தமிழகத்தில் ரூ.22,800 கோடி ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
எம்.பி.ஆர்.தர்மர் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து கூறியதாவது: தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி ரூ.22,800 கோடி 15 ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1,700 கி.மீ தூரத்தில் மார்ச் 2025 வரை 665 கி.மீ பணிகள் ரூ.7,591 கோடி செலவில் நிறைவு பெற்றுள்ளது. 9 வழித்தடங்கள், 3 அகலப்பாதைகள் மாற்றம், 3 இரட்டை வழித்தடம் இதில் அடங்கும். 2019-14ல் ரூ.879 கோடியாக இருந்த நிதி 2025-26-ல் ரூ.6,526 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை – திண்டிவனம், மொரப்பூர் – தருமபுரி, மன்னார்குடி – பட்டுக்கோட்டை பணிகள் தாமதம் ஆகி உள்ளது. நிலம் கையகப்படுத்துவதை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு தேவை. ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் இதற்கு காரணம்.
சென்னை பறக்கும் ரயில் – மெட்ரோ ரயில் இணைப்புக்கு கொள்கை அளவில் ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. சென்னை பறக்கும் ரயில் சேவையை மாநில அரசிடம் ஒப்படைக்கவும் ஒப்புதல் தந்தது ரயில்வே வாரியம். இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.