‘‘போலீஸிடம் நான் கொடுத்த எல்லா ஆதாரங்களும் தி.மு.க ஐடி விங் நிர்வாகியான ராகுல் என்பவரிடம் சென்றது எப்படி? அந்த நபர் என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்.’’ என -பாதிக்கப்பட்ட மாணவி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் தெய்வா என்கிற தெய்வச்செயல். இவர் தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் நிர்வாகியாகவும் பொறுப்புகள் வகிக்கிறார்.
இந்த நிலையில், அரக்கோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 09.05.2025 அன்று ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்திலும், 16.05.2025 அன்று அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் பாலியல் புகார் மனுக்களை அளித்திருக்கிறார்.
தெய்வா மீது அங்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் நேற்று முன்தினம் (17.05.2025) டி.ஜி.பி அலுவலகம் சென்று மீண்டும் புகாரளித்திருக்கிறார். தனது புகார் மனுவில் திருமண மோசடி, பல பெண்களுடன் தொடர்பு, உடல் முழுவதும் கடித்து சித்ரவதை, கொலை மிரட்டல் என தெய்வா மீது புகார்களை கூறியிருந்தார் அந்த மாணவி.
இந்தநிலையில், அரக்கோணத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய தி.மு.க இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் மீது வன்கொடுமைப் புகார் அளித்த கல்லூரி மாணவியின் வீட்டுக்கு டி.எஸ்.பி ஜாபர் சித்திக் தலைமையிலான போலீஸார் நேற்று மாலை 4 மணியளவில் சென்று மூன்றரை மணி நேரம் விசாரணை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பெண்ணையே மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தன்னையே போலீஸார் குற்றவாளிபோல நடத்துகின்றனர். என்று மாணவி வீடியோ வெளியிட்டிருப்பது இந்த விவகாரத்தில் பெண்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி பேசிய வீடியோவில், ‘‘டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் கொடுத்து இரண்டு நாள்கள் ஆகின்றன. இதுவரை காவல் நிலையத்தில் இருந்து சி.எஸ்.ஆர் நகலோ அல்லது தெய்வச்செயல் மீதான எஃப்.ஐ.ஆரை மாற்றிப் போட்டதற்கான நகலோ எனக்குத் தரவில்லை.
19-5-2025 (அதாவது நேற்று) இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி காலை 11.30 மணிக்கு எனக்குப் போன் செய்து ‘உன்கிட்ட ஸ்டேட்மெண்ட் எடுக்க வேண்டும்’ என்றார். மாலை 4 மணிக்கு என்னோட வீட்டுக்கு வந்த போலீஸார் இரவு 7.30 மணிவரை ஸ்டேட்மெண்ட் எடுத்தார்கள். பாதிக்கப்பட்ட என்னுடைய தரப்பில் இருந்து ஸ்டேட்மெண்ட் பதிவுசெய்யப்படவில்லை. ‘ஸ்டேட்மெண்ட் குறித்து வெளியே சொல்லக்கூடாது’ என்றும் என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
டி.எஸ்.பி ஜாபர் சித்திக்கும் 5.30 மணிக்கு என்னுடைய வீட்டுக்கு வந்தார். ‘20 பெண்கள் பாதிக்கப்பட்டதாக சொல்கிறாயே, அந்தப் பெண்கள் யார் யார்?’ என்று என்னிடமே கேள்விக்கேட்டார். எந்தெந்த பெண்கள் என்று நானா பிடித்துகொடுக்க முடியும். குற்றவாளியின் போன் நெம்பரை ஆய்வு செய்யுங்கள். அப்போது பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். 20 பெண்களா அல்லது அதற்கும் மேற்பட்ட பெண்களா என்பதும் தெரியவரும் என்று டி.எஸ்.பி-யின் கேள்விக்குப் பதில் சொன்னேன்.
அதுவுமில்லாமல் போலீஸிடம் நான் கொடுத்த எல்லா ஆதாரங்களும் தி.மு.க ஐடி விங் நிர்வாகியான ராகுல் என்பவரிடம் எப்படி சென்றது? அந்த நபர் என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கிறார். ஒருப் பெண் தைரியமாக வெளியில் வந்து புகார் தருவதே அரிது. அப்படியிருக்கும்போது எனக்கு முதலில் இருந்த தைரியம் இப்போது சுத்தமாகக் கிடையாது.
தவறு செய்த தெய்வச்செயல் சந்தோஷமாக சுற்றிக்கொண்டிருக்கிறான். ஏதோ நான் குற்றவாளி மாதிரி போலீஸார் என்னிடம் நடந்துகொள்கிறார்கள். பெண்களுக்கு நீதி சொல்ல யாருமே கிடையாதா? தற்கொலை செய்துகொள்வேனோ என்று பயமாக இருக்கிறது. பொதுமக்கள்தான் நீதி வாங்கித் தரவேண்டும்’’ என்றார் கண்ணீர்விட்டு கதறி அழுதபடி.
திமுக ஆட்சி இருக்கிறது என்ற தைரியத்தில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் பல்வேறு குற்றச்சம்பவங்களை தைரியாக செய்து வருகின்றனர். இதுபோன்றவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுகவினர் மீது புகார் அளிப்பவர்கள் மீதே போலீசார் நடவடிக்கை எடுப்பதால்தான் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க தயங்குகின்றனர். மக்கள் விரோத திமுக ஆட்சி பெண்களாலேயே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதுதான் நிதர்சணமான உண்மை.