ஒரே நாடு
← கட்டுரைகள்

வன்னியரசுவின் மாட்டிறைச்சி சர்ச்சைக்கு தமிழர்களின் எதிர்வினை: விஜய் புறக்கணிக்கக் கூடாத எச்சரிக்கை!

எழுதியவர்

Oreynaadu Desk

5 அக்டோபர் 2026

தமிழ்நாடு சமூகநலத் துறை அமைச்சர் வன்னியரசு — கோப்புப் படம்தமிழ்நாடு சமூகநலத் துறை அமைச்சர் வன்னியரசு — கோப்புப் படம்

தமிழ்நாட்டுக்கு அவசியமே இல்லாத ஒரு சர்ச்சையை சமூகநலத் துறை அமைச்சர் வன்னியரசு உருவாக்கியுள்ளார்.

‘சமூகநல விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கலாம்’ என்று அவர் தெரிவித்திருந்தார். பின்னர் அந்தக் கருத்து தமிழக அரசால் திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், அவரது கருத்துக்குப் பிறகு ஒரே நாடு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள், தமிழக வெற்றிக் கழக (TVK) அரசின் கவனத்தைப் பெற வேண்டியவை.

மொத்தம் 627 பேர் பங்கேற்ற இந்தக் கருத்துக்கணிப்பில், 464 பேர், அதாவது 74 சதவீதம் பேர், வன்னியரசின் முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதரவு தெரிவித்தவர்கள் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்களே. அதிலும் முக்கியமாக, பதிலளித்த 572 இந்துக்களில் 79 சதவீதம் பேர் இந்த முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒரே நாடு மேற்கொண்ட இந்த சமூகக் கருத்தாய்வு மேலும் முக்கியமான ஒன்றை வெளிப்படுத்துகிறது. பல்வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், மற்றொரு குடிமகன் என்ன உணவு சாப்பிடுகிறார் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; மாறாக, கலாச்சார ரீதியாக உணர்வுபூர்வமான ஒரு விவகாரத்தில் தவெக அரசு தலையிடுவதற்கே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிலர், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் கோழி, ஆட்டிறைச்சி மற்றும் முட்டை போன்ற உணவு வகைகள் போதுமானதாக இல்லாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்கள் இது போன்ற விடுதிகளில் தங்குகிறார்கள். இதில், சர்ச்சைக்குரிய உணவுப் பழக்கங்கள் தொடர்பான விவகாரங்களில் ஒரு அரசு நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் சிலர் வாதிட்டனர்.

வன்னியரசு, மக்களின் மனநிலையைத் தவறாகப் புரிந்துகொண்டது துல்லியமாக இந்த இடத்தில்தான்!...

ஒருவர் தனிப்பட்ட முறையில் என்ன உணவைத் தேர்வு செய்து சாப்பிடுகிறார் என்பது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால், தீவிரமான கலாச்சார உணர்வுகளைத் தொடக்கூடிய ஒரு விவகாரத்தில் அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையே இல்லாமல் தலையிட்டு, அதனை மொத்த பேர் தலையிலும் திணிப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம்.

எனவே, முதலமைச்சர் விஜய் இந்தச் சம்பவத்தை ஒரு அமைச்சரின் சங்கடமான தவறாக மட்டும் கருதக் கூடாது. இறுதியில், அவரது அமைச்சரவையில் இருந்து பேசுபவர்கள் உருவாக்கும் சர்ச்சைகளுக்காக அவரது அரசாங்கமே ஒட்டுமொத்தமாக மதிப்பிடப்படும்.

வன்னியரசு தற்போதைக்கு தனது பரிசீலனையிலிருந்து பின்வாங்கியுள்ளார். சமூக நல விடுதிகளில் மாட்டிறைச்சி அறிமுகப்படுத்தப்படாது என்றும், தற்போதுள்ள கோழி மற்றும் ஆட்டிறைச்சி வழங்கும் நடைமுறையே தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஆபத்தான சூழலைத் தொட்ட பிறகு பின்வாங்குவது, ஆரம்பத்தில் ஏற்பட்ட தவறான கணிப்பை அழித்துவிடாது.

தவெக அரசு இந்து எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட கூட்டாளிகளால் மீண்டும் மீண்டும் கலாச்சார மோதல்களுக்குள் தனது அரசை இழுக்க அனுமதிக்கிறது. இதனால் எழும் மக்களின் அதிருப்தி என்பது இறுதியில் அரசியல் கோபமாகவே மாறும். சர்வ நிச்சயமாக இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்த கருத்துக்கணிப்பு ஒரு தேர்தல் முடிவு அல்ல. ஆனால், பெரும்பான்மையான இந்து பதிலளிப்பாளர்களில் 79 சதவீதம் பேர் அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது என்பது எந்த அரசாங்கமும் சாதாரணமாகப் புறக்கணித்துவிடக் கூடாத ஓர் எச்சரிக்கை! அதிருப்தி மக்களின் அறிக்கை!

இந்த கருத்துக்கணிப்பை முதல்வர் ஜோசஃப் விஜய் புறக்கணிப்பது அவ்வளவு எளிதா என்ன?!