‘மீண்டும் ஏதாவது தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான் நடக்கும்’ என தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்த ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் தேசிய கொடி பேரணி நடத்தப்படும் என பாஜக தலைமை அறிவித்தது.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் (மே 15) தேசிய கொடி பேரணி நடந்தது. ரயில் நிலையத்தில் இருந்து மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபி வரை பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், தேசியவாதிகள் என பலரும் தேசியை கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

இதற்கிடையே செய்தியாளர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த பேரணி நடைபெறும். ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அவர்களுடன் நாங்கள் என்றும் இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டும் விதமாகவும் தான் இந்த பேரணி நடத்தப்படுகிறது.
நீரும், ரத்தமும் ஒன்றாகாது, யாருக்காகவும் போர் நிறுத்தப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மீண்டும் ஏதாவது தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான் நடக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
மேலும் இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது; பஹல்காமில் மனிதாபிமானமின்றி 26 இந்தியர்களின் உயிரைப் பறித்த பாக்கிஸ்தான் தீவிரவாதிகளுக்கு, ஆபரேஷன் சிந்தூர் வாயிலாக தக்க பதிலடி கொடுத்து, வெற்றி வாகைசூடிய நமது முப்படைகளையும் கொண்டாடும் வகையில், மூவர்ணக் கொடி ஏந்தி, நமது தமிழக பாஜக சார்பாக திருச்சியில் மாபெரும் யாத்திரை நடத்தப்பட்டது.
நமது பாஜக தேசிய செயலாளரும் மாநில மேலிடப் பொறுப்பாளருமான அரவிந்த் மேனன், மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலத் துணைப் பொருளாளர் சிவ சுப்ரமணியம், மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் அணித் தலைவர் சாய் சுரேஷ், திருச்சி நகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து, கட்சி நிர்வாகிகளும், மக்கள் படையும் சூழ வெற்றிப் பேரணி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. மேலும் நிகழ்வில் தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வக்குமார் அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்ததில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
கையில் தேசியக் கொடியுடன் பேரணியாகச் சென்று, கார்கில் போரில் நம் தாய்நாட்டை காக்க வீரமரணம் எய்திய ‘வீர் சக்ரா’ மேஜர். எம்.சரவணன் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு யாத்திரை இனிதே நிறைவுபெற்றது. இவ்வாறு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.