திருப்புவனத்தில் காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட பின்னணியில் உள்ள திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மற்றும் அதிமுக இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினர் நடத்திய மிருகத்தனமான தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமாரின் படுகொலையின் பின்னணியில் உள்ள திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தியும், அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் இன்றைய தினம் (ஜூலை 02) காலை 10.00 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் பாஜக – அதிமுக இணைந்து ஆர்பாட்டம் நடத்த இருப்பதாக பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா எக்ஸ் சமூக வலைத்தளபதிவில் தெரிவித்திருந்தார்.
மேலும் திருபுவனம் அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று பாஜக – அதிமுக இணைந்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பாஜக சார்பில் மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக ஹெச்.ராஜா தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்;
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்த அஜித்குமார் அவர்களின் மரணத்திற்கு நீதிகேட்டு திருபுவனத்தில் பாஜக – அதிமுக இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினேன்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், பாஸ்கரன், மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா, சிவகங்கை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில்நாதன் மற்றும் அதிமுகவின் சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறன் ஜி மற்றும் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாஜக சார்பில் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், சிவகங்கை மாவட்ட தலைவர் பாண்டித்துரை, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி, மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் மற்றும் சிவகங்கை, மதுரை மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட, மண்டல், அணி, பிரிவு நிர்வாகிகள் பெருந்திருளாக கலந்துகொண்டனர். இவ்வாறு ஹெச்.ராஜா கூறியுள்ளார்.