சோனியா காந்தியின் சுயசரிதை சர்ச்சை
எழுதியவர்
ஈரோடு சரவணன்
5 செப்டம்பர் 2026
மூத்த எழுத்தாளர்; தமிழக பாஜகவின் மாநிலப் பிரச்சாரப் பிரிவுத் தலைவராக சுமார் 10 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர். நீண்டகாலமாக அரசியல், தேசியம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதி வரவிருக்கும் சுயசரிதையான ‘Belonging: A Journey of Love’ நூல் தற்போது அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பெங்குயின் ரேண்டம் ஹவுஸின் சர்வதேச பதிப்பகமான ஆல்ஃபிரட் ஏ. நாஃப் மூலம் நவம்பர் 10ஆம் தேதி இந்த நூல் சர்வதேச அளவில் வெளியாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த நூலை வெளியிடும் பதிப்பாளர் தாங்கள் அல்ல என்று பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து சர்ச்சை உருவானது.
கையெழுத்துப் பிரதியைப் பரிசீலிக்கும் போது உண்மைச் சரிபார்ப்பு மற்றும் தலையங்கப் பரிந்துரைகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, நூலை இந்தியாவில் வெளியிடுவதில் இருந்து பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா விலகியதாகக் கூறப்பட்டது. இந்த முடிவை காங்கிரஸ் தலைவர்கள் கேள்விக்குள்ளாக்கினர். நூலில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ், சீனா உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் இடம்பெற்றுள்ளதால், நூலில் மாற்றங்களைச் செய்யவோ அல்லது அதன் வெளியீட்டை கைவிடவோ பாஜக தரப்பிலிருந்து பதிப்பகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. சோனியா காந்தி குறிப்பிட்டுள்ள சர்ச்சைக்குரிய விவகாரம்.
இந்திய எல்லைக்குள் சீனாவின் ஊடுருவல்கள் மற்றும் எல்லையில் நிலவும் தற்போதைய சூழல் ஆகியவற்றை முக்கியமாகக் கையாள்கிறது என்று இந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது, சோனியா காந்தியும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அவரது மகன் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸும் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் பலமுறை எழுப்பிய ஒரு பிரச்சினையாகும். இந்த பிரச்சினைக்கு பல முறை நாடாளுமன்றத்திலும், பொது வெளியிலும் பல விளக்கங்களை கொடுத்த பின்னரும், தனது சுயசரிதை புத்தகத்தில் மீண்டும் குறிப்பிடுவது வெட்கக்கேடானது. இந்த கருத்து சீனாவிற்கு ஆதரவான கருத்தாகவே கருதப்படுகிறது.
திருமதி சோனியா காந்திக்கு இந்திய வரலாறும் தெரியாது, காங்கிரஸ் கட்சியின் வரலாறும் தெரியாது. 1962 போரின் மேற்குப் பகுதியில், அன்றைய ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ள அக்சாய் சின் (Aksai Chin) மீது சீனா தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியது. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பகுதி சுமார் 38,000 சதுர கி.மீ. ஆகும். அக்சாய் சின் பகுதியில் சீனாவின் ஊடுருவலும் கட்டுப்பாடும் 1950களிலேயே தொடங்கியிருந்தன; 1962 போர் அந்தக் கட்டுப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியது. 1962 போரின் முடிவில், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியப் பகுதி சுமார் 38,000 ச.கி.மீ. என இந்திய அரசு தொடர்ந்து தெரிவித்துள்ளது. 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் சீனா பிடித்த பகுதிகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பற்றிய குறிப்பு சோனியா தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருப்பாரா என்பது தெரியவில்லை. அக்சாய் சின் பகுதியில் சீனா 1950களிலேயே தனது நிலையை வலுப்படுத்தியது மட்டுமில்லாமல், குறிப்பாக சின்ஜியாங்–திபெத்தை இணைக்கும் சாலை அமைக்கப்பட்டது. 1962 போருக்கு முன்பே சீனப் படைகள் அக்சாய் சின் பகுதியில் முன்னேறியிருந்ததாக 1962 மார்ச் மாத இந்திய வெளியுறவு அமைச்சக ஆவணமும் குறிப்பிடுகிறது. இந்த வரலாறு சோனியாவிற்கு தெரியுமா? அல்லது ராகுல் காந்திக்காவது தெரியுமா?
2008-ல் காங்கிரஸ் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CPC) இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஆகும். இதில் சோனியா காந்தி நேரடியாக கையெழுத்திடவில்லை; அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த ராகுல் காந்தி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறை அமைச்சர் Wang Jiarui உடன் கையெழுத்திட்டார். சோனியா காந்தி மற்றும் சீனாவின் அப்போதைய துணை அதிபரும், தற்போதைய அதிபருமான ஷி ஜின்பிங் முன்னிலையில் அது கையெழுத்தானது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் இல்லாத ராகுல் காந்தி எவ்வாறு சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது என்ற கேள்விக்கு விடை கிடையாது. தனது சுயசரிதையில் இது பற்றி குறிப்பிடுவாரா என்பதும் தெரியவில்லை.
இரு கட்சிகளுக்கும் இடையே உயர்மட்ட பரிமாற்றங்களை ஏற்படுத்துதல்
காங்கிரஸ் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இடையே வழக்கமான தொடர்புகளை ஏற்படுத்துவது. இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஆலோசனை
இந்தியா–சீனா தொடர்பான முக்கியமான இருதரப்பு விவகாரங்கள் மட்டுமின்றி, பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் ஆலோசனை நடத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் பரிமாற்றம் இரு கட்சிகளின் இளம் தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு இடையே தொடர்புகளை அதிகரிப்பது MoU-வின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. பின்னர் சோனியா காந்தியும் இந்த MoU-வின் முக்கிய அம்சமாக இளைஞர் தலைமைத்துவப் பரிமாற்றத்தை குறிப்பிட்டுள்ளார்.
2020-ல் கல்வான் மோதல் உள்ளிட்ட இந்தியா–சீனா பதற்றம் அதிகரித்தபோது, இந்த 2008 MoU மீண்டும் அரசியல் விவாதத்துக்கு வந்தது. குறிப்பாக, MoU-வின் முழு ஆவணம் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்றும், அதில் "உயர்மட்ட தகவல் பரிமாற்றம்" மற்றும் முக்கிய இருதரப்பு/சர்வதேச விவகாரங்களில் ஆலோசனை போன்றவை இருந்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்கள் எழுந்தன. அப்பொழுதும் சோனியா காந்தி விளக்கம் கொடுக்கவில்லை. அந்த விளக்கத்தை தற்போது தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிடுவாரா?
பொய்யான தகவல்களை கொடுப்பதில் சோனியா காந்திக்கு நிகர் வேறு ஒருவரும் கிடையாது. முக்கியமான பொய்யான தகவல்கள் சில, தன்னுடைய பெயர் சோனியா என்பது கிடையாது. Antonia என்பது தான் உண்மையான பெயர். 29.4.1983-ல் இத்தாலி தூதரகம், உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏன் இந்த பெயர் மாற்றம் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சர்ச்சை: சோனியா காந்தி 1999 மக்களவைத் தேர்தலின் போது நாடாளுமன்றத்தின் 'யார்-யார்' (Who's Who) புத்தகப் பதிவிற்காகத் தனது சுயவிவரத்தை அளித்திருந்தார். அதில், “ஆங்கில மொழியில் டிப்ளமோ, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் (UK)” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான சுப்பிரமணியன் சாமி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சோனியா காந்தி அங்கு படிக்கவில்லை என்று கடிதம் எழுதியதைச் சுட்டிக்காட்டி, சோனியா காந்தி தவறான தகவலை நாடாளுமன்றத்தில் அளித்துள்ளதாக அப்போதைய மக்களவைத் சபாநாயகரிடம் புகார் அளித்தார். இந்த விவாதத்திற்குப் பதிலளித்த காங்கிரஸ் தரப்பு மற்றும் சோனியா காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் நேரடியாகப் படிக்கவில்லை என்றும், கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு மொழிப் பள்ளியில்தான் (Lennox Cook School) படித்தார் என்றும் விளக்கமளித்தனர். நாடாளுமன்றப் பதிவேட்டில் "பல்கலைக்கழகம்" (University) என்று அச்சிடப்பட்டது ஒரு "தட்டச்சுப் பிழை" (Typographical Error) என்றும், அது வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறு அல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
திருமதி சோனியா காந்தி, 2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தவுடன், கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி முடிவு செய்த போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் எதிர்த்தார்கள். இந்நிலையில் டெல்லியில் உள்ள ஆங்கில மொழிப் பத்திரிகையாளர்கள் ஜெகன் ரெட்டி, மற்றும் நவின் பட்நாயக்கின் வெற்றியைச் சுட்டிக்காட்டி, பிரச்சினை என்பது வம்சாவளி அல்ல என்பதற்கு ஆதாரம் காட்டுகிறார்கள். இருப்பினும் ராகுல் காந்தியை தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு வலுவான எதிர்ப்பு அவரது சொந்த தாயிடமிருந்தே வந்துள்ளது. குடும்பத்திற்கு வெளியே இருந்து ஒருவர் கட்சியின் தலைவராகப் பொறுப்பை ஏற்பதை அவர் மிகவும் தயக்கத்துடன் பார்ப்பதாகத் தெரிகிறது என எழுதியது உண்மையா? இதை எழுதியவர் காங்கிரஸ் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் ராமச்சந்திர குகா. இது பற்றியும் தனது சுயசரிதையில் குறிப்பிடுவாரா?
சோனியா காந்தியின் முகத்திரை: சில பழைய ரகசியங்கள்
அகில இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த ராஜீவ் காந்தியின் இல்லத்தில் அப்போது ஒரு சாதாரண குடும்பத் தலைவியாகவே சோனியா இருந்தார். ஆனால் இந்திய வெளி உளவுத் துறையான RAWவுக்கும் (Research & Analysis Wing) இத்தாலிய உளவுத் துறைக்குமிடையே இரகசிய சந்திப்புக்கு சட்டவிரோதமாக ஏற்பாடு செய்தார். அந்த சமயம் சோனியா இந்திய பிரஜா உரிமை கோரி விண்ணப்ப மனுவைக் கூட அனுப்பவில்லை. சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர் வால்டர் வின்சி (Walter Winci) தான் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் உபயோகத்திற்காக, குண்டு துளைக்க முடியாத மோட்டார் வண்டியை ஜெர்மனி கார் தொழிற்சாலையில் நிர்மாணிக்க ஏற்பாடு செய்தவர். இந்த ஏற்பாட்டிற்காக கமிஷன் பெற்றுக்கொண்டு வேலை செய்தவர்.
இதே வால்டர் வின்சியேதான், இந்திய சிறப்புப் பாதுகாப்புப் பணிக் குழுவின் அதிர்ச்சித் தாக்குதல் படைக்கு (SPG – Special Protection Group -commandos) இத்தாலிய பாதுகாப்புப் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்தவர். இத்தாலிய பயிற்சியாளர்கள், இந்திய SPG பயிற்சி பெறுபவர்களிடம் பலமுறை மரியாதையின்றி முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.
1985இல், ராஜீவ், சோனியாவுடன் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொண்ட போது, பாதுகாப்புக்கு வந்த SPG இந்திய பாதுகாப்பு அமைப்புக்குக் கூடத் தெரியாமல், இத்தாலிய, ஸ்பெயின் நாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு இத்தாலிய வெளியுறவு அலுவலகத்திலிருந்து நேரடியாக பாதுகாப்பு அளிக்கச் செய்தார் சோனியா. இதே சோனியா மேடம்தான், இன்று தேர்தல் மேடைகளிலும் அரசியல் பொதுக்கூட்டங்களிலும் ஒரு நாள்விடாமல், “என் தாய் நாட்டுக்காக என் இன்னுயிரையும் தரத் தயார்” என உணர்ச்சி பொங்க முழங்குகிறார். இந்திய அரசு அமைப்பு முழுவதையுமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் தன் கையில் வைத்திருக்கிறார்.
சோனியா இந்தியர்களை நம்பாதது மேலை நாடுகள் முழுவதுக்கும் தெரியும். இது உலகப் பிரசித்தம். ஆனால் இந்தியர்களுக்கு மட்டும் சோனியாவின் உண்மை ஸ்வரூபம் என்னவென்று இன்னும் புலப்படவில்லை! இந்த திடுக்கிடும் ரகசிய வாக்குமூலங்கள், பாதுகாப்புப் பணி-பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளிடமிருந்து கிடைத்தவை (இதில் RAW அதிகாரிகளும் அடக்கம்). அவற்றை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டிய நேரம் இது.
1968ல், இந்திய உளவுத்துறை RAW (Research & Analysis Wing) நிறுவப்பட்டது. இவ்வமைப்பு, வெவ்வேறு நாடுகளில் உள்ள இதே அலுவலில் இருக்கும் உளவுத்துறை வலைப்பின்னல்களுடன் (spy network) இரகசியமாகவோ அல்லது திரைமறைவுகள் மூலமோ தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வன்முறையாளர்களைப் பற்றியும், ரகசிய ஊடுருவல் காரர்களைப் பற்றியும், சீனாவைப் பற்றியும், வெளி நாட்டுக் கலகக்காரர்களைப் பற்றியும் மேலும் இவை சம்பந்தப்பட்ட பல தகவல்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி போன்று இன்னும் பல நாடுகளும் உண்டு. இதில் இந்திய RAW என்றுமே இத்தாலிய ஒற்றர் அமைப்புக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. காரணம் இத்தாலிய ஒற்றர் அமைப்பு தான் மேற்கொள்ளும் எந்த காரியங்களிலும் நல்லமுறையிலோ, அல்லது சுய லாபமின்றி செயலாற்றும் தகைமையிலோ என்றுமே, எதிலும் இருந்ததில்லை. ஆகவே, இந்திய பாதுகாப்பு அலுவலகம், இத்தாலியர்களை என்றுமே ஒரு பொருட்டாக மதித்ததில்லை.
1980ல் சஞ்ஜய் காந்தி மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தி சுறுசுறுப்பாக அரசியலில் திடீரென பிரவேசம் செய்தார். அப்போது, ஆரம்ப காலத்தில் ராஜீவ் RAW வின் பொதுவான கூட்டங்களில் (classified briefings) மட்டுமே பங்கேற்றார். ஏனெனில் அன்று அவருக்கு அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பும், பதவியும் இருக்கவில்லை. இக் கூட்டங்களில் அவருக்கு நெருக்கமான அருண் நேரு, அருண் சிங் போன்றவர்களும் அவருடன் கூட பங்கு கொள்ள வேண்டுமென ராஜீவ் விரும்பினார். ராஜீவுக்கோ அல்லது அவர் சகாக்களுக்கோ இவ்வமைப்புகளில் பங்கேற்க அதிகாரப்பூர்வ பதவி இல்லை என சம்பந்தப்பட்ட RAW அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இச்சமயத்தில் பிரதம மந்திரி என்ற பதவி கொடுத்த அதிகாரத்தாலும், பிரத்யேக சலுகைகளாலும், இந்திரா காந்தி ராஜீவுக்கு நெருங்கிய அருண் நேரு, அருண் சிங் போன்றவர்களும் அக்குழுவில் பங்கேற்க RAW அதிகாரிகளை நிர்ப்பந்தமாக உடன்பட வைத்தார். இந்த ஏற்பாட்டிற்கு RAW அதிகாரிகள் வேண்டா வெறுப்புடன் ஒப்புக்கொண்டார்கள் ஆனால் இந்தக் கூட்டங்களில் ராஜீவ், அருண் நேரு, அருண் சிங் சொல்வது எதையும் அதிகாரபூர்வமான குறிப்பேடுகளில் (இவர்கள் பெயர்களால்) இணைக்கக் கூடாது என்று கறாராக RAW அதிகாரிகள் கூறிவிட்டனர்.
ராஜீவ் அன்று வகித்த பதவி காங்கிரஸின் பொதுக் காரியதரிசி என மட்டுமே இருந்தது. இருப்பினும், அரசாங்கத்திலோ அல்லது RAWவிலோ எவ்வித சம்பந்தமும் இல்லாதிருப்பினும், இத்தாலிய ஒற்றர் அமைப்புகளுடன் இணைந்து இந்திய RAW அதிகாரிகள் செயலாற்றியாக வேண்டுமென ராஜீவ் நிர்ப்பந்தித்தார். இத்தாலியர்களை இந்திய உளவுத் துறையுடன் இணைக்க ராஜீவ் ஏன் இவ்வாறு நிர்ப்பந்திக்க வேண்டும்? இதில் இத்தாலியர்களின் ஒத்துழைப்பு எதற்காக, அதன் வரம்புகள் என்ன என கொஞ்சமும் ஆராயாமல், அல்லது ஒன்றுமே கண்டுகொள்ளாமல், கண்டபடி இக்காரியத்தில் வலுக்கட்டாயமாக ஏன் முனைய வேண்டும்? காரணம், சாக்ஷாத் சோனியா தான். ராஜீவ் 1968லேயே சோனியா மைனோவை கடிமணம் புரிந்திருந்தார்.
இது நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் செயல், வேண்டாம் என RAW அதிகாரிகள் பரிந்துரைத்தும் ராஜீவ் கேட்கவில்லை. கடைசியில் RAW அதிகாரிகள் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஒன்றுக்குமே லாயக்கில்லாத உளவுக் கூட்டாளிகள் என பல பத்தாண்டுகளாக இந்திய RAW அதிகாரிகள் எவர்களை ஒதுக்கி வைத்திருந்தனரோ, அதே இத்தாலிய உளவுத்துறையுடன் பலவந்தமாக ஒத்துழைப்பு தர நிர்ப்பந்திக்கப்பட்டனர். குறிப்பாக நாம் இதில் அறிய வேண்டியது, சோனியா தான் இரு உளவு அமைப்புகளுக்கும் இடையே உறவுப் பாலம் அமைக்க அரும்பாடுபட்டவர் என்பது.
சோனியா மேடம் இத்தாலிய ஒற்றர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது எந்தவித ஐயமுமின்றி, தெள்ளத் தெளிவாகிறது. அப்போது அவர் இந்திய அரசியலிலோ அல்லது அரசாங்கத்திலோ எந்த ஈடுபாடும் இல்லாத, பழிபாவமற்ற பதிபக்தியுள்ள சாதாரண இந்திய குடும்பத் தலைவி எனக் காண்பித்துக் கொண்டிருந்தவர். ஆனால், அச்சமயத்திலும், சோனியா இத்தாலிய நாட்டின் குடிமகள். அவர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பத்தைக் கூட அந்த நேரத்தில் கொடுத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் குடிமையை வேறுவழியின்றி வேண்டா வெறுப்புடன் பின்னர் கோர நேர்ந்தது. சோனியா பிரதம மந்திரி இந்திரா காந்தியின் இல்லத்தில், அக்குடும்பத்தின் அங்கமாக இருப்பவர்; இந்திய அரசாங்கத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாதிருப்பவர்; ஆனால், இத்தாலிய உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார்!
நரேந்திர மோடியின் தலைமை, செயல்படும் பாணி மற்றும் மத்திய அரசின் பல முக்கியக் கொள்கைகள் குறித்தும் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாவது, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்). முழுநேர அரசியலுக்கு மாறுவதற்கு முன்பு மோடி இந்த அமைப்பில் பணியாற்றியுள்ளார். தேசிய விவகாரங்களிலும், இந்தியாவின் சமூகக் கட்டமைப்பிலும் ஆர்.எஸ்.எஸ்-இன் செல்வாக்கு குறித்த அவரது பார்வைகளை அந்த நினைவுக் குறிப்பு கொண்டுள்ளது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பல ஆண்டுகளாகவே சோனியாவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, முறையான பதில் கிடையாது. தனது சுயசரிதையில் பொது வெளியில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்குமா என தெரியவில்லை. பெங்குயின் நிறுவனத்திற்கு கொடுத்த விளக்கத்தில் உண்மைகளும், கருத்துக்களும் தனது சொந்த அனுபவத்தை கொண்டு எழுதியது என குறிப்பிட்டுள்ளார். எனவே அவற்றை மாற்ற இயலாது என்றும் கூறி சோனியா காந்தி அதை மறுத்துவிட்டார் என புத்தகம் வெளியிடும் நிறுவனத்தினர் தெரிவித்தனர். அப்படி என்றால் சில கேள்விகளுக்கு முறையான பதில் கூற முடியுமா?
ஒரு நாட்டின் குடியுரிமை பெறாமலே, தேர்தலில் வாக்களிக்க முடியுமா? 1980 தேர்தலில் வாக்களித்துவிட்டு, 1983-ல் மட்டுமே இந்தியக் குடியுரிமை பெற்றதாகக் கூறும் சோனியா மீது, குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 10(2)(b)-ன் கீழ் நடவடிக்கை கோரி அவர் சட்ட அமைச்சகத்திற்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம் எழுதியுள்ளார். தற்போது மேற்படி விவகாரம் நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டியுள்ளது. இது பற்றியும் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளாரா? இது அப்பட்டமான கிரிமினல் குற்றவழக்காகும்.
1984-ல் இந்திரா காந்தியின் படுகொலையாலும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜீவ் காந்தியின் கொலையாலும் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியதையும், அதைத் தொடர்ந்து அவர் அரசியலில் நுழைந்ததையும், காங்கிரஸின் நீண்டகாலத் தலைவராக அவர் பதவி வகித்ததையும், 2004-ல் பிரதமராகும் கட்சியின் வாய்ப்பை அவர் நிராகரித்ததையும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இதில் கூட உண்மையில்லை. ஏன் என்றால் சற்றே 2004-ல் நடந்த அரசியல் சம்பவங்கள் பற்றிய விவரங்களை திரும்பிப் பார்க்க வேண்டும்.
2004-ஆம் ஆண்டில் டாக்டர் சிங் முதன்முறையாகப் பிரதமராக நியமிக்கப்பட்டபோது, மத்திய அரசு அமைக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களுடன் கூடிய விரிவான தகவல்களைக் கோரி, டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் குடியரசுத் தலைவர் செயலகத்தில் தகவல் அறியும் உரிமை மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். 2012 ஏப்ரல் 26 தேதியிட்ட தனது பதிலில், செயலகம் பின்வருமாறு கூறியுள்ளது: “ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அவர்களால் குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம், மற்றவற்றுடன், அவரால் குடியரசுத் தலைவருக்கு ரகசியமாக அனுப்பப்பட்ட ஒரு தகவலாகும்; அதன் அடிப்படையில், சட்டப்பிரிவின் 75-வது பிரிவின் கீழ் பிரதமரை நியமிப்பதற்கான தனது விருப்புரிமையை குடியரசுத் தலைவர் பயன்படுத்தினார்.” அன்றைய குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் தனது சுயசரிதை புத்தகத்தில், சர்தார் மன்மோகன் சிங்தான் பிரதமராகப் பதவியேற்பார் என்ற தகவல் தனக்குக் கிடைத்த போது, திருமதி சோனியா காந்தியைப் பதவியேற்கச் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததாக அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
திரு சுப்பிரமணிய சுவாமி, குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், குற்றவியல் தடை என்ன என்பதையும் வெளிப்படுத்தினார். குடியுரிமைச் சட்டத்தின் (தற்போது திருத்தப்பட்ட) பிரிவு 5-ன் நிபந்தனையான பரஸ்பரத்தன்மை காரணமாக அந்தக் குற்றவியல் தடை நடைமுறைக்கு வந்தது. அச்சட்டத்தின் பிரிவு 5 பதிவு செய்வதன் மூலம் குடியுரிமையை வழங்குகிறது. தற்போது திருத்தப்பட்ட அந்த நிபந்தனையின்படி வேறு ஏதேனும் நாட்டின் குடிமகனாக இருந்து இந்தியக் குடிமகனாகப் பதிவு செய்ய விரும்பும் எந்தவொரு ஆணும், அல்லது பெண்ணும் அந்த நாட்டின் குடியுரிமைச் சட்டங்களின் கீழ் ஒரு இந்தியக் குடிமகனுக்கு விதிக்கப்படக் கூடிய அதே விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இத்தாலியச் சட்டத்தின் படி இத்தாலியில் பிறக்காத ஒருவர் இத்தாலியின் பிரதமராக முடியாது. எனவே சோனியா காந்தி இந்தியாவில் பிறக்காத காரணத்தால், அவர் இந்தியாவின் பிரதமராக முடியாது என குறிப்பிட்டதே காரணம்.
2004 தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது. கூட்டணியில் அதிக இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக திருமதி சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆகவே பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்தியை பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கும் கடிதத்தில், அன்றைய கூட்டணியிலிருந்து திமுக தலைவர் கருணாநிதி, பீகாரின் லாலு பிரசாத் யாதவ், உத்தரப் பிரதேச முலயாம் சிங் யாதவ் உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்ட கடிதம் சோனியா தலைமையில் குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஒரே நாளில், தனக்கும் தன் குடும்பத்திற்கு ஆபத்து உள்ளதால் மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவிக்கிறேன் என்ற நாடகம் நடத்தப்பட்டது. தலைவராக தேர்வு செய்த போதும், குடியரசு தலைவர் மாளிகைக்கு போகும் போதும், கடிதத்தை சமர்ப்பித்த போதும், தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது என்பது தெரியாதா?
மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட், சர்வதேச அளவில் நூலை அதன் அசல் வடிவில் வெளியிடும் நிலையில், இந்தியாவில் மட்டும் மாற்றங்கள் கோரப்படுவதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோயும் பதிப்பகத்தின் விளக்கத்தை விமர்சித்தார். பெங்குயின் இந்தியா ஏற்கனவே பல்வேறு அரசியல் மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்பான நூல்களை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது ஆளும் கட்சிக்கு அஞ்சுவதாக அவர் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் சேவா தள் தலைவர் பி.வி. சீனிவாஸ் மற்றும் முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகியோரும் இந்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்தனர்.
காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, இந்த நூலின் இந்தியப் பதிப்பாளர் தாங்கள் அல்ல என்று தெளிவுபடுத்தியது. மேலும், வெளியிடப்படவுள்ள கையெழுத்துப் பிரதிகளை உண்மைச் சரிபார்ப்பது, அவற்றில் தேவையான தலையங்கப் பரிந்துரைகளை வழங்குவது ஆகியவை பதிப்புத் துறையின் வழக்கமான நடைமுறைகளே என்றும் நிறுவனம் தெரிவித்தது.
குறிப்பாக, சோனியா காந்தியின் நினைவுக் குறிப்பை வெளியிடுவதில் தாங்கள் “விருப்பத்துடனும் ஆர்வத்துடனும்” இருந்ததாகவும் பெங்குயின் தெரிவித்துள்ளது. எனவே, அரசியல் அழுத்தம் காரணமாகவே நூலை வெளியிட பதிப்பகம் மறுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அதன் விளக்கம் உறுதிப்படுத்தவில்லை.
காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை பாஜக நிராகரித்துள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன், நூலைச் சுற்றி காங்கிரஸ் அச்சமூட்டும் ஒரு கதையாடலை உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். பாஜக தலைவர்கள், பதிப்பாளர் உண்மைச் சரிபார்ப்பு என்பது வழக்கமான நடைமுறை என்று கூறியுள்ள நிலையில், அரசியல் அழுத்தம் குறித்த குற்றச்சாட்டுகளைக் காட்டிலும் நூலில் எந்தக் கூற்றுகள் உண்மைச் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டன, ஏன் அவ்வாறு செய்யப்பட்டது என்பதே முக்கியமான கேள்வி என வாதிட்டனர்.
பாஜக தலைவர் அஜய் அலோக், இது பதிப்பாளர் “பணிந்து போவது” பற்றிய பிரச்சினை அல்ல என்றும், நூலில் இடம்பெறும் தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது அவசியம் என்றும் கூறினார். தெலங்கானா பாஜக தலைவர் என். ராம்சந்தர் ராவும் இதே கருத்தைத் தெரிவித்தார். பாஜக தலைவர் அமித் மால்வியா, சோனியா காந்தி எழுதிய சுயசரிதைக்கே பதிப்பகம் உண்மைச் சரிபார்ப்பு தேவை எனக் கருதியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். உண்மைச் சரிபார்ப்பு எதற்குத் தேவைப்பட்டது—ஆசிரியரின் நினைவுகளுக்கா அல்லது உண்மைக்கும் புனைவுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவுபடுத்துவதற்கா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
இந்த விவகாரத்தின் மையத்தில் இருப்பது, பதிப்பகத்தின் வழக்கமான உண்மைச் சரிபார்ப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஒரு நூலைத் தடுக்க முயற்சித்தல் ஆகிய இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு ஆகும். பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியாவின் விளக்கத்தில், அரசியல் அழுத்தம் காரணமாக நூலை நிராகரித்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக, உண்மைச் சரிபார்ப்பும் தலையங்கப் பரிந்துரைகளும் வழக்கமான பதிப்புச் செயல்முறை என்றும், நூலை வெளியிடுவதில் தங்களுக்கு ஆர்வம் இருந்ததாகவும் நிறுவனம் கூறியுள்ளது.