நாடாளுமன்றத்தில் ஒலித்த வாஜ்பாயின் ‘நறுக்’ கேள்விகள்!
எழுதியவர்
Oreynaadu Desk
15 செப்டம்பர் 2026
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் — கோப்புப் படம்முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் என்றாலே, அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொக்ரான் அணு சோதனையும், முக்கிய நகரங்களை இணைத்த தங்க நாற்கரச் சாலைத் திட்டமும், கார்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அவர் காட்டிய தீவிரமும்தான் நம் எல்லோரின் நினைவிற்கும் வரும்.
வெறும் 32 வயதிலேயே, 1957ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மக்களவைக்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் அடல் பிஹாரி வாஜ்பாய். இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக அவர் பின்னாளில் உருவெடுக்கப் போகிறார் என்பதற்கான அறிகுறிகளை அப்போதே வெளிப்படுத்தினார். தனது தொடக்ககால நாடாளுமன்ற உரையிலேயே மேலோட்டமான கருத்துகளைப் பேசி பொழுதைக் கழிக்காமல், அன்றைய காலகட்டத்தின் மிகவும் சிக்கலான தேசியப் பிரச்சினைகளான காஷ்மீர், கோவா மற்றும் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளின் துயரம் ஆகியவற்றை வாஜ்பாய் நேரடியாக முன்வைத்தார்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து முடிவெடுக்க முடியாமல் அன்றைய காங்கிரஸ் அரசு திணறியதையும், தாமதம் செய்ததையும் அவர் கடுமையாக விமர்சித்தார். அவரது அன்றைய வார்த்தைகள் இன்றும் நினைவுகூரத்தக்கவை: “அகதிகள் குறித்த நமது கொள்கை ‘இதுவல்ல... இதுவல்ல... இதுவுமல்ல’ என்பதாகவே குழப்பமாக உள்ளது.”
காஷ்மீர் விவகாரத்தில், வாஜ்பாய் தனக்கே உரிய நேரடியான பாணியில் கேள்வி எழுப்பினார்: “காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பை நமது ஆயுத பலத்தின் மூலம் எதிரியிடமிருந்து விடுவிக்க முடியுமா என்றால் இல்லை. அதை பாகிஸ்தானுக்குப் பரிசாக அளிக்க வேண்டுமா என்றால் அதுவுமில்லை. அப்படியானால் நாம் என்னதான் செய்யப் போகிறோம் அல்லது செய்ய வேண்டும்?!”
அப்போது போர்ச்சுகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவா விவகாரத்திலும் அதே தெளிவுடன் அவர் கேள்வி எழுப்பினார்: “கோவாவில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமா எனில் இல்லை. அப்படியானால் மக்கள் சத்தியாகிரகம் நடத்துவதை அனுமதிக்க வேண்டுமா என்றால் அதற்கும் இல்லை... இல்லை என்பதே பதிலா?!”
கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வெளியேறி வந்த இந்துக்களின் நிலை குறித்து பேசிய வாஜ்பாய், பிரிவினையின்போது அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நாடாளுமன்றத்திற்கு நினைவூட்டினார். “அந்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது” என்று தீர்மானமாக அறிவித்தார்.
அருமையான பேச்சாளரும் கவிஞருமான வாஜ்பாய், தனது முதல் பதவிக்காலத்திலேயே பின்னாளில் அவரது பொது வாழ்க்கையைப் பெரிதளவில் வரையறுக்கப்போகும் பண்புகளை வெளிப்படுத்தினார். அவரது பேச்சில் துணிவு, தெளிவு, நாட்டின் மீதான ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் சிக்கலான பிரச்சினைகளைக்கூட நாடாளுமன்றம் புறக்கணிக்க முடியாத கேள்விகளாக மாற்றும் திறன் போன்றவை அபரிமிதமாக இருந்தன.
அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களைக் கேள்விகளால் திணறடித்தபோதும் சரி... தானே பின்னாளில் நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தபோதும் சரி... வாஜ்பாயின் நாடாளுமன்றப் பேச்சுகள் ஒவ்வொன்றும் நவரத்தினங்களே!