நீட் நுழைவு தேர்வில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரிய நாராயணன் 665 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் தேசிய அளவில் 27-வது இடத்தையும் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இத் தேர்வு முடிவுகள் (ஜூன் 14) வெளியானது. இதில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரியநாராயணன் 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 27-வது இடத்தையும் பெற்றுள்ளார்.
மாணவர் சூரியநாராயணன் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண்களை பெற்றிருந்தார். மேலும், ஜேஇஇ முதன்மை மற்றும் அட்வான்ஸ் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மாணவர் சூரிய நாராயணன் மழலையர் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார்.
இதுபோல் இப்பள்ளி மாணவர் பிரணவ் நீட் தேர்வில் 633 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 191- வது இடத்தையும், மாணவர் அவனிஷ் பிரபாகர் 608 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 922- வது இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். நீட் நுழைவு தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ள இந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன், முதன்மை முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், ஆசிரியர்கள் பாராட்டினர்.