ஒரே நாடு
← கட்டுரைகள்

150 ஆண்டுகளாக நம் தேச ஆன்மாவின் குரல்!

எழுதியவர்

Oreynaadu Desk

12 செப்டம்பர் 2026

‘வந்தே மாதரம்’ பாடலின் வரிகளை ஓவியங்களாகச் சித்தரிக்கும், 1923-ல் வெளியான அரிய ஓவியம்‘வந்தே மாதரம்’ பாடலின் வரிகளை ஓவியங்களாகச் சித்தரிக்கும், 1923-ல் வெளியான அரிய ஓவியம்

நாம் விரும்பிக் கேட்கும் பாடல்கள் இருக்கின்றன.
நாம் நினைவில் வைத்திருக்கும் பாடல்கள் இருக்கின்றன.
அதற்கும் அப்பால், ஒரு தேசத்தின் ஆன்மாவாகவே மாறிவிடும் பாடல்களும் இருக்கின்றன.

பாரதத்தைப் பொறுத்தவரை, “வந்தே மாதரம்” பாடல் அந்த அரிய வகையைச் சேர்ந்தது.

சுதந்திரப் போராட்ட காலத்தில், அந்நிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த பாரத மக்களுக்கு இந்த இரண்டு சொற்களும் வெறுமனே ஒரு பாடலின் தலைப்பாக இருக்கவில்லை. அவை துணிச்சல், தியாகம், எதிர்ப்பு, தேசியப் பெருமை மற்றும் தாய்நாட்டுடனான உணர்வுபூர்வப் பிணைப்பு ஆகியவற்றின் ஆழமான அடையாளங்களாகவே மாறியிருந்தன.

பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் 1875ஆம் ஆண்டு “வந்தே மாதரம்” பாடலை இயற்றினார். பின்னர், அது 1882ஆம் ஆண்டு அவர் எழுதிய புகழ்பெற்ற “ஆனந்தமடம்” நாவலில் இடம்பெற்றது.

‘இது என் தேசம்’ என்ற கருத்தை நமக்கெல்லாம் நெருக்கமானதும் புனிதமானதுமாக மாற்றிய விதமே இந்தப் பாடலைச் சிறப்பானதாக மாற்றியது.

பாரதம் எனும் அழகிய தேசத்தை வெறும் எல்லைகளாலும் அரசியல் அமைப்புகளாலும் மட்டுமல்லாமல், அவளது ஆறுகள், வளமான நிலங்கள், இயற்கைச் செழிப்பு மற்றும் நாகரிகப் பெருமை ஆகியவற்றின் வழியாக இப்பாடல் கற்பனை செய்கிறது.

1905ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தின் போது இப்பாடலுக்கான முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது.

ஆங்கிலேயர்களின் கொள்கைகளை எதிர்த்து, பாரத மக்கள் அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தபோது, “வந்தே மாதரம்” எனும் பாடலின் தலைப்பே அந்த இயக்கத்தின் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளில் ஒன்றாக, மாபெரும் முழக்கமாக மாறியது. பொதுக்கூட்டங்கள் அதன் முழக்கத்தால் அதிர்ந்தன. தேசியவாதிகள் அதன் செய்தியை நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் சென்றனர். தேசிய சுயமரியாதை எனும் விழிப்புணர்வின் பின்னணியில் உரத்து ஒலித்த வந்தே மாதரம் பாடல், ஒரு வலிமையான உணர்வுச் சக்தியாக, நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் நீண்ட சங்கிலியாக அன்று விளங்கியது.

ஆங்கிலேயர்களின் பயம் கலந்த தடுப்பு!

அதன் வலிமையை ஆங்கிலேயர்கள் புரிந்துகொண்டனர். குறிப்பாக, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசியல் கூட்டங்களில் வந்தே மாதரம் பாடலைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதை ஒடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே அதன் தார்மீக வலிமையை மேலும் அதிகரிக்கச் செய்தது.

அதன் தாக்கம் விரைவில் தேசியவாத பத்திரிகைத் துறையிலும் புரட்சிகர இயக்கங்களிலும் தீயாய்ப் பரவியது. 1906ஆம் ஆண்டு, “Bande Mataram” என்ற செல்வாக்குமிக்க ஆங்கில நாளிதழ் தேசியவாதச் சிந்தனைகளுக்கான முக்கியமான தளமாக உருவெடுத்தது. ஸ்ரீ அரவிந்தர் அதன் மிகச் சக்திவாய்ந்த அறிவுசார் குரல்களில் ஒருவராக விளங்கினார்.

இந்தச் செய்தி பாரத எல்லைகளைக் கடந்து வெளிநாடுகளுக்கும் சென்றது.

சுதந்திர இந்தியா இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மரபைத் தொடர்ந்து பாதுகாத்து வந்து, வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு அடுத்த மரியாதைக்குரிய ‘தேசியப் பாடல்’ எனும் அந்தஸ்தை வழங்கியது.

பிரதமர் மோடியும் புதிய தலைமுறையின் வந்தே மாதரமும்

பங்கிம் சந்திரர் இந்த நிலைத்த தேசிய வெளிப்பாட்டை பாரதத்திற்குப் பாடலாக வழங்கி இன்று 150 ஆண்டுகளாகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அதன் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் புதிய தலைமறையுடன் இணைக்கும் பிரம்மாண்ட முயற்சியை மேற்கொண்டது.

வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, ஓராண்டு கால தேசிய நினைவுகூரல் நிகழ்ச்சியை மத்திய அரசு சென்ற ஆண்டு தொடங்கியது. சென்ற நவம்பரில் தொடங்கி, 2026 நவம்பர் 7ஆம் தேதி வரை விழாக்கள் நடைபெறுகிறது.

வந்தே மாதரம் பாடலின் வரலாறு, பண்பாட்டு முக்கியத்துவம் மற்றும் இந்தியாவின் தேசிய விழிப்புணர்வில் அது ஆற்றிய பங்களிப்பு போன்றவற்றை எடுத்துரைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், சிறப்பு நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் வெளியிடப்பட்டன.

செங்கோட்டை மதில்களில் முதல் முறையாக…

பாரதம் தனது 80வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியபோது, வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டு கால மரபு தேசியக் கொண்டாட்டங்களில் முக்கிய இடத்தைப் பெற்றது. செங்கோட்டையில், சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக முதன்முறையாக “வந்தே மாதரம்” பாடல் பாடப்பட்டது.

“வந்தே மாதரம்” பாடலின் பயணம், பல வகைகளில், நவீன இந்தியாவின் பயணமே ஆகும்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் அது சுயமரியாதையைத் தூண்டியது.
சுதேசி இயக்கத்தின் போது அது தற்சார்பை ஊக்குவித்தது.
காலனிய அடக்குமுறையின் போது அது தைரியத்தின் வெளிப்பாடாக மாறியது.

இன்று, பிரதமர் மோடி இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையத்தில் நின்றபடி தேசிய தன்னம்பிக்கை, ஆத்மநிர்பர் பாரத் மற்றும் விக்சித் பாரத் ஆகியவற்றைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில், வந்தே மாதரம் பாடல் தரும் உணர்வு இன்றும் அபாரமாகப் பொருந்துகிறது.

150 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், நம் முன்னோர்கள் செய்த தியாகத்தையும், நம் நாடு எனும் பெருமித உணர்வையும், எந்த ஒரு நிலையிலும் ஒற்றுமையாக நின்று வெற்றியடைய வேண்டிய உணர்வினையும், நாட்டுக்கான அர்ப்பணிப்பையும் நமக்கெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதே வந்தே மாதரம் பாடலின் சிறப்பு.

இன்று பாரதத்தின் முன் நிற்கும் சவால்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் எதிர்கொண்ட சவால்களிலிருந்து வேறுபட்டவை. ஆனால் பொறுப்பு அப்படியே உள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் தனக்குக் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நாட்டின் கரங்களை மேன்மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே வந்தே மாதரம் சொல்லும் சேதி!