தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பிய ஊடகங்கள் மற்றும் திமுக 200 உபிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருப்புவனம் போலீசாரால் அடித்துக்கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதாவுடன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இணைந்து உள்ள புகைப்படம் எடுத்துக்கொண்டது போன்ற படத்தை திமுக இணைய கைகூலிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பியிருந்தனர். மேலும் சன்நியூஸ், சத்யம் நியூஸ், மாலை மலர், நியூஸ் 7 போன்ற தொலைக்காட்சியில் முக்கியச் செய்தியாக ஒளிபரப்பப்பட்டது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அண்ணாமலையுடன் இருப்பது பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதைத் தொடர்ந்து கட்சி பிரமுகர்களுடன் பொன்னேரி காவல் நிலையத்திற்கு (ஜூலை 04) சென்ற ராஜினி, தன்னுடைய புகைப்படத்தை நிகிதாவுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இது தொடர்பாக ராஜினி அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக மக்கள் சேவை புரிந்து வருகிறேன். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவலாளி அஜித்குமார் மர்மமான முறையில் இறந்ததும், அதற்கு நிகிதா என்ற பெண் அளித்த புகாரின் பேரில் நடநத்தாக தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்தியின் அடிப்படையில் இன்று (ஜூலை 4) திமுகவின் பிரமுகரான வேலூர் சரவணன் என்ற எக்ஸ் வலைத்தளத்திலும், செந்தில்வேல் என்ற முகநூல் பக்கத்திலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரையில் பொன்னேரி தொகுதியில் பயணம் மேற்கண்ட முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை அவர்களுடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை, மேற்கண்ட அஜித்குமாரின் மரணத்தினை திசை திருப்பும் நோக்கத்தில், தமிழக பாஜகவின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், தவறான தகவல்களை புனைந்து, நிகிதாவிற்கு பதிலாக எனது புகைப்படத்தினை பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
மேலும், தன் குடிமகனை தானே கொன்ற தமிழக அரசின் அலட்சியத்திற்கும், அவர்களின் அவப்பெயரை மறைக்கவே, இவ்வாறான பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
இதன் உண்மைதன்மை அறியாமல், சன் நியூஸ், மாலை மலர், சத்யம் நியூஸ், நியூஸ் 7 போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இச்சமூகத்தில் இதுப்போன்ற பொய்யான தகவல்களை பரப்பி, பாஜகவிற்கும், பெண்மையின் மாண்பிற்கும், பட்டியலின சமூகத்தில் முன்னேறி வரும் என் போன்ற பெண்ணிற்கும் அநீதி இழைத்துள்ளனர். இதனால், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை அவர்களின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்தும், எனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி வெளியிட்டதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே, மேற்கண்ட தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர்கள் மீதும், உண்மை தன்மை அறியாமல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய, தொலைக்காட்சி நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்தும், தகுந்த மான நஷ்ட ஈடு வழங்க ஆவண செய்திட இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராஜினி தனது புகாரில் கூறியுள்ளார்.