தமிழால் பாரதம் பாடிய மகாகவி!
எழுதியவர்
Oreynaadu Desk
13 ஆகஸ்ட் 2026
மகாகவி பாரதியார் — கருத்தியல் ஓவியம்நம் பாரத நாடு இன்று 80வது சுதந்திர நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் அறிஞர்கள், குறிப்பாக, சுதந்திர கால கட்டத்தில் வாழ்ந்த பாரத தமிழ் எழுத்தாளர்கள் நம் தேசம் பற்றி என்ன விதமாக எண்ணியிருந்தனர் என சிந்திக்கும் போது, நம் நினைவிற்கு முதலில் வரும் ஒரே கவிஞர் மகாகவி பாரதியார் தான்!
அவர் இத்தனைக்கும் நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே மறைந்து விட்டவர். ஆனாலும், அவர் போல கருத்தாழமிக்க பாடல்களால் சுதந்திர தாகத்தினை ஊட்டிய தமிழ்க் கவிஞர் வேறு எவருமில்லை.
“செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்.” என்கிற பாரதியின் பாடல் வரிகள் வரலாற்றில் பொறிக்கத்தக்க தேசிய வரிகள்!
பாரதியின் பார்வையில், இந்தியாவின் ஒற்றுமை என்பது ஒரே மாதிரியான தன்மையைக் குறிக்கவில்லை. பல மொழிகள், பல மரபுகள், பல பிராந்தியங்கள் கொண்ட ஒரு தேசம், ஆழமான தேசிய உணர்வின் மூலம் ஒன்றுபட முடியும் என்ற நம்பிக்கையே அவரது சிந்தனையின் மையமாக இருந்தது. பல மொழிகளைப் பேசினாலும், ஒரே தேசியச் சிந்தனையால் இணைக்கப்பட்ட நாடு என்பதே பாரதத்தின் இயல்பு என்ற பாரதியின் கருத்து இதில் வெளிப்படுகிறது.
இது வெறும் நிர்வாகக் கோஷமல்ல; "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற பாரதிய ஜனதா கட்சியின் நாகரிகக் கொள்கையின் கவிதை வடிவமாகும்.
அதே போலவே தேசிய உணர்வினை ஊட்டும் மற்ற பாடல் வரிகள்!...
"வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!"
மேற்கண்ட வரிகள், பிரிவினை அரசியலின் அடித்தளத்தையே சவாலுக்கு உட்படுத்துகின்றன.
பாரதியின் பார்வையில், தமிழ் மற்றும் இந்தியன் என்ற இரு அடையாளங்களும் ஒன்றுக்கொன்று போட்டியிடுபவை அல்ல. அவை, ஒன்றை ஒன்று விரிவுபடுத்தும் அடையாளங்கள்.
தமிழ் அவரது நெருக்கமான கலாச்சார அடையாளம் என்றால், பாரதம் அந்த அடையாளத்தின் விரிந்த நாகரிக வடிவமாக இருக்கிறது. எனவே, அவரது தேசிய உணர்வு, ஆழமான வேர்களைக் கொண்ட, அதே நேரத்தில் பரந்த பார்வையுடைய நாகரிக தேசிய உணர்வாகும்.
காசியும் காஞ்சியும் – அறிவால் இணைந்த பாரதம்
மகாகவி பாரதிக்கு இந்தியா என்பது புனிதத் தலங்கள், அறிவுப் பாரம்பரியம் மற்றும் கலாச்சார உறவுகளால் ஒன்றிணைக்கப்பட்ட உயிருள்ள நாகரிகம்!
அவருக்குக் கங்கை மற்றும் காவிரி நதிகள் இரு எதிர் உலகங்களின் அடையாளங்களல்ல… காசியும் காஞ்சியும் வட–தெற்கு எதிர்ப்பின் சின்னங்களுமல்ல. அறிவாற்றல் என்பது நாட்டின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் சுதந்திரமாகப் பரவ வேண்டும் என்பதே அவரது கனவு.
அதையே அவர்,
"காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்."
என்றார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கூட தேசிய ஒருமைப்பாட்டிற்கான கருவியாக மாற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையே இதில் வெளிப்படுகிறது. வடக்கும் தெற்கும் ஒன்றுக்கொன்று அறிவையும், கவிதையையும், வலிமையையும் பகிர்ந்து வளர வேண்டும் என்பதே அவரது பார்வை. இது நாட்டின் ஒற்றுமையுணர்வையே மேலும் வலியுறுத்துகிறது.
முன்னேற்றம், தொழில், கல்வி – பாரதியின் தேசியக் கனவு
பாரதியின் தேசிய உணர்வு, கடந்த காலத்தைப் புகழ்ந்து பேசுவதில் மட்டும் நின்றுவிடவில்லை. தொழிற்சாலைகள், கல்வி, அறிவியல், கப்பல் தொழில் மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவை அவர் கனவு கண்டார்.
அவர் பாடிய "ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம்." என்கிற கவிதை அதையே வலியுறுத்துகிறது.
அவரது தேசியக் கண்ணோட்டம், வறுமையையோ, பலவீனத்தையோ அல்லது நிரந்தர சார்புநிலையையோ போற்றவில்லை. அதற்கு மாறாக, உற்பத்தி, கல்வி, துணிச்சல், அறிவியல் முன்னேற்றம், தேசியத் திறன் ஆகியவையே வலிமையான தேசத்தின் அடித்தளங்கள் என்று அவர் தம் பாடல்கள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தினார்.
பாரதியைப் பொறுத்தவரை, கலாச்சாரப் பாரம்பரியம் என்பது கடந்த காலத்தில் சிக்கிக்கொள்வதற்கான காரணமல்ல; எதிர்காலத்தை வெல்வதற்கான தன்னம்பிக்கையின் ஊற்றாகும். அதனால்தான் நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பாக இருக்கக் கூடிய சாதிய வேறுமைகளை அவர் கடுமையாகச் சாடினார். தேசிய முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக சாதிகள் இருக்கும் என்பதனால் தான் அவர்,
"எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம்,
எல்லாரும் இந்திய மக்கள்."
என்று முழங்கினார்.
அவரது இந்தியா, சமத்துவம், மனித கண்ணியம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய உணர்வு ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டிய தேசமாக இருந்தது.
80 ஆண்டு கால சுதந்திர இந்தியாவிற்கு பின்னும் ஏன் மகாகவி நமக்கு பொருத்தமானவர்?
தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே சந்தேகத்தையும் பிரிவினையையும் உருவாக்கும் எந்த சித்தாந்தத்திற்கும் பாரதி எளிதில் பொருந்துவதில்லை.
இந்தியாவைத் தழுவுவதால் தமிழ் மொழியின் அடையாளம் குறைவதில்லை. மாறாக, பிராந்தியப் பெருமையிலிருந்து தேசிய வலிமைக்கான உயர்வை அது அடைகிறது என்ற செய்தியை பாரதி தொடர்ந்து தன் எழுத்துக்களால் வலியுறுத்துகிறார்.
பாரதியின் அழியாத செய்தி
பாரதியின் செய்தி மிகவும் தெளிவானது.
பாரதம் இல்லாத தமிழ்ப் பெருமை அரசியல் ரீதியாகச் சுருங்கிவிடும்; தமிழ் நாகரிகம் இல்லாத இந்திய தேசியம் கலாச்சார ரீதியாக முழுமையடையாது. இரண்டிற்கும் இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு அவர் தமிழர்களை என்றுமே கேட்டதில்லை.
தமிழின் வழியாக அவர் பாரதத்தை விழிப்புணர்வடையச் செய்தார்; பாரதத்தின் வழியாக தமிழுக்கு அழியாத தேசியக் குரலை வழங்கினார். தமிழ்ப் பெருமையும் பாரதிய தேசியமும் எதிரெதிரான அடையாளங்கள் அல்ல; ஒன்றை ஒன்று நிறைவு செய்யும் இரு பரிமாணங்கள் என்பதே பாரதியின் அழியாத பாரம்பரியமாகும்.
ஜெய்ஹிந்த்!