சோனியாவின் சுயசரிதையில் காணப்படும் முரண்பாடு
எழுதியவர்
ஈரோடு சரவணன்
13 நவம்பர் 2026
மூத்த எழுத்தாளர்; தமிழக பாஜகவின் மாநிலப் பிரச்சாரப் பிரிவுத் தலைவராக சுமார் 10 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர். நீண்டகாலமாக அரசியல், தேசியம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.
தனது நினைவுக் குறிப்பு நூல் ‘Belonging: A Journey of Love’ உடன் சோனியா காந்திசோனியா காந்தியின் சுயசரிதையில், 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க முயன்றபோது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து புதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த விளக்கங்கள் அன்றைய அரசியல் நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது பல்வேறு கேள்விகளையும் முரண்பாடுகளையும் எழுப்புகின்றன.
2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 145 இடங்களைப் பெற்றதாகத் தேர்தல் ஆணையம் குறிப்பிடுகிறது. தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், பல மாநிலக் கட்சிகளின் ஆதரவையும், இடதுசாரிக் கட்சிகளின் வெளிப்புற ஆதரவையும் பெற்று ஆட்சியமைக்கும் நிலையை சோனியா காந்தி உருவாக்கினார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், பிரதமர் பதவியை ஏற்க சோனியா காந்தி மறுத்தது குறித்தும் அவரது சுயசரிதையில் விளக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் அவர் பிரதமர் பதவியை ஏற்க வேண்டாம் என்று விரும்பியதாகவும், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகளைத் தொடர்ந்து, பிரதமர் பதவி பாதுகாப்பு அபாயத்துடன் தொடர்புடையதாக அவர்கள் கருதியதாகவும் சோனியா குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால், ஏன் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் என்பதைக் குறிப்பிடவில்லை.
2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்தித்தபோது, காங்கிரஸ் கூட்டணியில் திமுக, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, லோக் ஜனசக்தி கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இவர்களின் ஒப்புதலுடனும், சோனியா காந்தி பிரதமர் பதவிக்கு ஆதரவு அளிப்பதாகவும் எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டார்கள் என்ற உண்மையைக் கூட எழுதவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், மே 15ஆம் தேதி சோனியா காந்தி காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதவிக்கான தலைவராகவும் அவர் முன்னிறுத்தப்பட்டார். ஆனால், இந்த அரசியல் பின்னணியையும், அப்போது நடைபெற்ற நிகழ்வுகளையும் தனது சுயசரிதையில் அவர் விரிவாக விளக்கவில்லை. மே 18ஆம் தேதி குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் வரையிலும், பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன் என்று சோனியா காந்தி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மாறாக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களுடன் குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் அரசியல் நடைமுறையில் ஈடுபட்டிருந்தார். குடியரசுத் தலைவரைச் சந்தித்த பின்னர், அதே நாளில் பிரதமர் பதவியை ஏற்க மறுப்பதாக அறிவித்தார். இதற்குப் பின்னணியாக, அவரது வெளிநாட்டுப் பிறப்பை முன்வைத்து எழுந்த அரசியல் எதிர்ப்பும், குடும்பத்தினரின் பாதுகாப்புக் கவலைகளும் அன்றைய செய்திகளில் குறிப்பிடப்பட்டன.
ஆகவே, அவர் ஆரம்பத்திலிருந்தே பிரதமர் பதவியை ஏற்க விரும்பவில்லையா அல்லது அரசியல் சூழ்நிலையின் காரணமாக இறுதிக்கட்டத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டாரா என்பது ஆராயப்பட வேண்டிய கேள்வியாகும். பிரதமராக வருவதற்கு விருப்பமில்லை என்ற முடிவு ஏற்கெனவே அவரிடம் இருந்திருந்தால், அதை ஏன் தேர்தலுக்கு முன்போ அல்லது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு முன்போ வெளிப்படுத்தவில்லை?
இதற்கு சோனியா காந்தி தனது 2026ஆம் ஆண்டு சுயசரிதையான Belonging: A Journey of Love நூலில் சில முக்கியமான தகவல்களைத் தெரிவித்துள்ளார். 2026 நவம்பர் 10ஆம் தேதி வெளியிடப்பட்ட அவரது சுயசரிதைப் பகுதியின்படி, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் இதுகுறித்து விவாதித்ததாகக் கூறுகிறார். அப்போது பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன் என்று அவர்களிடம் தெளிவாகத் தெரிவித்ததாகவும் எழுதுகிறார்.
ஆனால், அந்த முடிவைத் தனது நெருங்கிய காங்கிரஸ் தலைவர்களிடம்கூட தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள் தலைமைப் போட்டி உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை ரகசியமாக வைத்திருந்ததாக அவர் விளக்குகிறார்.
இரண்டாவது – கூட்டணிக் கட்சித் தலைவர்களின் அழுத்தம்
தேர்தல் வெற்றிக்குப் பின்னர், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சோனியா காந்தியின் இல்லத்திற்கு வந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பிரதமர் பதவியை ஏற்கும்படி வற்புறுத்தியதாக அவர் எழுதுகிறார். கூட்டணித் தலைவர்கள் வற்புறுத்தியதாக அன்றைய தினம் எந்தத் தலைவர்களும் குறிப்பிடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவர்கள் தனது முடிவை ஏற்க மறுத்து, தன்னைச் சூழ்ந்துகொண்டு வற்புறுத்தியதாகவும், அந்தச் சூழலில் தான் மெதுவாக 'Theek Hai' (சரி) என்று கூறியதாகவும் தெரிவிக்கிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதைத் தனது சம்மதமாக எடுத்துக்கொண்டு வாழ்த்துத் தெரிவித்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்தியில் சரி எனக் கூறிவிட்டு, அது சம்மதமில்லாமல் வேறு அர்த்தம் உண்டா என்பதைத் திருமதி சோனியா காந்தி தற்போது குறிப்பிட வேண்டும்.
மூன்றாவது – ராகுல் காந்தியின் எதிர்ப்பு
பிரியங்கா காந்தி இந்தச் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், உடனடியாக ராகுல் காந்தியிடம் சென்று தெரிவித்ததாகவும் சோனியா எழுதுகிறார். இதைக் கேட்ட ராகுல் காந்தி கோபமடைந்து, தனது தாயார் பிரதமர் பதவியை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தியதாகவும், பிரியங்காவும் தனது முடிவில் உறுதியாக இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் குறிப்பிடுகிறார்.
நான்காவது – வெளிநாட்டுப் பிறப்பை முன்வைத்து அரசியல் பிரச்சினை உருவாகும் என்ற அச்சம்
பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தனது இத்தாலியப் பிறப்பை அரசியல் பிரச்சினையாக்கும் என்றும், இதனால் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்படலாம் என்றும் கருதியதாக சோனியா விளக்குகிறார். இதன் மூலம், பிரதமர் பதவியை ஏற்க விருப்பமில்லை என்ற முடிவு தேர்தலுக்கு முன்பே அவரிடம் இருந்தது தெரியவருகிறது. ஆனால், கட்சிக்குள் தலைமைப் போட்டி உருவாகிவிடக் கூடாது என்பதற்காக அந்த முடிவை ரகசியமாக வைத்திருந்ததாகக் கூறுகிறார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்தால் ஒரு கட்டத்தில் சம்மதம் தெரிவித்தார். பின்னர் குடும்பத்தினரின் எதிர்ப்பு மற்றும் வெளிநாட்டுப் பிறப்பை முன்வைத்து அரசியல் பிரச்சினை உருவாகும் என்ற அச்சம் ஆகியவற்றின் காரணமாகத் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக விளக்குகிறார்.
2004ஆம் ஆண்டு மே மாதம், டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பூர்வீகம் மற்றும் குடியுரிமை நிலை காரணமாக அவர் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகிக்கச் சட்டப்படி தகுதியற்றவர் என்று வாதிட்டார். டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் கூற்றுப்படி, இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகள், சோனியா காந்தி பிரதமர் பதவி வகிப்பதற்குச் சட்டரீதியான தடைகளை ஏற்படுத்துவதாக இருந்தன. குடியரசுத் தலைவர் கலாமுக்கு தான் எழுதிய கடிதமும், விடுத்த எச்சரிக்கைகளுமே சோனியா காந்தியின் பிரதமர் நியமனத்தைத் தடுப்பதில் தீர்க்கமான காரணியாக அமைந்தன என்றும் டாக்டர் சுவாமி கூறினார்.
தேர்தலுக்கு முன்பே பிரதமர் பதவியை ஏற்க விருப்பமில்லை என்று முடிவு செய்திருந்தால், அதை ஏன் மக்களிடமும் கூட்டணிக் கட்சிகளிடமும் தெரிவிக்கவில்லை? இது அவரது சுயசரிதையில் அவர் அளிக்கும் விளக்கத்தையும், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளையும் ஒப்பிட்டு ஆராய வேண்டிய முக்கியமான கேள்வியாகும்.
மேலும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தன்னைச் சூழ்ந்து நின்று வற்புறுத்தியதாகவும், அந்தச் சூழலில் தான் சம்மதம் தெரிவித்ததாகவும் சோனியா கூறுவது அவரது தனிப்பட்ட நினைவுப் பதிவு. அந்தச் சம்பவம் அவர் விவரித்த அதே விதத்தில் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் சுயாதீன ஆவணங்கள் அல்லது பிற தலைவர்களின் நேரடி விளக்கங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படவில்லை.
எனவே, 2004ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது தொடர்பாக சோனியா காந்தி தற்போது அளிக்கும் விளக்கத்திற்கும், அன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகள் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியவையாகும்.