ஒரே நாடு
கட்டுரைகள்

சர்காரியா கமிஷன்: சில நினைவுகள்

எழுதியவர்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

22 செப்டம்பர் 2026

வழக்கறிஞர், அரசியலாளர், பாஜக

கே.எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் →

1970-களின் விசாரணைக் கமிஷன் அமர்வு — நீதிபதி, ஆவணக் கட்டுகள், சாட்சிகள் (AI உருவாக்கிய படம்)1970-களின் விசாரணைக் கமிஷன் அமர்வு — நீதிபதி, ஆவணக் கட்டுகள், சாட்சிகள் (AI உருவாக்கிய படம்)

எம். ஜி. ஆர் 4—11—1972 ஆம் நாளிட்ட மகஜரிலும், எம். கல்யாணசுந்தரம் 6—11—1972, 20—12—1972 ஆம் நாட்களிட்ட மகஜர்களிலும், நாஞ்சில் கே. மனோகரன், ஜி. விசுவநாதன் ஆகியோரது 1—12—1975 ஆம் நாளிட்ட மகஜரிலும், கலைஞர் மீதும் அவரின் முன்னாள் சக அமைச்சர்களான இரா. நெடுஞ்செழியன், ப. உ. சண்முகம், அன்பில் தர்மலிங்கம், செ. மாதவன், சாதிக் பாட்சா, ஓ. பி. இராமன், சி. பா. ஆதித்தனார் ஆகியோர் மீதும் சுமத்தியுள்ள 28 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சர்க்காரியா கமிஷன் 3—2—1976 அமைக்கப்பட்டது.

இந்த கமிஷனில் உதவ சிறப்பு பிரிவின் அதிகாரி பி.விஜயராகவன் இருந்தார். புலானாய்வுகளை குறித்து உதவியவர் பெயர்கள் வருமாறு.

மையப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ)

  1. கே. ஏ. இராஜகோபாலன், காவல்துறை சூப்பிரண்டு.
  2. ஸ்ரீராமுலு, காவல்துறைத் துணை சூப்பிரண்டு.
  3. உன்னி கிருஷ்ணன், காவல்துறைத் துணை சூப்பிரண்டு.
  4. நரசிம்மன், காவல்துறைத் துணை சூப்பிரண்டு.
  5. கோதண்டபாணி, இன்ஸ்பெக்டர்.
  6. வேணுகோபால், இன்ஸ்பெக்டர்.
  7. ஆர். கே. சாமி நாயுடு, காவல்துறைத் துணை சூப்பிரண்டு.

மாநிலக் காவல்துறை

  1. ஜி. கணேசன், காவல்துறை சூப்பிரண்டு.
  2. கே. ஆர். ஸ்ரீராமுலு, காவல்துறைத் துணை சூப்பிரண்டு.
  3. டி. கங்காதரன், காவல்துறைத் துணை சூப்பிரண்டு.
  4. ஜி. எஸ். செல்லதுரை, காவல்துறைத் துணை சூப்பிரண்டு.
  5. கே. இராமலிங்கம், காவல்துறைத் துணை சூப்பிரண்டு.
  6. கே. சாமிராஜ், இன்ஸ்பெக்டர்.
  7. மனோகரன் டேவிட், இன்ஸ்பெக்டர்.
  8. தசரதராமன், இன்ஸ்பெக்டர்.
  9. ஜே. ஜீனதத்தன், இன்ஸ்பெக்டர்.
  10. கே. பாலகிருஷ்ண மேனன், இன்ஸ்பெக்டர்.
  11. ஆர். சேஷாத்திரி, இன்ஸ்பெக்டர்.

ஆகியோர் இக்குழுவில் இருந்தனர்.

முதுநிலை வழக்குரைஞர்களாகிய முன்னாள் மத்திய அமைச்சர் சாந்திபூஷண், கோவிந்சாமிநாதன், ஆர். டி. பந்தாரே, டாக்டர் ஓய். எஸ். சிட்டேல், எப்.எஸ். நாரிமன், ஜி. இராமசாமி, ஏ. ஏ. செல்வம் ஆகியோர் பிரதிவாதிகள் - பாதிக்கப்பட்ட நபர்களுக்காக வழக்காடினார்கள்.

முது நிலை வழக்குரைஞர்களாகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஏ. கே. சென், என்.சி. இராகவாச்சாரி மற்றும் கே.டி.பால் பாண்டியன் ஆகியோர் மனுதாரர்கள் தரப்பில் வாதாடினர். வி.பி.இராமன், ஹரிச்சந்திரா மத்திய அரசின் சார்பில் வாதாடினார்.

தமிழ் நாடு அரசின் சார்பில் என். டி. வானமாமலை திறம்படவும், முறையிலும் வாதங்கள் எடுத்துரைத்தார். கமிஷனின் வழக்குரைஞர்களாகிய எம். எல். நந்தா அவர்களும், ஜி. இலட்சுமண ரெட்டி அவர்களும் கமிஷனின் சார்பாகச் சாட்சிகள் விசாரிப்பதில் மிகவும் உதவியாக இருந்தனர்.

அவர்களுக்குச் சிறந்த முறையில் உதவி, பணியாற்றிய இளநிலையில் வழக்குரைஞர்களாகிய அதிமுக சார்பாக சி.பொன்னையன், எம்.சி.பிரபாகரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.பாலாபழனூர், பாளை சண்முகம், திமுக சார்பில் என். கணபதி, கே. இராஜேந்திர சௌத்திரி, என்.சோமசுந்தரம், திருமதி வீணாகன்னா, வினித்குமார், ஜி.தேசப்பன், நம்பீசன் ஆகியோர் வழக்கறிஞர்களாக இருந்தனர். இலங்கை முது நிலை வழக்கறிஞர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் திமுக சார்பில் வாதாடினார்.

கே. ஏ. இராமசுப்பிரமணியம், ஐ.ஏ.எஸ். அவர்கள் கமிஷனின் செயலாளராக 1—4—1976 அன்று பணியில் சேர்ந்தார். விசாரணைக்கால அளவு முடியும் வரை அவர் செயலாளராகத் தொடர்ந்து பணிபுரிந்தார்.

சர்க்காரியா கமிஷன் அமைக்கப்படுவதற்கு ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரம் தொடங்கிவிட்டது.

1972 நவம்பர் 15ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சட்டமன்றத்தில் புகார்கள் தொடர்பாக கலைஞரிடம் விளக்கம் கேட்டார்.

அதற்கு 1972 டிசம்பர் 14ஆம் தேதி கலைஞர் தனது பதிலை அனுப்பினார். குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. சட்டமன்றத்தில் இது குறித்து விரிவான விவாதம் நடந்தது.

திமுக அரசு கலைப்பு; அடுத்த மூன்றாவது நாள் கமிஷன்

இதற்கிடையே 1975 ஜூன் 25ஆம் தேதி நாடு முழுவதும் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. நெருக்கடி நிலையை எதிர்த்து வந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசு 1976 ஜனவரி 31ஆம் தேதி மத்திய அரசால் கலைக்கப்பட்டது.

அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, 1976 பிப்ரவரி 3ஆம் தேதி, மத்திய அரசு S.O.74(E) அறிவிப்பின் மூலம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.சர்க்காரியா தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அமைத்தது. 1952ஆம் ஆண்டின் விசாரணைக் கமிஷன்கள் சட்டத்தின் கீழ் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.

54 புகார்கள்; விசாரணைக்கு வந்தவை 28

திமுக அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 54 புகார்களில் 28 புகார்கள் சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பின்னாளில் இதையே கலைஞர் சட்டமன்றத்திலும் குறிப்பிட்டு, மீதமுள்ள 26 புகார்களையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கமிஷனின் விசாரணைப் பட்டியலில் கலைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் சொத்துகள், வீராணம் திட்டம், வான்வழி பூச்சிமருந்து தெளிப்பு, சர்க்கரை தொடர்பான விவகாரம், சமயநல்லூர் மின் நிலையம், கொடைக்கானல்–பழனி சாலை, சிம்சன் நிறுவனம், சக்தி பைப்ஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தனித்தனி பகுதிகளாக இடம்பெற்றன. இதில் வீராணம் திட்டம் தனியாக விரிவாக விசாரிக்கப்பட்ட விவகாரங்களில் ஒன்று.

86 முறை கூடிய சர்க்காரியா கமிஷன்

புது டில்லி, சென்னை, ஊட்டியில் அமர்வுகள் நடந்தன. சர்க்காரியா கமிஷன் மொத்தம் 86 முறை கூடியது. விசாரணை அமைப்புகள் சுமார் 1,600 சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தன. சுமார் 13,000 முழுத் தாள்கள் அளவிலான வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், கமிஷனின் சாட்சியப் பதிவுகள் சுமார் 11,777 பக்கங்கள் அளவுக்கு இருந்ததாகவும் அறிக்கையின் முன்னுரை தெரிவிக்கிறது.

குற்றவியல் நீதிமன்ற விசாரணை அல்ல

சர்க்காரியா கமிஷனின் முதல் அமர்விலேயே அதன் விசாரணையின் சட்டரீதியான தன்மை குறித்த முக்கியமான விளக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமிஷனின் பணி தனக்கு அளிக்கப்பட்ட வரம்புக்குள் உண்மைகளைக் கண்டறிவது. அது ஒரு குற்றவியல் நீதிமன்ற விசாரணை அல்ல. கமிஷன் முன்பு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பவர்களை, குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளும் குற்றம் சாட்டப்பட்டவர்களாகக் கருத முடியாது என்பதும் அங்கு விளக்கப்பட்டது.

கமிஷனின் பரிந்துரைகள் தாமாகவே நீதிமன்றத் தீர்ப்புக்குரிய சட்ட அமலாக்க வலிமையைப் பெறுவதில்லை என்பதும் அதன் விசாரணை நடைமுறை தொடர்பான முக்கிய அம்சமாகும்.

முதல் அறிக்கையில் என்ன இருந்தது?

சர்க்காரியா கமிஷனின் முதல் அறிக்கை முகப்பில் 3, 11(a), 11(b), 12, 15, 16, 19, 22(c), 22(d) ஆகிய ஒன்பது serial/sub-serial விவகாரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

டிராக்டர் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம், நாதன் பப்ளிகேஷன்ஸ், வான்வழி பூச்சிமருந்து தெளிப்பு, எஸ்.கந்தப்பன் தொடர்பான விவகாரம், நியூ குளோப் தியேட்டர் நிலம், ஏ.எல்.சீனிவாசன் தொடர்பான விவகாரம் உள்ளிட்டவை முதல் அறிக்கையில் இடம்பெற்றன.

எனவே முதல் அறிக்கையை “28 புகார்களின் முழுமையான இறுதி அறிக்கை” என்று கருத முடியாது. குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றிய முதல் அறிக்கையாகவே அது வெளியானது.

வீராணம் திட்டம்

தற்போது விஜய் முன்வைத்திருக்கும் வீராணம் திட்ட விவகாரம் சர்க்காரியா கமிஷனின் விசாரணைப் பொருள்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

நமக்குக் கிடைத்த கமிஷனின் தமிழ் அறிக்கையின் பொருளடக்கத்தில் வீராணம் திட்டம் பக்கங்கள் 71 முதல் 150 வரை தனிப் பகுதியாக இடம்பெற்றுள்ளது.

அதில் திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆவணங்கள், வாக்குமூலங்கள் மற்றும் அவற்றின் மீதான கமிஷனின் ஆய்வு இடம்பெற்றுள்ளன.

சர்க்காரியா கமிஷனின் அறிக்கையின்படி ஊழல் நடந்துள்ளது என்ற உண்மைகள் இருந்தாலும், இந்த கமிஷனின் அறிக்கை மீது மத்திய அரசுதான் நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

தமிழகத்தில் 1977 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்று எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார். மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஜனதா கட்சி கூட்டணியில் திமுக இருந்ததால், இந்த கமிஷனின் அறிக்கைமீது மேல்நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

அதன்பிறகு, ஜனதா கட்சியின் உட்கட்சி குழப்பத்தை சரண்சிங், ஜெகஜீவன்ராம் போன்றோர் உருவாக்கினார்கள். அதனால், ஜனதா ஆட்சி வீழ்ந்தது. அதன்பின், “நேரு மகளே வருக, நிலையான ஆட்சித் தருக” என்று கலைஞர் கருணாநிதி காங்கிரஸை வரவேற்று, அதன் கூட்டணியில் இணைந்தார்.

1980-இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அப்பொழுதும் இந்த கமிஷனின் அறிக்கைமீது மேல் நடவடிக்கை இல்லாத மௌனமான சூழ்நிலைதான் நீடித்தது. இப்படியாக சர்க்காரியா கமிஷன் அறிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுபோலவே, காங்கிரஸ் அரசு அறிவித்த அவசரகாலத்தில் தமிழகத்தில் நடந்த அத்துமீறல்களை விசாரித்த நீதிபதி இஸ்மாயில் கமிஷன் அறிக்கையும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் தூக்கத்திற்கு சென்றுவிட்டது.

இதுவரை எத்தனையோ கமிஷன்கள் அமைத்து விசாரணைகள் செய்தாலும், அனைத்து கமிஷன்களின் அறிக்கைகளின் பரிந்துரைகள் நிறைவேறாமல் குப்பைத் தொட்டியில்தான் போய் விழும். இதுதான் இந்திய அரசியலும், ஆட்சிமுறையும்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள்

ஊழல் வழக்குகள் மட்டுமல்லாமல் திமுக ஆட்சியில் நடந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் சொல்லப்பட்டன.

(i) சிம்சன் கம்பெனி விவகாரங்கள்,

(ii) சாரதா ஸ்டுடியோ விவகாரங்கள்,

(iii) மாநில மின்சார வாரிய விவகாரங்கள்,

ஆகியவற்றில் தி.மு.க. தனது தொழிற்சங்கங்களை உருவாக்க அரசு நிர்வாக இயந்திரத்தையும் தவறாக பயன்படுத்தியது.

குமுதம், அலை ஓசை, துக்ளக், தி இந்து போன்ற பத்திரிகைகளை அச்சுறுத்தியது.

கட்சி நடவடிக்கைகளுக்கு அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது.

எதிர்க் கட்சியினர் அனைவரையும் ஒடுக்கக் காவல்துறை திமுக அரசால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும்:

(a) இராமநாதபுரம் மாவட்டம், சிங்கம்புணரியில் 27–8–1972ல் நடந்த சம்பவம்.

(b) திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் 1972 மாணவர் லூர்துநாதன் கொலை, திருச்சி கிளவ் ஆஸ்டல் சம்பவம், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் படுகொலை.

(c) கோயம்புத்தூர் மாவட்டத்தில் பவானி அருகே இடையம்பட்டியில் 1971 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற சம்பவம்.

(d) 1971 நவம்பரில் திருநெல்வேலி மாவட்டம், கரிவலம் வந்த நல்லூரில் நடந்த சம்பவம்.

(e) 1972 ஜனவரியில் நடைபெற்ற நிகழ்ச்சி — தொழிற்சங்கத் தலைவர்களைத் தாக்கிய சம்பவம்.

(f) சேலம் மாவட்டம், நாமக்கல்லில் 26–2–1972ல் நடைபெற்ற சம்பவம்.

(g) இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் 27–2–1972-ல் நடைபெற்ற சம்பவம்.

(h) விவசாயப் போராட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம், கோவில்பட்டி, சாத்தூர், மானாமதுரை முதலிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள்.

(i) சக்தி பைப்ஸ் விவகாரத்தில் திமுக அரசு தலையீடு.

இச் சம்பவங்கள் எல்லாம் திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளாக சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டவைகளாகும்.