திருப்புவனம் அஜித்குமார் கொலையில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரை நகை திருட்டு வழக்கிற்காக அழைத்துச்சென்ற காவலர்கள் அடித்துக்கொன்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது.
இந்தநிலையில், திருப்புவனத்தில் காவலர்களால் கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வீட்டிற்கு (ஜூலை 04) சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அஜித்குமார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அஜித்குமார் தாயார் மற்றும் சகோதரர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: திமுக ஆட்சியில் கடந்த நான்கு வருடத்தில் ஏற்கனவே 23 லாக்கப் மரணங்கள் நடந்து அஜித்குமார் வழக்கு 24வது லாக்கப் மரணம் என்று சொல்ல முடியாது. இது போலீஸ்காரங்களால் செய்யப்பட்ட படுகொலை ஆகும்.
கோயிலுக்கு போனவங்கள விசாரணை என்ற பெயரில் அழைச்சிட்டு போய் எப்ஐஆர் போடாமல், யார் புகார் அளித்தார்கள் என்றும் சொல்லவில்லை. ஆனால் அஜித்தை கூட்டிட்டு போய் காவல் நிலையத்தில் வைத்து அடித்துள்ளனர். அதை கேட்கப்போன அவரது தாயார் மற்றும் அவரது சகோதரரையும் அடித்துள்ளனர்.
நாளைக்கு அஜித்குமாரை விட்டுருவோம் என்று போலீசார் சொல்லிவிட்டு பின்னர் சிறப்பு காவல்படையிடம் ஒப்படைத்துள்ளனர். சிறப்பு காவல்படை இரண்டு நாட்களாக வைத்து அடித்துள்ளனர். எந்தவிதமான காரணமும் கிடையாது. இதற்கு முன்பு எவ்விதமான வழக்கும் அஜித்குமார் மீது கிடையாது. யாரோ புகார் சொன்னாங்க, தலைமை செயலகத்தில் இருந்து தகவல் வந்தது என்று சொல்லி சிறப்பு காவல்படை ஆறு பேர் சேர்ந்து 27வயதுடைய அஜித்குமாரை அடி, அடி என்று அடித்துள்ளனர்.

அஜித்தை அடிக்கும்போது சிகரெட்டால் மூன்று இடங்களில் காவலர்கள் சுட்டுள்ளனர். காவலர்கள் தலையில் அடித்ததில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. நடுப்பகுதி மண்டை உடைந்துள்ளது. இருதயம், கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. 23 இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. இவ்வளவும் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கிறது.
அந்த அளவிற்கு தலைமை செயலகத்தில் மிக முக்கியமான அதிகாரி யார் இருக்கிறார்? அதுதான் எங்களது கேள்வி. கொலை நடந்த உடனேயே இதை வெளிக்கொண்டு வந்தது பாரதிய ஜனதா கட்சிதான். எங்களுடைய மாவட்டத் தலைவர் பாண்டித்துறை உடனடியாக நீதிமன்றத்திற்கு சென்று ஆர்டர் வாங்கினார். இவ்வளவு பெரிய கொடூரமான செயல் ஏன் நடைபெறனும் என்பதுதான் எங்களின் கேள்வி.
அஜித்குமார் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது சகோதரருக்கு ஆவினில் வேலை போட்டுக்கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக வேலை போட்டுக்கொடுப்பது சரி. ஆனால் அது எல்லாமே கண் துடைப்பு. இங்கே மதுரையில் ஆவின் இருக்கிறது. ஆனால் 80 கிலோ மீட்டர் உள்ள காரைக்குடியில் வேலை போட்டுள்ளனர். அந்த வேலையை பக்கத்தில் போட்டுக்கொடுத்திருக்கலாம். இனிமேலாவது பக்கத்தில் போட்டுக்கொடுப்பாங்க என்று நினைக்கிறேன். அதே போன்று 4 கிலோ மீட்டர் தள்ளி பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஆக இதையெல்லாம் முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. ஆனால் சாரி சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவரது டிபார்ட்மென்டில் செய்ய முடியவில்லை அதனால் சாரி சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. இவ்வளவும் செஞ்சதுகூட பெரிய விஷயமில்லை.
ஆனால் இதுக்கும் மேலயும் ஒரு தவறு செய்திருக்கிறார்கள். இதுவரையில் யாருக்கும் தெரியாது. சிறப்பு காவல்படையை காப்பாற்றுவதற்காக தலைமை செயலகத்தில் இருந்து யார் சொன்னாங்க என்பதை மறைச்சு இருக்கிறாங்க. இன்னொரு கொடுமையான விஷயம் பிரேத பரிசோதனை அறிக்கை கொடுத்திருக்காங்க. அதில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா? ஏற்கனவே இவருக்கு இதயம் பாதிக்கப்பட்டுள்ளது என சொல்லியிருக்கிறாங்க. எவ்வளவு பெரிய கொடூரமான செயல் இது. அடிப்பட்ட காயங்கள் எல்லாம் இரண்டு நாளைக்கு முன்னாலேயே இருக்கிறது என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். இதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
காவல் நிலையத்தில் இருந்து வெளியே கடத்திச்சென்று அடிச்சிருக்காங்க. கூட இருந்த சக்தீஸ்வரன் வீடியோ எடுத்ததற்காக மிரட்டியுள்ளனர். அவரது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் உண்டாகியுள்ளது.

எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை. 7 வயது சிறுவன் இதே மாவட்டத்தில் பள்ளிக்கூடம் போகிறான். பின்னர் சிறுவன் இறந்து விட்டான் என சாயங்காலம் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கிறது பள்ளி நிர்வாகம். சிறுவனுக்கு உடம்பில் காயங்கள் இருக்கிறது. எப்படி இதுபோன்ற கொடூரங்கள் எல்லாம் நடைபெறுகிறது.
உண்மையிலேயே இதற்கு பொதுமக்கள்தான் ஒரு தீர்ப்பு எழுத வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து நான்கு வருஷம் ஆகிறது. 24 காவல் நிலைய மரணங்கள், படுகொலைகள் என நித்தம், நித்தம் நடைபெறுகிறது. இதை பார்த்துக்கொண்டிருக்கும் பொதுமக்கள் திமுகவுக்கு தக்க தீர்ப்பை தரவேண்டும்.
அஜித்குமார் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அவரது தாயார் சொன்னாங்க. எங்களுக்கு இந்த உதவி எல்லாம் தேவை இல்லை. நீதி கிடைக்க வேண்டும். ஆக இக்கொலையை செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வின்போது பாஜக மாநில நிர்வாகிகள், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.