தமிழகத்தை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளும் தவெக அரசு?
எழுதியவர்
ஈரோடு சரவணன்
20 ஆகஸ்ட் 2026
மூத்த எழுத்தாளர்; தமிழக பாஜகவின் மாநிலப் பிரச்சாரப் பிரிவுத் தலைவராக சுமார் 10 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர். நீண்டகாலமாக அரசியல், தேசியம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.
சட்டப்பேரவையில் அறிக்கை வாசிக்கும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்2026 ஆகஸ்ட் 19, புதன்கிழமை சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தாமாக முன்வந்து அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தமிழகத்தில் உள்ள அனைத்து 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கூடுதல் வசதிகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்திக்கவும், வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யவும், அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த வசதிகள் உதவும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்ற கோரிக்கைக்காக போராடி வரும் நிலையில், ஒரு லிட்டர் பாலுக்கு வெறும் ரூ.3 மட்டுமே கூடுதலாக வழங்கிவிட்டு, மறுபுறம் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் அரசு கார், எரிபொருள், பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் செலவுகளுக்காக மாதம் ரூ.75,000, மேலும் உதவியாளருக்காக ரூ.25,000 என மொத்தம் ரூ.1 லட்சம் கூடுதல் செலவினத்தை அரசு ஏற்கும் முடிவு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பால் கொள்முதல் நிலையத்தில் பால் உற்பத்தியாளர்கள் — கோப்புப் படம்
தமிழகம் ஏற்கனவே பல லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையைச் சுமந்து வரும் நிலையில், இந்த முடிவு அரசுக்கு தொடர்ச்சியான கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. 234 எம்.எல்.ஏ.க்களுக்கு கார்கள் சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொந்த வாகனங்கள் இல்லாததால், அவர்கள் தங்கள் தொகுதிகளுக்குள் சென்று மக்களைச் சந்திப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாக காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் எல்.இ. ஜோதிமணி, 2026 ஆகஸ்ட் 12 அன்று சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சினையை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிப் பணிகளை மேற்கொள்ள போக்குவரத்து வசதி அவசியம் என்ற அரசின் விளக்கம் ஒருபுறம் இருந்தாலும், இதற்காக வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து எவ்வளவு தொகை தொடர்ந்து செலவிடப்படும் என்பதே முக்கியமான கேள்வியாகிறது. எவ்வளவு செலவாகும்? ஒரு வாகனத்தின் சராசரி விலை ரூ.20 லட்சம் என உத்தேசித்துக் கொண்டால்: 234 × ரூ.20 லட்சம் = ரூ.46.80 கோடி அதாவது, 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வாங்குவதற்கான ஒருமுறை செலவு சுமார் ரூ.46.80 கோடியாக இருக்கும். இதற்கு மேலாக, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் மாதம் ரூ.1 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும் எனக் கணக்கிட்டால்: எரிபொருள், பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் செலவு – ரூ.75,000 உதவியாளர் செலவு – ரூ.25,000 மொத்தம் – மாதம் ரூ.1,00,000 அதன்படி, 234 × ரூ.1,00,000 = ரூ.2.34 கோடி மாதச் செலவு ஒரு ஆண்டுக்கான தொடர் செலவு: ரூ.2.34 கோடி × 12 = ரூ.28.08 கோடி இதனுடன், வாகனங்களை வாங்குவதற்கான ரூ.46.80 கோடியை சேர்த்தால், முதல் ஆண்டுக்கான மொத்த செலவு சுமார்: ரூ.46.80 கோடி + ரூ.28.08 கோடி = ரூ.74.88 கோடி
அரசு வாகனங்கள் — கோப்புப் படம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம், சென்னை
எனவே, இந்தத் திட்டத்தின் முதல் ஆண்டு செலவு சுமார் ரூ.74.88 கோடியாக இருக்கும். அதன்பிறகு, வாகனக் கொள்முதல் செலவைத் தவிர்த்து, ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.28.08 கோடி தொடர் செலவு ஏற்படக்கூடும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள காலகட்டம்தான் இதன் நிதிச் சுமையைப் பற்றி விவாதிக்க வேண்டிய முக்கிய காரணமாகிறது. தமிழகம் ஏற்கனவே மிகப்பெரிய கடன் சுமையைச் சந்தித்து வருகிறது. அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மாநிலத்தின் நிலுவைக் கடன் சுமார் ரூ.13.18 லட்சம் கோடி எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பின்னணியில், ரூ.74.88 கோடி முதல் ஆண்டு செலவு, மாநிலத்தின் மொத்தக் கடனுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறிய தொகையாகத் தோன்றலாம்.
ரூ.74.88 கோடி மாநிலத்தின் மொத்தக் கடனுடன் ஒப்பிடுகையில் சிறியதாக இருக்கலாம். ஆனால், அது முதல் ஆண்டில் மட்டும் பொதுமக்களின் பணத்தில் இருந்து செலவிடப்படும் ரூ.74.88 கோடி. அதன்பிறகு, ஆண்டுதோறும் தொடர்ச்சியான செலவினமும் ஏற்படும். ஏற்கனவே வழங்கப்படும் சம்பளம் மற்றும் படிகள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சம்பளம் மற்றும் படிகளையும் இந்த விவாதத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு சட்டமன்ற செயலகம் வெளியிட்டுள்ள உறுப்பினர்களுக்கான வசதிகள் தொடர்பான விவரங்களின்படி, அடிப்படை சம்பளம் மற்றும் பல்வேறு நிரந்தரப் படிகள் உள்ளிட்ட மாதாந்திர தொகை ரூ.1,05,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அடிப்படை சம்பளம் – ரூ.30,000
- ஈட்டுப்படி – ரூ.10,000
- தொலைபேசி படி – ரூ.7,500
- தொகுதிப்படி – ரூ.25,000
- அஞ்சல் படி – ரூ.2,500
- ஒருங்கிணைந்த படி – ரூ.5,000
- வாகனப்படி – ரூ.25,000
என மொத்தம் ரூ.1,05,000 வழங்கப்படுகிறது.
இந்தத் தொகையில் பயணப்படி போன்ற செலவின அடிப்படையிலான கொடுப்பனவுகள் சேர்க்கப்படவில்லை. மேலும், சட்டப்பேரவை மற்றும் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.500 தினப்படி வழங்கப்படுவதாக உறுப்பினர்களுக்கான வசதிகள் தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில் மற்றும் சாலைப் பயணங்களுக்கான தனிப்பட்ட பயணப்படி விதிமுறைகளும் உள்ளன. உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வரை ரயில் போக்குவரத்து தொடர்பான தொகை இரண்டு தவணைகளில் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவச் சிகிச்சை மற்றும் குறிப்பிட்ட மருத்துவச் செலவுகளுக்கான திருப்பிச் செலுத்தும் வசதியும் உள்ளது. முக்கிய அறுவைச் சிகிச்சைகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு நிதியுதவி வழங்கும் வசதியும் உள்ளது.
புதிய திட்டத்தால் மாத வருவாய் ரூ.2.05 லட்சமா?
2026 ஆகஸ்ட் 19 அன்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி, அனைத்து 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகன வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதனுடன், வாகனம், எரிபொருள், ஓட்டுநர், பராமரிப்பு மற்றும் உதவியாளர் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதம் ரூ.1 லட்சம் கூடுதல் ஆதரவு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை ஏற்கனவே வழங்கப்படும் ரூ.1.05 லட்சம் மாதாந்திர சம்பளம் மற்றும் நிரந்தரப் படிகளுடன் சேர்த்துப் பார்த்தால், ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கான மாதாந்திர சம்பளம் மற்றும் நிரந்தரப் படிகளின் மொத்தத் தொகை ரூ.2.05 லட்சமாகும். எனினும், இதில் அரசு வாகனத்தின் ஒருமுறை கொள்முதல் செலவு மற்றும் அரசால் நேரடியாக ஏற்கப்படும் பிற செலவுகள் தனித்தனியாகக் கணக்கிடப்பட வேண்டும்.
உண்மையில் கார் இல்லாதவர்களுக்குத்தானா இந்த வசதி?
இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக, சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் சொந்த வாகனம் இல்லாததால் தொகுதிக்குள் சென்று பணியாற்றுவதில் சிரமம் இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், இந்த விவாதத்தில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தங்களது தேர்தல் வேட்புமனுக்களில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களும் பரிசீலிக்கப்பட வேண்டியவை.
சட்டப்பேரவையில் வாகன வசதி தொடர்பாக கோரிக்கை எழுப்பிய உறுப்பினர்களில் சிலருக்கு ஏற்கனவே வாகனங்கள் இருப்பதாக அவர்களின் தேர்தல் வேட்புமனு விவரங்கள் குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, ஜோதிமணி தனது வேட்புமனுவில் டொயோட்டா எட்டியாஸ் கார் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும், இனோவா கிறிஸ்டா கார் வழங்க வேண்டும் எனக் கோரிய சட்டமன்ற உறுப்பினர் சண்முகன் தனது வேட்புமனுவில் இரண்டு பென்ஸ் கார்கள், ஒரு கிறிஸ்டா மற்றும் ஒரு வோக்ஸ்வேகன் கார் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், "காதல் தோல்வி, வேலையும் இல்லை, காரும் இல்லை" என்று கூறிய சபரி ஐங்கரன் தனது வேட்புமனுவில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கார் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, தனிப்பட்ட முறையில் வாகனம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தேவையின் அடிப்படையில் அரசு போக்குவரத்து வசதியை வழங்குவதற்குப் பதிலாக, அனைத்து 234 உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான முழுமையான வசதித் தொகுப்பை வழங்குவது நிதி ரீதியாக நியாயமானதா என்ற கேள்வி எழுகிறது.
தேவைக்கேற்ப வசதி வழங்கியிருக்கலாமே?
தொகுதியின் பரப்பளவு, புவியியல் அமைப்பு, கிராமப்புற அல்லது நகர்ப்புறத் தன்மை, உறுப்பினரின் தற்போதைய வளங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான ரூ.1 லட்சம் மாதாந்திர ஆதரவை வழங்குவது நிர்வாக ரீதியாக எளிமையானதாக இருக்கலாம்.
ஆனால், மாற்று வழிகளும் அரசிடம் இருந்தன. குறிப்பிட்ட தொகுதிகளுக்கு தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல், பகிரப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துதல், அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கான செலவுகளை மட்டும் திருப்பிச் செலுத்துதல் அல்லது உண்மையான தேவையின் அடிப்படையில் போக்குவரத்து உதவி வழங்குதல் போன்ற முறைகளையும் அரசு பரிசீலித்திருக்க முடியும்.
ஒருமுறை வழங்கப்பட்ட அரசு வாகனங்கள், ஓட்டுநர்கள், எரிபொருள், பராமரிப்பு மற்றும் உதவியாளர் செலவுகள் போன்றவை எதிர்கால அரசுகளாலும் தொடர்ந்து ஏற்க வேண்டிய நிரந்தரச் செலவுகளாக மாறக்கூடும். அதனால், இது வெறும் ரூ.74.88 கோடி என்ற ஒரு முறை கணக்காகப் பார்க்கப்பட வேண்டிய விவகாரம் அல்ல. எதிர்கால ஆண்டுகளில் உருவாகும் தொடர்ச்சியான நிதிப் பொறுப்பாகவும் இதைப் பார்க்க வேண்டும். தமிழகத்தின் தற்போதைய கடன் நிலைமையில், ஒவ்வொரு புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அதன் அவசியம், பயன், செலவு மற்றும் நீண்டகால நிதி விளைவுகள் ஆகியவை தீவிரமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். தவெக அரசு "புதிய தொடக்கம்" என்ற அரசியல் வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்திருந்தால், சட்டமன்ற உறுப்பினர்களின் பணிக்குத் தேவையான வசதிகள் எவை, அவர்களின் தனிப்பட்ட வசதிக்காக வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து வழங்கப்படும் சலுகைகள் எவை என்பதைத் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய பொறுப்பு அதற்கு உள்ளது.
கடன் சுமை அதிகரித்து வரும் நிலையில், "சிறிய செலவு" என்று ஒவ்வொரு புதிய தொடர் செலவையும் புறக்கணித்தால், அவை அனைத்தும் சேர்ந்து நாளைய தமிழகத்தின் நிதிச் சுமையாக மாறக்கூடும். அதுவே இந்த அறிவிப்பின் பின்னால் எழும் மிக முக்கியமான நிதி நிர்வாகக் கேள்வியாகும்.