நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 16) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை (ஆகஸ்ட் 15) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், சென்னை, தியாகராய நகர் நடேசன் பூங்கா அருகில் உள்ள விளையாட்டுத் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இல.கணேசன் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், இல.கணேசன் மறைவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று (ஆகஸ்ட் 16) அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்; நேற்றைய தினம் இயற்கை எய்திய, மாண்புமிகு நாகலாந்து மாநில ஆளுநரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான அய்யா இல.கணேசன் அவர்களது உடலுக்கு, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஜி அவர்களோடு இணைந்து சென்று மலரஞ்சலி செலுத்தினேன். தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஜி அவர்கள், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தார்கள்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காகவும், சமுதாயத்தின் மீது கொண்டிருந்த அக்கறையாலும் தனது வாழ்வை சமூகப் பணிகளுக்கு அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்து மறைந்த அய்யா இல. கணேசன் அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி..! இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.