மதசார்பற்ற சமூகநீதி வெற்றி ( வீழ்ச்சி ) கூட்டணி
எழுதியவர்
ஈரோடு சரவணன்
15 செப்டம்பர் 2026
மூத்த எழுத்தாளர்; தமிழக பாஜகவின் மாநிலப் பிரச்சாரப் பிரிவுத் தலைவராக சுமார் 10 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர். நீண்டகாலமாக அரசியல், தேசியம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.
மதசார்பற்ற சமூகநீதி வெற்றி (வீழ்ச்சி) கூட்டணி
தவெக கூட்டணிக்கு வைத்துள்ள பெயர் மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி. உண்மையில், தவெக கூட்டணியில் உள்ள கட்சிகள் மதசார்பற்ற தன்மையை கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. இக் கேள்வி எழ காரணமே, இந்துக்களையும், இந்து மதத்தையும் இழிவாக பேசுவது தான் மதசார்பற்ற கொள்கை என்பது போல் கடந்த காலங்களில் நடந்துள்ளார்கள்.
கடந்த ஐம்பதாண்டு காலமாக, தமிழகத்தில் சில சொற்கள் அரசியல்வாதிகளுக்கு அல்வா போன்றதாக மாறியுள்ளது. அதில் மதசார்பற்றது மற்றும் சமூகநீதி. மதசார்பற்ற தன்மையை காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, மதிமுக மற்றும் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் கடந்த காலங்களில் செயல்பட்ட தன்மையை திரும்பி பார்க்க வேண்டும்.
புதிதாக உருவாகிய தமிழக வெற்றி கழகத்தில் உள்ள முக்கிய அமைச்சர்களும், நிர்வாகிகளும், பல கட்சிகளிலிருந்து வெளியே வந்தவர்கள். குறிப்பாக சட்ட அமைச்சர் பாஜக மற்றும் அஇஅதிமுகவிலிருந்து தவெகக்கு தாவியவர். எப்பொழுது பெரியாருக்கு வாழ்த்து பாடல் பாட ஆரம்பித்தார்களோ அப்பொழுதே, கிறிஸ்துவத்திற்கும், இஸ்லாத்திக்கும் வெண் சாமரம் வீசும் படலத்தை துவக்கி விட்டார்கள்.
மதசார்பற்ற சமூக நீதி கூட்டணியில் உள்ளவர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொள்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. சனாதனத்தை ஆபாசமாக திட்டிய விசிகவினரிடம் மதசார்பற்ற கொள்கையை எதிர்பார்க்க முடியுமா? விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்து மதத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள் அப்பட்டமாக இந்து விரோத கருத்துகளாகும்.
தமிழ்நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் திராவிடக் கட்சிகள் சித்தாந்த ரீதியாக சாதி அமைப்புக்கு எதிராக இருந்தாலும், நடைமுறையில் அவை திராவிட இயக்கத்தின் அசல் இலட்சியங்களிலிருந்து விலகிச் சென்றுவிட்டதாக அவர் வாதிடுகிறார். அப்படிப்பட்டவர் ஏன் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார். பொது வெளியில் கொள்கை கூட்டணி என கர்ஜித்தார். ஆகவே இவரின் வாதம் இந்து எதிர்ப்பு வாதம் தவிர வேறு ஒன்றுமில்லை.
இந்து மதத்தின் தொன்மை குறித்த வழக்கமான கூற்றுகளுக்கு சவால் விடுக்கும் வகையில், பண்டைய இந்தியாவில் பிராமண மதம், சைவம் மற்றும் வைணவம் போன்ற தனித்துவமான மரபுகள் மட்டுமே இருந்ததாக வாதிட்டார். “தெளிவான நிறுவனர்களைக் கொண்ட இஸ்லாம், கிறிஸ்தவம் அல்லது பௌத்தம் போலல்லாமல், இந்து மதத்தை யார் உருவாக்கினார்கள் என்று யாராலும் கூற முடியாது. எந்தவொரு அறிஞரிடம் கேட்டாலும், வரலாற்றுச் சான்றுகள் இல்லாததால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தெளிவற்ற பதில்களையே அவர்கள் தருவார்கள்,” என்று அவர் கூறினார்.
இவ்வாறு கூறுவதே மதசார்பற்ற தன்மைக்கு புறம்பான ஒன்றாகும். இவர் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு பெயர் மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி.
கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் இந்துக்கள் மீது வெறுப்புணர்ச்சியை உருவாக்கும் விதமாக, திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தலித் முஸ்லீம் மேம்பாடு மாநாட்டில், சிவன், பெருமாள், மற்றும் காமாட்சி அம்மன் கோவில்களுக்கு பதிலாக புத்த விகார்களாக மாற்ற வேண்டும் என திருவாய் மலர்ந்தார் திருமாவளவன்.
கிறிஸ்மஸ் மற்றும் ரம்ஜான் விழாவின் போது, அவர்களின் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு, இந்துக்களை இழிவாக பேசுவது தான் இவர்களின் மதசார்பற்ற தன்மையாகும்.
இந்த கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீக் பெயரிலேயே மத சார்புள்ள கட்சி. அகில இந்திய முஸ்லீம் லீக் என்ற பெயரிலேயே, சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய பிரிவினைக்கு வித்திட்டவர்கள் முஸ்லீம் லீக்.
தமிழகத்தில் மத மாற்றத்திற்கு வித்திட்டவர்களில் முஸ்லீம்களின் பங்கு உள்ளது. 1925 முதல் 1935 வரை மத மாற்றம் சிவகாசி, கமுதி, தென்காசி போன்ற பகுதிகளில் நாடார்களுக்கும், தேவர்களுக்குமிடையே இருந்த மோதல்களை பயன்படுத்திக் கொண்டு, மத மாற்றத்தில் முஸ்லீம்கள் ஈடுபட்டார்கள். இவர்களின் மத மாற்ற முயற்சியில், தென்காசி பகுதியில் மட்டும் சில நாடார் குடும்பங்கள் முஸ்லீம்களாக மாறினார்கள்.
ஆனால் முஸ்லீம் மதத்திற்கு மாறாக, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நாடார்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். கம்பம் நகரத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 1,100 பேர்கள் முஸ்லீம் மதத்திற்கு மாறினார்கள். இந்த மாற்றத்திற்கு ”இஷா அத்துல் இஸ்லாம்” என்ற அமைப்பு காரணமாயிருந்தது. முஸ்லீம் மதத்திற்கு மாறுவதற்கு நிதி உதவி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1933-ல் இஷா அத்துல் இஸ்லாமின் முதல் மாநாடு கம்பத்தில் நடைபெற்றது, இந்த மாநாட்டில் வெளிப்படையாக, பெரியகுளம் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாத்தை தழுவக் காத்திருப்பதாகவும், ஊக்குவிக்கப் பணக்கார முஸ்லீம்கள் பண உதவி செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது. அப்துல் ஹக்கீம் இதற்குத் தன்னுடைய வருமானத்தில் பாதியை அளிக்க முன் வந்தார் என்ற செய்தியும் குறிப்பில் உள்ளது. ஆகவே மத மாற்ற பண உதவி செய்யப்பட்டுள்ளது.
இந்து முஸ்லீம் கலவரத்திற்கு வித்திட்டவர்கள் முஸ்லீம்கள் என்ற உண்மையை மறுக்க முடியுமா? முகமது நபியின் பிறந்த நாளின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசவிருந்த கூட்டத்திற்கு போய் கொண்டிருந்த இந்துக்களுக்கும், அதே வழியில் இறைத்தூதரின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு முஸ்லீம் ஊர்வலமும் எதிர்பாராமல் சந்தித்துக்கொண்டதின் விளைவு கலவரம் ஏற்பட்டது. (ஆதாரம் முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி பக்கம் 97)
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், முந்தைய ஆண்டுகளில் செய்தாற்போல் அந்த ஆண்டு இறைத்தூதரின் பிறந்தநாளில் இந்துக்கள் தங்கள் கடைகளை மூடாததால் கலவரத்திற்கு காரணம் என முஸ்லீம்கள் குற்றச்சாட்டுக்களை வைத்தார்கள். ஆகவே முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முஸ்லீம்களின் விழாக்களின் போது, இந்துக்கள் கடைகளை அடைக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகும்.
இதே நிலைதான் தற்போது தமிழகத்தில், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், மேல்விஷாரம், ராமநாதபுரம், மேலப்பாளையம், கோவை, தேனி போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது.
பிரிவினையை முழுமையாக ஆதரித்தவர் முஹம்மது இஸ்மாயில், 1946 ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் டில்லியில் முஸ்லிம் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முஹம்மது இஸ்மாயில், அப்துல் ஹமீத் கான் மற்றும் சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில், இந்தியாவில் முஸ்லிம்கள் ஒரு புனிதப் போரின் (ஜிஹாத்) மத்தியில் இருப்பதாகவும், அவர்களுடைய பண்பாட்டைப் பாதுகாக்க மற்றும் அவர்கள் அமைதியாகவும் கௌரவமாகவும் வாழச் செய்ய பாகிஸ்தானால் மட்டுமே முடியும் என இஸ்மாயில் கூறினார்.
முஹம்மது இஸ்மாயில், பாகிஸ்தான் பற்றியும், தமிழக முஸ்லீம்கள் பற்றியும் கூறிய கருத்து மிகவும் முக்கியமானது. 1947 ஜீன் 9-ம் தேதி மவுண்ட் பேட்டன் திட்டத்தை பற்றி முடிவு செய்ய டில்லியில் அனைத்திந்திய முஸ்லிம் லீக் கவுன்சில் கூட்டம் நடந்தது. இஸ்மாயிலைத் தலைவராக கொண்ட சென்னை முஸ்லீம் லீக் குழு, ஜின்னாவை சந்தித்து, மாப்ளாஸ்தான் கோரிக்கையை பற்றி விவாதித்தது, மாப்ளாஸ்தான் கோரிக்கையை நடைமுறைக்கு ஒவ்வாதென்றும், அதீதக் கற்பனையென்று சொல்லித் தள்ளி விட்டதாக தெரிவித்தார்கள்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய முஹம்மது இஸ்மாயில், பாகிஸ்தான் இந்திய முஸ்லீம்களுக்கு நல்லதென்று வாதித்துக் கீழ்க் கண்ட அறிக்கையை வெளியிட்டார்.
நான் பல தடவை கூறியுள்ளது போல் ஒரு முஸ்லிம் எப்போதுமே முஸ்லிம் தான் – முதலில் முஸ்லிம் தான், இறுதியிலும் முஸ்லிம் தான்…… தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம்கள் தாங்கள் பெரும்பான்மையாக இருந்த பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு சுதந்திர நாட்டைக் கோரியது நியாயம் தான். பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கும், அவர்களுக்குச் சற்றும் சளைக்காமல், இந்துஸ்தான் முஸ்லிம்களும் பாகிஸ்தானை அடைந்ததற்காகப் பெருமைப்படுகிறார்கள். அது மட்டுமல்ல அவர்கள் அனைவரும் அப்படிப் பெற்ற அந்தப் பாகிஸ்தானைப் பற்றியும் கூடப் பெருமைப்படுகின்றார்கள். நானும் மற்ற முஸ்லிம்களும் நாங்கள் பெற்ற பாகிஸ்தான் சிறந்தது, சுதந்திரமானது, பெருமைமிக்கது என்பதைத் தவிர வேறு வகையானது என்று ஒரு கணம்கூட ஒப்புக் கொள்ள மாட்டோம்.
இன்று வானளாவ புகழும் எம். முகமது இஸ்மாயில் தன்னை எப்போதும் முஸ்லீம்மாக தான் கருதினார். இந்தியாவிற்கு ஆதரவாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தையே பல இடங்களில் கூறினார்.
1941 மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் தினத்தைக் கொண்டாடுவதற்காகச் சென்னையிலுள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தில், அப்போது சென்னை மாவட்ட முஸ்லீம் லீக்கின் தலைவர் எம். முகமது இஸ்மாயில், இந்தியா ஒருபோதும், ஒரே நாடாகவே ஒரே அரசாகவோ இருந்ததில்லை என்றும், மொழி அல்லது பண்பாட்டை விட மதம் ஒரு மனிதனின் வாழ்க்கையை அதிகம் பாதிப்பதால் தான் நாட்டை மத அடிப்படையில் பிரித்து விடலாமென்றும் கூறினார். இது காயிதே மில்லத்தின் உண்மை சொரூபத்தை காட்டுகிறது.
இப்படிப்பட்ட முஸ்லீம் லீக் மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள்.
இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக்கிற்கு உறுதுணையாக உள்ள கட்சி. தற்போது கட்சியின் தலைவராக உள்ள கார்கே, சோனியாவின் கண் அசைவுக்கு ஏற்ப நடக்கக்கூடியவர். சுதந்திர போராட்ட காலங்களில் தேச பக்தியை உருவாக்கிய, வந்தேமாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், எப்படி மதசார்பற்றவர்களாக இருப்பார்கள்.
பட்லா ஹவுஸ் மோதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டபோது சோனியா எப்படி அழுதார் என்பதை சல்மான் குர்ஷீத் பலரிடம் தெரிவித்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சோனியா, திக்விஜய் சிங் மற்றும் சல்மான் குர்ஷீத் ஆகியோரை உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆசம்கருக்கு அனுப்பி, தீவிரவாதிகளின் குடும்பத்தினரிடம் 'மன்னிப்பு' கேட்கச் செய்தார். அந்த மோதலில் வீரமரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மாவின் பிள்ளைகள் இதைக் கேட்டபோது வாய் மூடி மௌனியாவிட்டார்.
அஜ்மல் கசாப் சிறையில் இருந்தபோதே, சோனியாவின் முக்கிய அடியாட்களில் ஒருவரான திக்விஜய் சிங், உருது பத்திரிகையாளர் அஜீஸ் பர்னி எழுதிய ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில், 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கைவரிசை அல்ல, மாறாக ஆர்.எஸ்.எஸ்-இன் செயல் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
58 பேரைக் கொன்ற கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்ட பிடிபி தலைவர் அப்துல் நசீர் மதானிக்கு பரோல் வழங்கக் கோரி, சோனியாவின் காங்கிரஸ் கட்சி இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து 2006-ல் கேரள சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
இதே மதானிதான் கைது செய்யப்பட்டபோது, அப்போதைய கேரள முதலமைச்சராக இருந்த ஏ.கே. ஆண்டனி, கேரளாவில் மத நல்லிணக்கத்திற்கு மதானிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், அவரைப் பரோலில் விடுவது மாநிலத்தில் மதக் கலவரங்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியிருந்தார். அதை கண்டுகொள்ளவில்லை.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் தனது சொந்தப் பேரணியில் நடந்த குண்டுவெடிப்புகளை நரேந்திர மோடியே திட்டமிட்டு அரங்கேற்றியதாக சோனியாவின் காங்கிரஸ் கட்சி வெட்கமின்றி குற்றம் சாட்டியுள்ளது. இந்த குண்டுவெடிப்புகளில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
2002 பிப்ரவரி 27 அன்று, கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸின் எஸ்-7 பெட்டியை, பயங்கரவாதிகளால் ஊடுருவப்பட்ட 1000 முஸ்லிம்கள் கொண்ட கும்பல் ஒன்று சூழ்ந்துகொண்டு, உள்ளே பெட்ரோல் ஊற்றி, வெளியிலிருந்து பூட்டி, தீ வைத்து 58 கார் சேவக்குகளை உயிருடன் எரித்துக் கொன்றது என்ற உண்மையை சோனியாவின் காங்கிரஸ் கட்சி நிராகரித்தது.
எங்கேயும் எந்த முஸ்லிம் கும்பலும் இருந்ததாகக் கூறப்படும் வாதத்தையும் அது நிராகரித்தது. எஸ்-7 பெட்டியின் பயணிகள் ஜவ்ஹர் செய்ய விரும்பியதால், தங்களைத் தாங்களே தீ வைத்துக் கொண்டதாக அது கூறியது.
ஒரு விஷயத்தை நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். திருமதி சோனியா மைனோவுக்கு இந்த நாட்டுடன் எந்தவிதமான உணர்வுப்பூர்வமான பிணைப்பும் இல்லை. அவரைப் பொறுத்தவரை, இந்தியா என்பது தன் கணவரின் நாடு; தன் பிள்ளைகளுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, அவர் தன் கணவரின் மரணத்திற்குப் பிறகு அங்கே வாழ்ந்து, அங்கே பணியாற்றுவார். எனவே, அவருடைய செயல்கள் இந்த நாட்டைச் சீரழித்தாலும் கூட, அது தன் அன்பு மகன் ராகுல் காந்திக்கு உயர் பதவியைப் பெற்றுத் தரும் வரை, அவர் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்.
அயோத்தியில் நடந்த ராம் லல்லாவின் அபிஷேக விழாவைக் கேள்விக்குள்ளாக்கியது முதல் பிரதமர் மோடியின் துவாரகாதிஷ் பயணத்தைக் கேலி செய்தது வரை, காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக சனாதன தர்மத்தை அவமதித்து வருகிறது.
2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, அந்தத் தோல்விக்கான காரணங்களை ஆராய ஏ.கே. ஆண்டனி தலைமையில் காங்கிரஸ் ஒரு குழுவை நியமித்தது. முஸ்லிம்களை காங்கிரஸ் திருப்திப்படுத்தியதே அவர்களின் தோல்விக்குக் காரணம் என்று அக்குழுவின் கருத்து அமைந்தது. எனவே, காங்கிரஸ் தனது போக்கை மாற்றிக்கொண்டது; அதன் விளைவாக, கர்நாடகத் தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி சிவன் கோவில்களுக்குச் சென்று தன்னை ஒரு ஜானுதாரி பிராமணர் என்று அறிவித்துக்கொண்டார்.
ஆனால் அதன் பிறகும் அவர்களால் கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை, அவர்கள் மீண்டும் பழைய பாதைக்கே திரும்பிவிட்டனர். முதலில் குலாம் நபி ஆசாத் காவி பயங்கரவாதம் என்று முழக்கமிடுகிறார். மோடி அரசைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு உதவுமாறு கோரி மணிசங்கர் ஐயர் பாகிஸ்தானுக்குச் செல்கிறார். பி.சிதம்பரம் பாஜக குறித்து சில பாதகமான கருத்துக்களைத் தெரிவித்தார். பின்னர் சசி தரூர் இந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். பின்னர் சமீபத்தில், காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லிம் கட்சி என்று ராகுல் காந்தி தெரிவித்த கருத்து.
இந்தச் செயல்கள் அனைத்தும் ஒரே திசையைத்தான் சுட்டிக்காட்டுகின்றன; சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காக, பெரும்பான்மை மக்களின் விருப்பங்களைப் புறக்கணிக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. காங்கிரஸ் ஒரு முஸ்லிம் ஆதரவுக் கட்சி என கூறுவதை விட, காங்கிரஸ் கட்சியே ஒரு முஸ்லிம் கட்சியாகும்.
இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தமிழக வெற்றி கழகம், வெற்றி பெற்றதிலிருந்து கிறிஸ்துவ பிரச்சார கட்சியாக மாறி வருகிறது. கிறிஸ்துவ மத பிரச்சார பிரமுகர் சபாநாயகர். தமிழ் மொழியை இழிவாக பேசி, ஹீப்ரூ மொழியை உயர்த்தி பேசியவர் நிதி அமைச்சர். இந்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்த தி.கவின் அனுதாபி ஒரு அமைச்சர்.
ஆட்சி அமைத்தவுடன் துவங்கிய முதல் நாள் சட்டமன்ற கூட்ட தொடரில் பைபிளை உதாரணமாக சுட்டிக்காட்டியது, அப்பட்டமான மத பிரச்சாரம்.
ஜோசப் சி.விஜய் முதல்வராக பதவியேற்றவுடன், கத்தோலிக்க பாதிரியர்கள் வெளியிட்ட அறிவிப்புகள். எங்களுக்கு ஒரு கத்தோலிக்க முதலமைச்சர் கிடைத்திருப்பது குறித்து நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம், விஜய் ஜோசப் என்ற முதல் பெயரைக் கொண்ட ஒரு கிறிஸ்துவர் என்று கூறி, இந்து தேசியவாதிகள் வாக்காளர்களைப் பிளவுபடுத்த முயன்ற பின்னரே, அவரது கத்தோலிக்கப் பின்னணி பொதுமக்களின் கவனத்திற்கு வந்து என்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துவர்கள் பிரச்சனைகளைச் சந்தித்து வரும் வேளையில், இந்தியாவின் முதல் பெரிய மாநிலத்தில் ஒரு கத்தோலிக்க முதலமைச்சர் இருப்பது எங்களுக்குக் கிடைத்த ஒரு பாக்கியம் என்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செய்தித் தொடர்பாளர் வின்சென்ட் சின்னதுரை தெரிவித்தார்.
இப்படி புகழாரம் சூட்டிக் கொள்ளும் தவெக மதசார்பற்ற தன்மை கொண்ட கட்சியாக மாறுமா? எனவே பெயரில் மட்டுமே மதசார்பற்ற தன்மையை கொண்டுள்ள இந்த கூட்டணியின் உண்மையான முகம் இந்து எதிர்ப்பு கூட்டணியே தவிர வேறு ஒன்றும் கிடையாது.
"