வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சித் கல்லூரியில் நேற்று (ஏப்ரல் 10) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 478 அதிகாரிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்டங்கள் வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சித் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 45 வார பயிற்சியை நிறைவு செய்த 478 அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு இந்திய ராணுவம் சரியான நேரத்தில் நிவாரணம் வழங்கியது பெருமைக்குரியது. இங்கு பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ள ராணுவ வீரர்களுக்குப் பாராட்டுகள். தொழில்நுட்ப வளர்ச்சி, வெளிநாடுகளின் செயல்பாடுகளால் பாதுகாப்பு சூழல் வேகமாக மாறி வருகிறது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் கடினமான பணியை ராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கும் பெரிய பொறுப்பு ராணுவத்தினருக்கு உள்ளது. புதிய தொழில்நுட்பங்களை ராணுவத்தினர் அறிந்துகொள்வது அவசியம்.

உலகமயமாக்கல், தீவிர தேசியவாதம், வளங்கள் பற்றாக்குறை, மனித இடப்பெயர்வு, உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், பேரிடர் அச்சுறுத்தல் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி, புவி அரசியல் ஆகியவை தேசப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுகின்றன.
செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், ட்ரோன், விண்வெளி மற்றும் சைபர் தொழில்நுட்பங்கள் போன்றவை பாதுகாப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. போர்களும் நவீன வடிவங்களைப் பெற்றுள்ளன. உக்ரைன்-ரஷ்யா மோதலில் ட்ரோன்கள் பங்கு அதிகம். உளவு, கண்காணிப்பு, தகவல் தொடர்பு முறைகள் மாறி வருகின்றன. ஆளில்லா உபகரணங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை போரின் தன்மையைப் பாதிக்கின்றன.

எனவே, பாதுகாப்புப் படைகள் கூட்டாகச் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. சைபர் தாக்குதல்கள், தவறானப் பிரச்சாரங்கள் மற்றும் பொருளாதாரப் போர் ஆகியவை ஒரு துப்பாக்கிச் சூடுகூட இல்லாமல் அரசியல்-ராணுவ இலக்குகளை அடையக் கூடிய கருவிகளாக மாறிவிட்டன. இந்தியாவும், உலகமும் பல்வேறு வகையான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கின்றன.

வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம். அண்டை நாடுகளின் மறைமுகப் போர் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. எனவே, ராஜதந்திர நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றம், ராணுவ, பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் களங்களின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வது முக்கியமாகும்.

ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நமது பிரதமரின் ‘சாகர்’ என்ற தொலைநோக்குப் பார்வை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. 2025-ம் ஆண்டை ‘சீர்திருத்த ஆண்டாக’ கடைப்பிடிக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் ‘டீப் பர்பிள்’ என்ற பிரிவை அறிமுகப்படுத்திய பாதுகாப்புப் படைத் தலைவரின் முயற்சியை நான் பாராட்டுகிறேன். தொழில்முறை ராணுவக் கல்வியில் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் இந்தப் பிரிவு முன்னோடியாகத் திகழும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், கல்லூரித் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.