குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் (ஆகஸ்ட் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிரா ஆளுநருமான அண்ணன் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இண்டி கூட்டணியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.
தென் பாரதத்தில் இருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும்.
இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2022-இல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த போது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளை தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பட்நாயக் அவர்களுக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவிற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்! இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.