திமுக அரசு தான் செய்யும் தவறுகளை மறைப்பதற்காக வேறு செய்திகளை பூதாகரமாக்கி வெளியிட்டு வருகிறது என்று பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தருமபுரியில் இன்று (ஏப்ரல் 02) தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா ஆலய வளாகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையிலான நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று வழிபட்டனர். இதனையடுத்து பாஜகவினர் ஆலய கேட்டின் பூட்டை உடைத்துவிட்டதாக கே.பி.ராமலிங்கம் உட்பட கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
பின்னர் இந்த வழக்கு தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று (ஏப்ரல் 2-ம் தேதி) கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் நீதிமன்றத்துக்கு வருகை தந்தனர்.
அப்போது, கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு அதன் ஊழல்களையும், கூட்டணி கட்சிகள் செய்துள்ள ஊழல்களையும் திசை திருப்புவதற்காக ஏதாவது ஒரு செய்தியை பூதாகரமாக்கி ஊடக விவாதங்களை திட்டமிட்டே பெரிதாக்கி வருகிறது. உதாரணமாக டாஸ்மாக் ஊழல், செல்வப்பெருந்தகை செய்துள்ள ஊழல், அண்ணா பல்கலை பாலியல் வழக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நிதி வழங்குவதில் ஊழல் உள்ளிட்ட ஊழல்களை திசை திருப்புதவற்காக மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றும், மும்மொழிக் கொள்கையை எதிர்த்து போராடுவதாகவும் நாடகமாடி வருகிறார்கள். மேலும், மெட்ரிக் பள்ளிகள் மாநில அரசின் தடையில்லா சான்று பெற பள்ளிக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் சங்கம் சார்பில் வசூலிக்கப்படுகிறது. இதையெல்லாம் மறைக்கவே ஊடகங்களை திமுக அரசு தவறாக பயன்படுத்துகிறது.
உலகம் முழுக்க உள்ள வல்லமையான அரசுகள் எல்லாம் இந்திய பிரதமரின் எண்ணங்களையும், லட்சியங்களையும் பின்பற்றும் வகையிலான அரசாக இந்திய அரசும், தலைவராக மோடியும் உள்ளார். அவர் தமிழகத்தில் நடக்கவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு வருகை தருகிறார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை ஏப்ரல் 6-ம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரும் நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது தான்.
திமுக ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். அதற்காக திமுக-வை எதிர்க்கும் அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்றுபட வேண்டும். கட்சி நலனை முக்கியமானதாகக் கருதாமல் தமிழகத்தின் நலனை முக்கியமானதாகக் கருதிட வேண்டும். தமிழக மக்களை ஊழல்வாதிகளிடம் இருந்தும், அதிகார துஷ்பிரயோகத்திடம் இருந்தும் விடுவிக்க வேண்டும். அதற்காக ஒன்றுபட வேண்டும். இந்திய மாநிலங்கள் அனைத்திலும் பாஜக மாவட்ட தலைவர்கள் தேர்தல் முடிவுற்று மாநில தலைவர்கள் தேர்தல் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தேசிய தலைவர் தேர்தல் நடத்தப்படும். அதையொட்டியே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் என்ற தகவல் பரவியிருக்கலாம். இவ்வாறு கே.பி.ராமலிங்கம் கூறினார்.
இந்நிகழ்ச்சியின்போது, மாநில செயலாளர் கோ.வெங்கடேசன், முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கர், தருமபுரி மாவட்ட தலைவர் சி.சரவணன், தர்மபுரி நகரத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளர் ஐஸ்வர்யம் முருகன், பாஜக இளைஞர் அணி தலைவர் மௌன குரு, வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.