
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, முந்தைய அரசு செயல்படுத்திய பள்ளி பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஆட்சிக்கு வந்த பின் அதை நிறுத்தி வைத்துவிட்டு, ஆட்சி முடியும் தறுவாயில், அத்திட்டத்திற்கு பெயர் மாற்றி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது.
இது ஒருபுறமிருக்க, மாணவர்களுக்கு கொடுத்த மடிக்கணினி முழுவதும் முதல்வர் முக ஸ்டாலின் தன் புகைப்படத்தையும், தன் தந்தையாரின் புகைப்படத்தையும் அழியாதபடி அதில் பொருத்தினர், இதனால் மாணவர்கள் தங்களின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுத்திய இத்திட்டத்தினை முறையாக அனைத்து மாணவர்களுக்கும் கொடுப்பதை தவிர்த்துவிட்டு, வெறும் ஃபோட்டோ சூட் நடத்துவதற்காக குறிப்பிட்ட சில மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது என்று மற்றொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை சட்டக்கல்லூரியில், 5 ஆண்டு படிப்பை பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்கியதால், 3 ஆண்டு படிப்பை மேற்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அரசின் இந்த பாகுபாட்டை கண்டித்து 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயிலில் “நீதி வழங்க வேண்டும் எனவும், பாகுபாடு காட்டாதீர்கள் என்றும்” போராடினர். பெயரளவில் திட்டங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறையில் அது வெற்று காகிதம் போல் தான் உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





