புதிய ஆட்சியின் தமிழக பட்ஜெட் - ஒரு கூர் நோக்குப் பார்வை!
எழுதியவர்
Oreynaadu Desk
13 ஆகஸ்ட் 2026
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மற்றும் நிதியமைச்சர் என். மேரி வில்சன் — முதல் பட்ஜெட் தாக்கல்தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்து தாக்கல் செய்திருக்கும் முதல் பட்ஜெட், 5 ஆகஸ்டு, 2026 அன்று. இது ஏற்கனவே சென்ற திமுக அரசு இவ்வருடம் தாக்கல் செய்திருந்த பட்ஜெட்டின் திருத்தப்பட்ட வடிவம். இதன் சில முக்கிய பொறுப்புக்கூறல் அம்சங்களை அலசிப் பார்க்கையில், கிடைக்கும் பதில் என்னவோ ஏமாற்றம்தான். இருந்தாலும் நம் அலசலை பொதுவெளியில் பிழிந்து காயப் போட்டால்தானே மக்கள் மத்தியில் வெளுத்ததாக ஆகும்?! அந்த தலையாய கடமையினை செய்கிறோம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை அவை மண்டபம்
- ₹1.22 லட்சம் கோடி புதிய கடனும், தெளிவில்லாத பொருளாதார இலக்கும்?!
மாநிலத்தின் கடன் ₹10 லட்சம் கோடியைத் தொட்டு நிதிநிலை தள்ளாடும் வேளையில், கடனைக் கட்டுப்படுத்த எந்த வழிகாட்டலும் இல்லை. மாறாக, நடப்பாண்டில் மேலும் ₹1.22 லட்சம் கோடி கடன்! "அடுத்த 50 ஆண்டுகளுக்குக் கடன் குறைய வாய்ப்பில்லை" என நிதித்துறை செயலாளரும் கைவிரித்துவிட்டது பெருங்கவலை.
மறுபுறம், 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அரசு முன்வைக்கிறது. ஆனால், அதற்கான வளர்ச்சி விகிதம், முதலீடு மற்றும் துறைவாரியான பங்களிப்பு குறித்த எந்தவொரு உறுதியான செயல்திட்டமும் இல்லை.
மலைப்போல வளரும் கடன் சுமை கண்முன் நிற்க, பொருளாதார இலக்கை அடைவதற்கான பாதையை அரசு எப்போதுதான் வகுக்கப் போகிறது?!
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம், சென்னை
- ₹15,000 கோடி கூடுதல் வருவாய் — கணக்கு எங்கே?!
தொழில்நுட்பம் மூலம் வரி வசூலை மேம்படுத்தி சுமார் ₹15,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்போவதாக அரசு மார்தட்டுகிறது. ஆனால், GST, பதிவுத்துறை, சுரங்கத்துறை என எந்தெந்தத் துறையிலிருந்து எவ்வளவு வருவாய் கிடைக்கும்? இந்த ₹15,000 கோடி என்கிற மதிப்பீடு எந்த அடிப்படையில் கணக்கிடப்பட்டது? இதற்கான எந்தவொரு சிறு விளக்கமும் இல்லை.
ஆக, எதிர்பார்ப்பு மட்டுமே கொட்டிக் கிடக்கிறதே தவிர, அதன் பின்னாலுள்ள உறுதியான கணக்குதான் எங்கு தேடினாலும் காணக் கிடைக்கவில்லை. இதுவும் காற்றில் விட்ட கணக்குதானா?!
- வெளிப்படைத்தன்மை பேசும் பட்ஜெட் - விவரங்கள் எங்கே?
தவெக அரசு பதவி ஏற்றதுமே ஒப்பந்த முறைகளில் (Tender) சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு "கணிசமான செலவு மிச்சம்" ஏற்பட்டதாக அரசு கூறுகிறது. ஆனால் அதற்கான விவரங்கள் இல்லை.
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் (ஜூன் 2026)
அதேபோல், சிறப்புத் திட்ட அமலாக்கத் துறைக்கு ₹17,150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலும், திட்டவாரியான நிதிப் பிரிப்பு, செயல்பாட்டு இலக்குகள் போன்றவை இல்லை.
- ₹2,000 கோடி மடிக்கணினித் திட்டம் — எத்தனை மாணவர்கள், என்ன கணக்கு?!
மாணவர்களின் 'வெற்றி மடிக்கணினித் திட்டத்திற்கு' ₹2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தோ அல்லது வழங்கப்படும் கருவி குறித்தோ விவரங்கள் இல்லை.
- பள்ளிகளுக்கு மெகா அறிவிப்பு; ஒதுக்கீட்டிலோ மெகா சுருக்கம்?!
10,000 அரசுப் பள்ளிகளில் தூய்மை, குடிநீர், கழிப்பறை பராமரிப்பு மற்றும் 24 மணிநேர பாதுகாப்புக்கு ஒதுக்கீடு வெறும் ₹139 கோடி. கணக்கிட்டால், ஒரு பள்ளிக்கு மாதத்திற்குச் சுமார் ₹11,583 மட்டுமே! இந்தச் சொற்பத் தொகையில் இத்தனை சேவைகளை எப்படித் தரமாக வழங்க முடியும்?! பணியாளர், ஒப்பந்த விவரங்களும் இல்லை.
அதேபோல், 3,734 பள்ளிகளுக்கான ₹2,132 கோடி மதிப்பிலான ‘பள்ளி நிறைவுத் திட்டத்திற்கு’ நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கியதோ வெறும் ₹300 கோடி (14.1%) மட்டுமே. மீதமுள்ள ₹1,832 கோடிக்கான கால அட்டவணையும் எங்கு தேடினாலும் இல்லை!
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை (ஜூன் 2026)
- 13 லட்சம் இளைஞர்களுக்கு ₹150 கோடி — ஒருவருக்கு ₹1,154-ல் திறன் புரட்சியா?!
12 லட்சம் கல்லூரி மாணவர்கள், 1 லட்சம் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் என 13 லட்சம் பேருக்கு பயிற்சியளிக்கப்படுமாம். 20,000 இண்டர்ன்ஷிப் வாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான மொத்த ஒதுக்கீடு ₹150 கோடி. அதாவது ஒருவருக்கு சுமார் ₹1,154 மட்டுமே. தவிர, பயிற்சித்தரம், தொழில் கூட்டுறவுகள் போன்றவை தெளிவாக இல்லை. ஆக, திறமையான மனிதவளத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்பதே ஒரு கேள்விக்குறிதான்.
- ₹90 கோடி அறிவிப்பு - கையில் இருப்பதோ வெறும் ₹7.5 கோடி?!
5 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என தடபுடலாக அறிவித்துள்ள அரசு, ₹90 கோடி மதிப்பீட்டுத் திட்டத்திற்கு நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளதோ வெறும் ₹7.5 கோடி (8.3%) மட்டுமே!
பல ஆண்டுத் திட்டங்களுக்கு முழு நிதியும் உடனே தேவையில்லைதான். ஆனால், இவை எங்கு அமையும், எப்போது கட்டி முடிக்கப்படும், மீதமுள்ள ₹82.5 கோடிக்கான ஆண்டுவாரியான ஒதுக்கீடு என்ன என்பது குறித்த எந்த கால அட்டவணையும் பகுதி-1 உரையில் மருந்துக்கும் இல்லை.
சட்டப்பேரவையில் உரை
வெறும் ₹7.5 கோடியை வைத்துக்கொண்டு காற்றில் கட்டப்படும் இந்த நிலையங்கள் எப்போது நிஜமாகும்?!
மொத்தத்தில், காற்றில் கிறுக்குவதை போல எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் போட்ட அதீத கனவு பட்ஜெட்டாக தெரிகிறது. இலக்கை அடைவதற்கான செயல்திட்டங்களோ, திட்ட இலக்குகளின் காலக்கெடுவோ, பயனாளர்களின் கணக்கோ எங்கு தேடினாலும் காணக் கிடைக்கவில்லை.
தவெக முதல் பட்ஜெட் ஒரு மெகா டிஸ்ஸப்பாயிண்ட்மெண்ட்!
பட்ஜெட் குழப்பத்தில் சாமானியன் — கேலிச்சித்திரம்