தவெகவின் 100 நாள் ஆட்சியின் விமர்சனம்
எழுதியவர்
ஈரோடு சரவணன்
29 ஆகஸ்ட் 2026
மூத்த எழுத்தாளர்; தமிழக பாஜகவின் மாநிலப் பிரச்சாரப் பிரிவுத் தலைவராக சுமார் 10 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர். நீண்டகாலமாக அரசியல், தேசியம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.
தவெக ஆட்சி அமைந்ததே ஒரு விபத்தாகும். திமுக கூட்டணியில் இருந்த விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன், 21-க்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இதுவே தமிழக வெற்றிக் கழகத்தின் ‘சகுனி ஆட்டம்’ தொடங்கியதற்கான அடையாளமாகும். 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்த ஆட்சியின் அவலங்களை அலச வேண்டியது ஒரு பொறுப்புள்ள குடிமகனின் கடமையாகும்.
சட்டமன்ற செயல்பாடுகள்
தவெக சட்டமன்ற உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் புதிய முகங்கள். சட்டமன்ற நிகழ்வுகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான விதிமுறைகள்கூட பலருக்குத் தெரியாத நிலை காணப்படுகிறது. இந்த 100 நாள் ஆட்சிக் காலத்தில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சில அமைச்சர்கள்—குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, சி.டி. நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன்—மட்டுமே பதிலளிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அனைத்து துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும் ஒருசிலரே பதிலளிப்பது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை அல்ல.
சிறுபான்மையினர் தொடர்பான அணுகுமுறை
தங்கள் கட்சி அனைத்து மதத்தினருடனும் இணக்கமாக நடந்து கொள்ளும் என்று தவெக தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கு சாதகமான அரசாகவே இந்த அரசு செயல்படுகிறது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று முழங்கும் பள்ளிக் கல்வி அமைச்சர், சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பேசியதாகக் கூறப்படும், “எனக்கு தமிழ் இலக்கணம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், எனக்கு ஒரு மொழியை கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது. அது அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தமிழ் படித்தாலும் இங்குள்ள பாதிப் பேருக்கு இந்த நற்பண்புகள் புரியாது” என்ற கருத்தை ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
இதுபோன்ற கருத்துகள் சட்டமன்றத்தில் மதப்பிரச்சாரத்திற்கு இடமளிப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். 2026 மே 13 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற பின்னர், விஜய், “யாராவது இதை ஒரு சிறுபான்மை அரசாங்கம் என்று கருதினால், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு சிறுபான்மை அரசாங்கம் என்று நாங்களே கூறுகிறோம்” என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பதவியேற்பு நாளில், “எனது சிறுபான்மை சகோதர, சகோதரிகளே, TVK அரசு உங்களுடன் உறுதியாக நிற்கும்” என்று அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கருத்துகளையே அவரது விமர்சகர்கள் முக்கிய அரசியல் ஆதாரமாக முன்வைக்கின்றனர். ஒரு முதலமைச்சர் சிறுபான்மையினரின் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கமாகத் தன்னை வெளிப்படுத்துவது இயல்பான அரசியல் நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில், பெரும்பான்மை சமூகத்தின் மத உணர்வுகளுக்கும் சமமான அணுகுமுறை இருக்க வேண்டுமா என்பதே இங்கு எழும் முக்கியமான கேள்வியாகும்.
சபாநாயகரின் செயல்பாடுகள்
2026 மே 12 அன்று ஜான் கிறிஸ்டியன் தேவரம் பிரபாகரை சபாநாயகர் பதவிக்கு விஜய் தனிப்பட்ட முறையில் முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. பிரபாகர் கிறிஸ்தவ மதப்பணிகளுடன் தொடர்புடையவர் என்றும், 2004ஆம் ஆண்டு முதல் தனிப்பட்ட முறையில் பைபிள் விநியோகப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் பதவியேற்ற பின்னர், அவர் சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டியதும் அரசியல் விவாதத்திற்கு வழிவகுத்தது. அதனைத் தொடர்ந்து, 2026 ஜூன் 9 அன்று தமிழ்நாடு கிறிஸ்தவ தேவாலயங்களின் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது, சிறுபான்மை மக்களுக்கான அரசின் அக்கறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் செல்வதாகவும் அவர் கூறியதாகத் தகவல்கள் வெளியாகின.
தேவாலயக் கட்டுமானத்திற்கான தடையில்லாச் சான்றிதழ்களை விரைவுபடுத்துதல், கிறிஸ்தவ சமூகத்திற்கான தனிப்பட்ட கல்லறைத் தளங்கள், சுவிசேஷகர்கள் மற்றும் தேவாலயப் பணியாளர்களுக்கான உதவித்தொகை, இஸ்ரேலுக்கான புனிதப் பயணத்திற்கான அரசு மானியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் போதகர்கள் கூட்டமைப்பின் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார். 2026 ஜூலை 25 அன்று இயேசுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “நற்செய்தியைப் பிரகடனம் செய்வது மேலும் மேலும் கடினமாகி வரும் ஒரு காலகட்டத்தை நோக்கி நாம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டப்படி நடுநிலை வகிக்க வேண்டிய சபாநாயகர், மத அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் வெளிப்படையாகப் பங்கேற்பது சரியா என்ற கேள்வியையும் இதனால் விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.
தவெக அரசின் மீது எழும் மதச்சார்பான விமர்சனம்
சினிமா நடிகர் விஜய், முதலமைச்சர் விஜய்யாக மாறிய பிறகு, தமிழக சட்டசபை கிறிஸ்தவ திருச்சபை போலவும், தவெகவும் அதன் அரசும் கிறிஸ்தவப் பிரசார அமைப்புகளைப் போலவும் மாறி வருகின்றன என்ற கடுமையான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. சட்டப்பேரவையில் சபாநாயகரே கிறிஸ்தவ மத வசனங்களை மேற்கோள் காட்டுவது, பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் மரிய வில்சன் ஜெபமாலை அணிவது, தேவாலய நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பது ஆகியவை, தவெக அரசு வெளிப்படையாக கிறிஸ்தவ ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
100 நாள் ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு
இந்த 100 நாட்களில் தவெக ஆட்சியில் தமிழகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் காவல் நிலைய மரணங்களும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் மீள்வதற்குள், தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியர் அருணாச்சலம் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்த பாலாஜி என்பவரின் மரணம், சென்னையைச் சேர்ந்த ஓட்டுநர் வெங்கடேசன் காவல்துறையின் சித்திரவதையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் ஆகியவையும் கேள்விகளை எழுப்பியுள்ளன. காவல் நிலைய மரணங்களை எதிர்த்து கடந்த காலங்களில் கடுமையாகக் குரல் எழுப்பிய முதலமைச்சர் விஜய், தனது 100 நாள் ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் காவல் நிலைய மரணங்கள் குறித்து மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
தமிழகத்தில் தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் 187 படுகொலைகள், 358 பாலியல் வன்கொடுமை வழக்குகள், குழந்தைகளுக்கு எதிரான 188 குற்றச்சம்பவங்கள், 12 ஆணவக் கொலைகள் மற்றும் 7 காவல் நிலைய மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. காவல்துறையைத் தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர், இந்த விவகாரங்களில் போதிய கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை என்ற விமர்சனமும் எழுகிறது.
முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள்
கடந்த கால ஆட்சிகளைப் போலவே, ‘வெற்றித் தமிழ்நாடு’ மாநாட்டில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 ஒப்பந்தங்கள் உள்ளிட்ட ரூ.1,02,514 கோடி முதலீடுகள் கடந்த மூன்று மாதங்களில் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தங்களின் தன்மை என்ன? ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் தொடங்கும் தொழிற்சாலைகள் எங்கு அமைய உள்ளன? அந்தப் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டதா அல்லது இனிமேல்தான் கையகப்படுத்தப்படுமா? ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் என்ன? போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில் இல்லை. ஆந்திரப் பிரதேச அரசு புதிதாகத் தொழில் தொடங்கும் தொழிலதிபர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வெளிப்படையாக அறிவித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வர வேண்டிய சில தொழில்கள் ஆந்திராவுக்குச் செல்கின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அரசு குறிப்பிட்டுள்ள 1,21,788 பேருக்கு எத்தனை ஆண்டுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை.
வெளிப்படைத்தன்மை கொண்ட அரசு என்று கூறிக்கொண்டே, அறிவிப்புகளில் மட்டுமே வெளிப்படைத்தன்மையைக் காட்டுவது தவெக அரசின் 100 நாள் சாதனையாகிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. தன்னை வைத்து படம் எடுத்தவர்களுக்கு அரசில் பதவி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர், கர்நாடகத்தைச் சார்ந்தவரும் ஜனநாயகத்தின் படத்தை தயாரித்தவருமான கே.வெங்கட் நாராயணா, அமைச்சருக்குரிய அந்தஸ்துள்ள தமிழகத்தின் பிரதிநிதியாக டெல்லியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவரைப் போலவே, அர்சனா கல்பத்தி, அறநிலையத்துறை அறங்காவலர் நியமனக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே 100 நாள் ஆட்சியில் படத்தயாரிப்பாளர்களுக்கு அரசு பதவி வழங்குவது தான் சாதனையா?
ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள்
ஊழலுக்கு எதிரான கட்சியாக தன்னை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த தவெக அரசு இரண்டு வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டது. அந்த வெள்ளை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீது வழக்குத் தொடர்வதில் ஏன் காலதாமதம் ஏற்படுகிறது? மத்திய பொருளாதார குற்றப்பிரிவு எழுதிய கடிதத்தின் அடிப்படையில்தான் நேரு மீது வழக்குத் தொடரப்பட்டதாகக் கூறப்படுகிறது. டாஸ்மாக்கில் ‘பார்ட்டி ஃபண்ட்’ தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டாலும், அந்த நிதி எந்தக் கட்சிக்குச் சென்றது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
முன்னாள் அமைச்சர்களான நேரு மற்றும் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகள் மத்திய பொருளாதார குற்றப்பிரிவின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலானவை என்றால், தவெக அரசு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர்கள் மீது ஏன் தனியாக வழக்குத் தொடரவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான அரசின் பல்வேறு நடவடிக்கைகள் நீதிமன்றத் தடைகளால் முடக்கப்படுவது, அரசின் சட்ட ஆலோசகர்களிடமிருந்து போதிய சட்ட ஆலோசனை பெறப்படவில்லையோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. தனது மேஜையின் மீது மூன்று கோப்புகள் இருப்பதாகக் கூறும் முதலமைச்சர், அந்தக் கோப்புகள் எவை என்பதை சட்டமன்றத்தில் விளக்காமல் சினிமா பாணியில் பேசுவது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல.
பெண்களின் பாதுகாப்பு
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க ‘சிங்கப் பெண்’ அதிரடிப் படையை உருவாக்கியுள்ளதாக தவெக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. காவல்துறையில் ஏற்கனவே ஆள் பற்றாக்குறை நிலவும் நிலையில், பணியில் உள்ள பெண் காவலர்களையே இந்தப் படையில் நியமிப்பது நிரந்தரத் தீர்வாகாது என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தவெகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 107 பேரில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும், அவர்களில் 19 பேர் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற தீவிர குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்து சமய அறநிலையத் துறை
இந்து சமய அறநிலையத் துறையை வகிக்கும் அமைச்சர், கோவில் நிலங்கள் மோசடியாக விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி வழக்குத் தொடர்ந்தவர். சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறநிலையத் துறை அறிக்கையின்படி, கோவில்களுக்குச் சொந்தமாக 5.24 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகவும், சில ஆண்டுகளுக்குப் பிறகு 4.72 லட்சம் ஏக்கர் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலம் எங்கே சென்றது என்பது குறித்து அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்துக் கடவுள்களை இழிவாக பேசியும், சனாதன தர்மத்தை கொச்சைப்படுத்தியும் பேசிய ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு சட்டமன்றத்தில் புகழ் அஞ்சலி செலுத்தும் ஈனத்தனமான செயல்தான் 100 நாள் ஆட்சியில் நடந்துள்ளது.
இந்த அரசு வெளிப்படையான அரசு என்றும், தூய்மையான அரசு என்றும் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட 50 கோவில்களின் கணக்குத் தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கையின் பின்னணியில் யாருடைய நலன் பாதுகாக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுகிறது.
மின்சாரத் திட்டத்தில் குழப்பம்
100 நாள் ஆட்சியில் தவெக அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களுக்கு நிதி எவ்வாறு ஒதுக்கப்படுகிறது என்பது குறித்து போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை. 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், மின் மீட்டர் கணக்கீட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு ஜூலை மாத மின் கட்டணம் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகமாக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மின்துறை அமைச்சர், ஊழியர் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டுகிறார். ஊழியர் பற்றாக்குறை இருந்தது என்றால், வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அது ஏன் குறிப்பிடப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
மகளிர் மற்றும் விவசாயிகள் நலன்
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் ரூ.560 கோடி மதிப்பிலும், ‘அண்ணனின் சீர்’ திட்டம் ரூ.812 கோடி மதிப்பிலும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 14.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, வேறு விதமாக கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்கின்றன என்ற விமர்சனமும் உள்ளது.
மேலும், முந்தைய அரசு செயல்படுத்தி வந்த சில திட்டங்களுக்குப் புதிய பெயர் சூட்டி அறிவிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டங்கள் இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.