சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக பணி நிரந்தரம், சம்பளம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களை திராவிட மாடல் அரசு நள்ளிரவில் காவல் துறையினரை ஏவி விட்டு கைது செய்தது.
சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிக்காக ஒப்பந்தத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்தும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செயய்க் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையில் உள்ள கழிவறையை பயன்படுத்த முடியாதபடி பூட்டு போட்டு வைத்தது. அதனையும் மீறி தங்களது உரிமைகளுக்காக தூய்மை பணியாளர்கள் மழை, வெயில் என்று பாராமல் அறவழியில் போராடி வந்தனர். ஆனால் அவர்களை திராவிட மாடல் அரசு என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் கண்டுக்கொள்ளவே இல்லை.
இதற்கிடையே திமுக ஆதரவு பெற்றவர்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்குபோட்டு தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த நினைத்தது.
அதன்படி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை கலைந்து செல்லுமாறு அறிவாலய அரசின் ஏவல்துறையினர் புதன்கிழமை மாலை அச்சுறுத்தினர். அத்துடன், ரிப்பன் மாளிகை பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். அதனால் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவியது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு 11.30 மணி அளவில் கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இருந்தவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக 15 அரசுப் பேருந்துகள் மூலம் ராயபுரம், வேளச்சேரி உள்ளிட்ட சென்னை நகரின் வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருமண கூடங்கள் மற்றும் சமூக நலக்கூடங்களில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
ஒரு சில பேருந்துகளில் நள்ளிரவு நடு ரோட்டிலேயே தூய்மைப் பணியாளர் இறக்கிவிடப்பட்டனர். வேளச்சேரி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கும்போது தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை அங்கிருந்து காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.
‘போலீஸ் அராஜகம் ஒழிக’, திமுக அரசு ஒழிக ‘எங்களது போராட்டம் நியாயமானது. அதனால் அறவழியில் இதைத் தொடருவோம்’ என கைது செய்யப்பட்டபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், கைது நடவடிக்கையின்போது பெண் தூய்மை பணியாளர்களை போலீசார் அடித்தனர். இதில் சிலர் மயக்கம் போட்டுள்ளனர். சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ரிப்பன் மாளிகை முன்பு நடைபாதையில் அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன.

மீண்டும் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் மேற்கொள்ளாத வகையில், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவன தூய்மை பணியாளர்களை வைத்து அந்தப் பகுதியை சுத்தம் செய்தனர். அங்கிருந்த குப்பைகளை அவர்கள் அகற்றினர்.
தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளரவில் கைது செய்து, வலுக்கட்டயாமாக அப்புறப்படுத்திய சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இரவு நேரங்களில் காவல்துறையை ஏவிவிட்டு தூய்மை பணியாளர்களிடம் தங்களது வீரத்தை காண்பித்துள்ளது ஒன்றுக்கும் உதவாத திராவிட மாடல் அரசு. இந்த அராஜக அரசுக்கு 2026ல் மக்கள் முடிவு கட்டுவார்கள் என்பது மட்டும் தற்போதைய உண்மை.