ஒரே நாடு
கட்டுரைகள்

FCRA திருத்த மசோதாவால் திருச்சபை ஏன் கவலைப்படுகிறது

எழுதியவர்

ஈரோடு சரவணன்

21 ஆகஸ்ட் 2026

மூத்த எழுத்தாளர்; தமிழக பாஜகவின் மாநிலப் பிரச்சாரப் பிரிவுத் தலைவராக சுமார் 10 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர். நீண்டகாலமாக அரசியல், தேசியம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.

ஈரோடு சரவணன் எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் →

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA)வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA)

திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியின் காரணமாக, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ சபைகளின் பாதிரியார்கள் மற்றும் மதகுருமார்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? இதற்கு முதன்மையான காரணம், அந்நிய நிதியின் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்கள் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான வருவாயை இழக்க அவர்கள் விரும்பவில்லை என்பதுதான். பல கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்க பாதிரியார்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

சென்னையில் உள்ள புனித மேரி இணைப் பேராலயம் — கோப்புப் படம்சென்னையில் உள்ள புனித மேரி இணைப் பேராலயம் — கோப்புப் படம்

இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையும் பல்வேறு கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளும், இந்திய அரசுக்கு அடுத்தபடியாக நாட்டின் மிகப்பெரிய தனியார் நில உரிமையாளர்களாக இருக்கிறார்கள். கத்தோலிக்க திருச்சபை மற்றும் பல்வேறு மிஷனரி அமைப்புகளின் வசம் இந்தியா முழுவதும் சுமார் 7 கோடி ஹெக்டேர் (சுமார் 17.29 கோடி ஏக்கர்) நிலம் இருப்பதாகவும், இந்த அசையாச் சொத்துக்களின் தோராயமான ஒட்டுமொத்த மதிப்பு ரூ.20,000 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மிஷனரி சொத்துக்கள் குறித்த பொதுவான பட்டியல் இல்லாததால், சில இடங்களில் நிலங்களை விதிகளை மீறி விற்பனை செய்வதாகவும், வணிக ரீதியாகப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) போன்ற நீதிமன்றங்கள், தேவாலயச் சொத்துக்களில் ஏற்படும் நிதி முறைகேடுகளைத் தடுக்கவும், அவற்றை முறைப்படுத்தவும் ஒரு சட்டப்பூர்வ வாரியத்தை உருவாக்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டுள்ளன. மகாராஷ்டிரா போன்ற மாநில அரசுகள் தேவாலயங்கள் மற்றும் மிஷனரிகளுக்குச் சொந்தமான பிரிட்டிஷ் கால நிலப் பயன்பாடுகள் குறித்து மாநில அளவிலான விரிவான தணிக்கைக்கு (Land Audit) உத்தரவிட்டுள்ளன. மேலும், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பழைய குத்தகை விதிகளை மீறியதாகக் கூறி சில மிஷனரி நிலங்கள் அரசால் மீட்கப்பட்டுள்ளன.

மதுரை உயர் நீதிமன்றக் கிளைமதுரை உயர் நீதிமன்றக் கிளை

28.5.2024 அன்று மதுரை கிளை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகவும் முக்கியமானது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இந்து கோயில் சொத்துக்கள் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படியும், வஃக்பு வாரியச் சொத்துக்கள் வஃக்பு வாரியச் சட்டப்படியும் பாதுகாக்கப்படுகின்றன. கிறிஸ்தவ ஆலயச் சொத்துக்களைப் பொறுத்தவரை இதுபோன்ற சட்டம் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. அனைத்து மதங்களையும் சமமாக அணுக வேண்டும். இதனால் தேவாலயச் சொத்துக்களைப் பதிவுத்துறைச் சட்டம் 22-ஏ பிரிவின் கீழ் கொண்டு வர வேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய நாட்டின் நிதியின் மூலம் மத மாற்றம் நடைபெறுகிறது. மிஷனரிகளின் மார்க்கெட்டிங் உத்திகள்தான் மக்களை கும்பலாக மதமாற்றம் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பதாக மதமாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோர் குறிப்பிடுகிறார்கள். உதாரணமாக, 2000-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 கோடியே 40 லட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் 7 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. வெளியே தெரிவதைவிட மிகக் கடுமையாக மதமாற்றம் இந்தியாவில் நடைபெற்று வருவதை அப்புள்ளிவிவரம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

உணவு, வசிப்பிடம் மற்றும் ஆடை போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகக் கஷ்டப்படுவோர்தான் மிஷனரிகளின் முதல் இலக்காக உள்ளனர். அதிலும் குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளை இவர்கள் எளிதில் மதமாற்றம் செய்ய முடிகிறது. அவர்களிடம் நிலவும் கடவுள் மீதான பயம் மற்றும் அறியாமை போன்றவை மிஷனரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. இவ்வாறு மத மாற்றம் நடைபெறுவதற்கு நிதி ஆதாரங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு வரும் அந்நிய நிதியாகும்.

Edge International மற்றும் Billion Soul Network என்ற முன்னணி கிறிஸ்தவ அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜேம்ஸ் ஓ. டேவிஸ் கூறுகையில், “இந்தியாவில் 6 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். உலகிலேயே அதிகமாக கிறிஸ்தவர்கள் வாழும் இரண்டாவது தேசம் இந்தியா. உலகிலேயே அதிகம் கிறிஸ்தவர்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும்” என்கிறார். இதற்காகவே 2,000 கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரம் தேவாலயங்களை மிகுந்த செலவு செய்து கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிலும் வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள என்.ஜி.ஓ.க்கள் மக்களை மதமாற்றம் செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் நிதி பெறுவது அதில் தெரியவந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் செயல்படும் நார்த் பிளாக், புது தில்லிமத்திய உள்துறை அமைச்சகம் செயல்படும் நார்த் பிளாக், புது தில்லி

ஆண்டுதோறும் சுமார் ரூ.10,500 கோடி இந்திய என்.ஜி.ஓ.க்களுக்கு வருகிறது. மதமாற்றம் செய்வது, நாட்டின் கலாசாரத்தை உருக்குலைப்பது மட்டுமே இந்த நிதியின் நோக்கம் என்று கூறப்படுகிறது. உள்துறை அமைச்சகத் தகவல்படி, கன்னியாகுமரியைச் சேர்ந்த Tuticorin Diocesan Association மற்றும் Tuticorin Multipurpose Social Service Society ஆகிய இரண்டும் அதிக அளவில் நிதியுதவி பெற்றுள்ளன என்பது தெரியவந்துள்ளது. இவற்றுக்கு அடுத்தபடியாக Rural Uplift Centre மற்றும் Association (TDA) of the Latin Catholic Diocese of Tuticorin ஆகிய என்.ஜி.ஓ.க்களும் அதிக அளவில் நிதியுதவி பெற்றுள்ளன. இந்த என்.ஜி.ஓ.க்களுக்கு பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் நிதி வந்துள்ளதும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்மொழியப்பட்ட FCRA திருத்த மசோதா, 2026 குறித்து பல்வேறு கிறிஸ்தவ மற்றும் திருச்சபை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், இந்த விவாதத்தின் மையக் கேள்வி, வெளிநாட்டு நிதியின் மூலம், நோக்கம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா என்பதுதான். கல்வி, சுகாதாரம், பேரிடர் நிவாரணம், ஏழைகளுக்கான உதவி போன்ற அறிவிக்கப்பட்ட நோக்கங்களுக்காகப் பெறப்படும் நிதி, அதே நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், அதற்கான வெளிப்படையான கணக்குப்பதிவுக்கு எதிர்ப்பு இருக்க வேண்டியதில்லை.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டின்படி, திருத்தங்களின் நோக்கம் எந்த மதத்தினரின் தொண்டு நடவடிக்கைகளையும் தடுப்பது அல்ல. FCRA பதிவு ரத்து செய்யப்பட்டாலோ, காலாவதியானாலோ அல்லது ஒப்படைக்கப்பட்டாலோ, வெளிநாட்டு நிதியின் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களை எவ்வாறு பாதுகாத்து நிர்வகிப்பது என்பது தொடர்பான சட்ட நடைமுறைகளைத் தெளிவுபடுத்துவதே முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றப் புதிய கட்டடம், புது தில்லிநாடாளுமன்றப் புதிய கட்டடம், புது தில்லி

FCRA என்பது மோடி அரசால் புதிதாக உருவான சட்டம் அல்ல. வெளிநாட்டுப் பங்களிப்புகளை ஒழுங்குபடுத்தும் நடைமுறை 1976-ல் தொடங்கி, 2010-ல் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. 2020-ஆம் ஆண்டு திருத்தங்களில் வெளிநாட்டுப் பங்களிப்புகளுக்கான பிரத்யேக வங்கிக் கணக்கு, துணை மானியங்கள் மீதான கட்டுப்பாடு, நிர்வாகச் செலவுகளுக்கான வரம்பு போன்றவை இடம்பெற்றன. எனவே, FCRA விவாதத்தின் அடிப்படை மூன்று கேள்விகள்: பணம் எங்கிருந்து வந்தது? எதற்காகப் பெறப்பட்டது? எங்கே செலவிடப்பட்டது? இந்த மூன்றுக்கும் தெளிவான பதில்கள் இருந்தால், வெளிப்படையான நிதி நிர்வாகம் எந்த சட்டப்பூர்வமான அமைப்புக்கும் பாதகமாக இருக்காது.

FCRA முக்கியமாக கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் குழுக்களைக் குறிவைக்கிறது என்பதே பொதுமக்களிடம் பரப்பப்படும் கதை. இது உண்மையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. 2016-ல், உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவைத் தவறவிட்ட 11,000-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் FCRA உரிமங்களை அரசாங்கம் ரத்து செய்தது. அந்தப் பட்டியல் கிறிஸ்தவ அமைப்புகளின் பட்டியல் அல்ல. அதில் ராமகிருஷ்ண மிஷனும் அடங்கியிருந்தது.

இந்தியாவின் மிகப் பணக்கார மற்றும் புகழ்பெற்ற இந்து கோவிலை நடத்தும் அமைப்பான திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, கோவிலின் நன்கொடைப் பெட்டி மூலம் வசூலிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணம் தொடர்பான வெளிநாட்டுப் பரிவர்த்தனை ஒழுங்குமுறை விதிமீறல்களுக்காக ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் வெளிநாட்டு நன்கொடை உரிமமும் பின்னர் புதுப்பிக்கப்படாமல் திரும்பப் பெறப்பட்டது. ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை, மகரிஷி ஆயுர்வேத பிரதிஷ்தான், இந்து மிஷன் மருத்துவமனை, ஸ்ரீ துர்கா கல்வி மேம்பாட்டு நலச் சங்கம், ஓம் சக்தி கல்வி அறக்கட்டளை, சத்யலோக் அறக்கட்டளை மற்றும் சத்வித்யா ஸ்தானம் அறக்கட்டளை ஆகியவற்றையும் சேர்க்கலாம். அனைவரும் ஒரே வலையில் சிக்கியுள்ளனர்.

இந்த உண்மையை கிறிஸ்தவ பாதிரியார்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.