மெட்ரோ பணி துவங்கப்பட்டது. மற்ற நகரங்களில் ஏர்போர்ட் மெட்ரோ மற்றும் நகர்ப்புற வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தினோம். நமது திட்டங்களின் பெரும் பயன் நடுத்தர வர்க்கத்தினருக்கு கிடைக்கிறது. ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் மூலம் சிறு நகரங்களில் வாழ்பவர்கள் தங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஜன் அவ்ஷதி கேந்த்ரா மூலம் கோடிக் கணக்கான மக்களுக்கு ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்க முடிகிறது. பெண்களின் ஆதரவும் ஆசிர்வாதமும் நமக்கு பெரிய கேடயமாக உள்ளது. இன்று டெல்லியில் மீண்டும் பெண்கள் சக்தி நம்மை ஆசிர்வதித்துள்ளனர். ஒடிஷா, ஹரியானா, மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் நாம் பெண்களுக்கு கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி உள்ளோம். இன்று இந்த மாநிலங்களில் கோடிக்கணக்கான பெண்களுக்கு நமது திட்டங்களின் பயன்கள் சென்றடைகின்றன. டெல்லியில் உள்ள பெண்களுக்கும் நாம் கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப் படும் என்று நான் உத்திரவாதம் அளிக்கிறேன். இது மோடியின் உத்திரவாதம். மோடியின் உத்திரவாதம் என்றால் உத்திரவாதம் நிறைவேறும் உத்திரவாதம்.

உடைந்த தெருக்கள், ஆங்காங்கே குவிந்திருக்கும் குப்பை மேடுகள், கழிவு நீர் ஓட்டம், மாசு அடைந்த காற்று ஆகிய பிரச்சினைகளால் டெல்லி துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். டெல்லியில் அமைய இருக்கும் பாஜக அரசு, டெல்லியை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதோடு டெல்லியை ஒரு நவீன நகரமாக மாற்றும். முதல் முறையாக டெல்லி என்சிஆர் பகுதியில் எல்லா மாநிலத்திலும் பாஜக அரசு அமைந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக இது அமைந்துள்ளது. ராஜஸ்தான், உபி, ஹரியானா ஆகிய எல்லா அண்டை மாநிலங்களிலும் பாஜக அரசு உள்ளது. இது எல்லா விதத்திலும் அனுகூலமாக அமையும். வளர்ச்சிக்கு வழி வகுக்கும். போக்குவரத்து மற்றும் கட்டுமானப் பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும். இந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கும் தங்கள் சுய முன்னேற்றத்திற்கு பல வாய்ப்புக்கள் கிடைக்கும். இன்று நாடு நகரமயமாக்கலை நாடி சென்று கொண்டிருக்கிறது. முன்பிருந்த ஆட்சியாளர்கள் நகரமயமாக்கலை ஒரு சவாலாகப் பார்த்தனர். தங்கள் சொந்த சொத்து குவிப்பிற்காக மட்டுமே நகரத்தை பயன்படுத்தி வந்தனர். நகரமயமாக்கல் என்பது ஓர் வாய்ப்பு என்பது எனது கருத்து. ஏழை மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வாழ்வு தரும் ஒரு வாய்ப்பாக நகரமயமாக்கலை நான் பார்க்கிறேன். டெல்லி பாரதத்தின் நுழைவு வாயிலாகும். ஆகவே, டெல்லிக்கு மிகச் சிறந்த நகர்ப்புற கட்டமைப்பின் அவசியம் இருக்கிறது. டெல்லி மக்கள் வீட்டு வளர்ச்சியில் நமது பனியைப் பார்த்து இருக்கிறார்கள். தெருக்கள் மேம்படுத்துவதில் நமது பணியைப் பார்த்து இருக்கிறார்கள். டெல்லி மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதில் நாம் முழு வீச்சில் செயல்படுவோம்.

டெல்லி மக்களின் தீர்ப்பு, வளர்ச்சி மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கானது. ‘‘கங்கேச யமுனேச்சைவ கோதாவரி சரஸ்வதி காவேரி நர்மதே சிந்து’’ என்பது பாரதத்தின் கலாச்சார முழக்கமாகும். அன்னை யமுனா நமது நம்பிக்கையின் கேந்திரமாக விளங்குகிறது. ‘‘நமோ நமஸ்தே யமுனே ததாத்வம்; பவஸுவமே மங்கள் கார்ணஞ்ச’’ என்பது சான்றோர் வாக்கு. நமக்கு என்றும் மங்கலத்தைத் தரும் யமுனா தேவிக்கு நமது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அத்தகைய புனிதமான யமுனை நதியை இவர்கள் எப்படி பாழ் படுத்தி உள்ளனர். யமுனை நதியின் இந்த அவல நிலையைக் கண்டு டெல்லி மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். ஆனால், டெல்லியைச் சூழ்ந்த பேராபத்து நமது நம்பிக்கையை குலைத்தனர். டெல்லி மக்களின் நம்பிக்கையை கால் தூசிற்கு சமமாக ஆம் ஆத்மி கட்சியினர் நினைத்தனர். தங்களுடைய இயலாமையை மறைக்க ஹரியானா மாநில மக்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தினர். யமுனை நதியை டெல்லியின் அடையாளமாக மாற்ற வேண்டும் என்று தேர்தல் பரப்புரை சமயத்தில் நான் நினைத்துக் கொண்டேன். இது மிகவும் கடுமையான பணி என்று எனக்குத் தெரியும். நீண்ட நாட்கள் ஆகும் என்றும் எனக்குத் தெரியும். கங்கை நதியைப் பாருங்கள். ராஜீவ் காந்தி காலத்தில் இருந்து பணி நடந்து கொண்டிருக்கிறது. நாம் எடுக்கும் முயற்சியுடன் உறுதியும் இருந்தால் யமுனா அன்னையின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும். யமுனா அன்னையின் பணியில் நாம் அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். சேவை மனப்பான்மையுடன் நாம் பணி செய்வோம்.

அரசியலை மாற்றுவோம் என்று கூறிக்கொண்டு ஆம் ஆத்மி கட்சியினர் அரசியலில் பிரவேசித்தார்கள். ஆனால் அவர்கள் கடைந்தெடுத்த ஏமாற்றுப் பேர்வழிகளாக இருந்தனர். நான் இன்று திரு அன்னா ஹசாரேவின் உரையை கேட்டுக் கொண்டிருந்தேன். அன்னா ஹசாரே அவர்கள் இந்த ஆம் ஆத்மி கட்சியினரை சகித்துக் கொண்டிருந்தார். இன்று அவருக்கும் அந்த வலியில் இருந்து விடுதலை கிடைத்து இருக்கும். எந்த கட்சி ‘‘ஊழலை ஒழிப்பேன்’’ என்று கூறி வந்ததோ அதே கட்சி ஊழலில் ஊறித் திளைத்தது. அந்தக் கட்சியின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறை சென்றனர். நாணயமானவர்கள் என்று தங்களுக்குத் தாங்களே சான்றிதழ் அளித்துக் கொண்டு மற்றவர்களுக்கு ‘‘ஏமாற்றுப் பேர்வழிகள்’’ என்று சான்றிதழ் அளித்துக் கொண்டு வலம் வந்தனர். ஆனால் அவர்களே மிகப் பெரிய ஊழல்வாதிகளாக மாறினர். இது டெல்லி மக்களுக்குச் செய்த மிகப் பெரிய துரோகம். மது பான ஊழல், பள்ளி ஊழல், மருத்துவமனை ஊழல் என்று பல்வேறு ஊழல்களால் ஏழை எளிய மக்களுக்கு பெரும் துன்பம் அளித்து வந்தனர். இதற்கு மேல், அவர்களின் அகங்காரம். உலகமே கொரோனா நோயினால் அவதிப் போட்டுக்கொண்டிருந்த பொழுது ஆம் ஆத்மி கட்சியினர் தங்களுக்கு கண்ணாடி மாளிகை அமைத்துக் கொண்டிருந்தனர். தங்களுடைய ஊழல்களை மறைக்க, ஆம் ஆத்மி கட்சியினர் தினமும் ஒவ்வொரு சதித் திட்டம் தீட்டினர். இன்று டெல்லி மக்களின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே சிஏஜி அறிக்கை சட்டமன்றத்தில் சமர்பிக்கப்படும். ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும். யாரெல்லாம் கொள்ளை அடித்தார்களா, அவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதுவும் மோடியின் உத்திரவாதம்.

மக்கள் இன்று மீண்டும் ஒரு முறை காங்கிரஸ் கட்சிக்கு தீர்க்கமான செய்தியை தெரிவித்து இருக்கிறார்கள். டெல்லி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ‘‘0’’ எடுப்பதில் டபுள் ஹாட் ட்ரிக் செய்து உள்ளனர். தேசத்தின் தலை நகரில், நாட்டின் மிகப் பழமையான கட்சி 6 தேர்தல்களில் தங்கள் கணக்கை துவக்கத் தவறி விட்டது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே தோல்விப் பதக்கத்தை அளித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைக்க தேசம் எள்ளளவும் தயாராக இல்லை. நான் முன்பே கூறியத்தைப் போல, காங்கிரஸ் கட்சி ‘‘சேர்ந்தாரைக் கொல்லும்’’ கிருமியாக மாறி விட்டது. அது தானாகவும் வீழ்ந்து தன்னைச் சேர்ந்தவர்களையும் வீழ்த்துகிறது. தன்னுடன் இணைந்தவர்களை ஒவ்வொருவராக காங்கிரஸ் வீழ்த்திக் கொண்டிருக்கிறது. அதற்கு அவர்கள் கையாளும் வழி முறையும் மிக சுவாரசியமானது. தன்னைச் சேர்ந்தவர்களுடைய கோஷங்களையும் அவர்களுடைய வழிமுறைகளையும் அபகரித்துக் கொண்டு அவர்கள் ஓட்டு வங்கியை குறி வைக்கின்றனர். உபியில் சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் எதை தங்களுடைய ஓட்டு வங்கி என்று நினைத்துக் கொண்டிருந்தார்களோ, அதை காங்கிரஸ் கட்சி பறிக்க முயற்சித்தது. முலாயம் சிங் அவர்கள் இதை நன்றாக புரிந்து வைத்திருந்தார். தமிழகத்தில் காங்கிரஸ் திமுகவின் ஓட்டு வங்கியை குறி வைத்து செயல் படுகிறது. பீகார் மாநிலத்தில், ஆர்ஜேடி கட்சியின் ஓட்டு வங்கியை ஜாதிவாத விஷம் பேசி கவர காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இதையே ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு செய்தது. காங்கிரஸ் கட்சியுடன் எந்தக் கட்சி கூட்டு சேர்கிறதோ அந்தக் கட்சி வீழச்சியை சந்திக்கும் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது. 2014 ஆண்டிற்குப் பிறகு சிலர் தேர்தல் சமயத்தில் மட்டும் ஹிந்துவாக மாறி கோவில் கோவிலாக ஏறி மாலை அணிந்து கொண்டு பாஜகவின் ஓட்டு வங்கியை பறிக்கலாம் என்று நினைத்துக் கொண்டனர். ஆனால், அவர்கள் கனவு பலிக்கவில்லை. சமீபத்திய சில ஆண்டுகளாக அவர்கள் அவ்வாறு செய்வதில்லை என்பதை நீங்கள் அனைவரும் கவனித்து இருப்பீர்கள். பாஜகவின் ஓட்டு வங்கியை களவாட முடியாது என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆகவே, அவர்கள் பார்வை தற்பொழுது பல மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளின் மீது திரும்பி உள்ளது. அந்த மாநிலக் கட்சியினர் புரிந்து கொண்டிருப்பர் என்றே நான் நினைக்கிறன். இண்டி கூட்டணியினர் இன்று காங்கிரஸ் கட்சியின் இந்த போக்கை புரிந்து கொண்டனர். எந்த ஓட்டு வங்கியை தாங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரித்தோமா, அந்த ஓட்டு வங்கியை திரும்பப் பெற காங்கிரஸ் முயல்வதை அவர்கள் உணர்ந்து விட்டனர். அதனால் தான் டெல்லி தேர்தலில் இண்டி கூட்டணியினர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு தங்கள் ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள முயன்றனர். ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிட்டனர். ஆனால் அவர்களால் காங்கிரஸ் கட்சியை தடுக்க முடிந்ததே தவிர ஆம் ஆத்மி கட்சியினரை காப்பாற்ற முடியவில்லை. இதை ஹர்பன் நக்சல் சார்ந்தவர்கள் கூற மாட்டார்கள். முன்பிருந்த காங்கிரஸ் இன்று இல்லை. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி இன்று தேசிய அரசியல் செய்வதில்லை. ஹர்பன் நக்சல் செய்யும் அரசியல் செய்கிறது. ‘‘நான் பாரத தேசத்துடன் போர் புரிகிறேன்’’ என்று காங்கிரஸ் தலைவர் பேசுவது ஹர்பன் நக்சல் பேசுவது போல் உள்ளது. தேசத்தில் சமுதாயத்தில் அராஜகத்தை கட்டவிழ்க்கும் சதி வேலை இது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினரும் இதே ஹர்பன் நக்சல் சிந்தனையை பரப்புகின்றனர். எப்பொழுது காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏவில் ஹர்பன் நக்சல் சிந்தனை புகுந்ததோ, அன்றிலிருந்து காங்கிரஸ் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் அதற்கு சரிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

நான் 1 லட்சம் இளைஞர்களை அரசியலில் அடியெடுத்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன். ஒரு முழுமையான அரசியல் மாற்றத்திற்கான தேவை இருக்கிறது. விக்சித் பாரத் என்கிற கொள்கைக்கு புதிய சிந்தனை தேவைப் படுகிறது. 21ம் நூற்றாண்டின் அரசியலில் புதிய ஊக்கத்திற்கு தேவை இருக்கிறது. நல்ல இளைஞர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் யார் அரசியலுக்கு வரக் கூடாதோ அவர்கள் அரசியலுக்கு வருவார்கள். திறமை படைத்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் பொய் புரட்டு பேசுபவர்களும் மூர்கத்தனத்தை வளர்ப்பவர்களும் அரசியலுக்கு வருவார்கள்.

இன்று இந்த வெற்றி ஒரு புதிய பொறுப்பை நமக்கு அளித்துள்ளது. மாற்றம், மற்றும் செயல்பாடு ஆகியவற்றிக்கு பாஜக உத்திரவாதம் அளிக்கிறது. இந்தப் பணியில் டெல்லி மக்களும் இணையும் பொழுது மாற்றம் விரைவாக வரும். டெல்லியின் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் இனைந்து பணியாற்ற வேண்டும். நாம் தோளோடு தோள் இணைந்து பணியாற்றுவோம். நாம் அனைவரும் இணைந்து டெல்லியை விக்சித் பாரதத்தின் விக்சித் தலைநகராக மாற்றுவோம்.

எப்பொழுதெல்லாம் நமக்கு வெற்றி கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் நாம் பணிவை விட்டு விடக் கூடாது. விவேகத்தையும் சமுதாய சேவை மனப்பான்மையையும் விட்டு விடக் கூடாது. இது நான் எனக்குள் என்றும் கூறிக் கொள்ளும் மந்திரமாகும். நாம் சுகத்திற்காக அல்ல, சேவை மனப்பான்மையுடன் பணி செய்ய இணைந்துள்ளோம். இந்த சங்கல்பத்துடன் நாம் பணி செய்வோம். நம் மீது என்றும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று நான் தேச மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். டெல்லி மக்களுக்கு எனது நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி.

யமுனா மாதா கீ ஜெய்; பாரத் மாதா கீ ஜெய்

தமிழாக்கம் : ரமேஷ் ஸ்ரீனிவாசன்

இந்தியா Tags:#Bjp, #Oreynaadu, #PM Modi, #Tamilnadu

Post navigation

Previous Post: டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்
Next Post: பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Related Posts

  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை இந்தியா
  • துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி : பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா
  • 2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; கெஜட்டில் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு இந்தியா
  • குஜராத் சென்ற பிரதமர் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர் இந்தியா
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ரபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
  • ‘மோந்தா’ புயல்; மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைத்து தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு
  • கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
  • மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன்
  • ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: ஜனாதிபதி திரௌபதி முர்மு

Recent Comments

No comments to show.

Archives

  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த நெல்லை மாணவர் தமிழ்நாடு
  • பாஜக துவக்க நாளை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி அரசியல்
  • ராமஜென்ம பூமிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் : ஹெச்.ராஜா இந்தியா
  • மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • சுதந்திரத் தினத்தையொட்டி கமலாலயத்தில் தேசியக்கொடி ஏற்றினார் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் நடக்கும்: விரைவில் புதிய வசதி இந்தியா
  • ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: ஜனாதிபதியுடன்  முப்படை தளபதிகள் சந்திப்பு இந்தியா
  • நமது ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme