சுபாஷ் கார்கின் 2.6% கணக்கு: எங்கே தவறு?
எழுதியவர்
Oreynaadu Desk
3 செப்டம்பர் 2026
பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக இருந்தபோது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சுபாஷ் சந்திர கார்க், 18 மே 2018 — கோப்புப் படம்இந்திய பொருளாதாரம் உண்மையில் வெறும் 2.6% மட்டுமே வளர்கிறது என முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறுகிறார். கேட்க அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அவரது கணக்கை சற்று நிதானமாகப் பார்த்தாலே, அதன் அடிப்படையில் உள்ள பெரிய பிழை தெளிவாகிறது.
முதலில் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். Real GDP என்பது பணவீக்கத்தின் தாக்கத்தை ஏற்கனவே நீக்கிக் கணக்கிடப்படும் வளர்ச்சி. அதாவது Real GDP 7.8% வளர்ந்துள்ளது என்றால், விலை உயர்வால் ஏற்பட்ட தாக்கம் ஏற்கனவே அதிலிருந்து பிரிக்கப்பட்டுவிட்டது.
அப்படியிருக்க, அந்த 7.8%-இல் இருந்து மீண்டும் 5 முதல் 6% CPI பணவீக்கத்தைக் கழித்து, "உண்மையான வளர்ச்சி 2.6% தான்" என்று கூறுவது எப்படி சரியாகும்?
ஒரே பணவீக்கத்தை இரண்டு முறை கழித்தால் கிடைக்கும் எண், பொருளாதாரத்தின் உண்மை அல்ல. தவறான கணக்கின் விளைவுதான்.
இங்கே இன்னொரு அடிப்படை பிரச்சினையும் உள்ளது. CPI என்பது மக்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மாற்றத்தை அளவிடுகிறது. GDP-யின் விலை மாற்றத்தை கணக்கிட பயன்படுத்தப்படுவது GDP Deflator. இரண்டும் ஒன்றல்ல. எனவே CPI பணவீக்கத்தை நேரடியாக Real GDP வளர்ச்சியில் இருந்து கழிப்பதே தவறான அணுகுமுறை.
அடுத்ததாக பழைய GDP series-இல் இருந்த 7.8%-ஐ, புதிய 2022-23 base year கொண்ட series-இன் 6.9%-உடன் நேரடியாக ஒப்பிடுவதும் சரியல்ல.
இவை இரண்டும் ஒரே கணக்கீட்டு முறையில் உருவான எண்கள் அல்ல. பொருளாதாரத்தின் அமைப்பு மாறும்போது GDP கணக்கீட்டு அடிப்படை ஆண்டை மாற்றுவது இயல்பான புள்ளிவிவர நடைமுறை. பழைய அளவுகோலையும் புதிய அளவுகோலையும் ஒன்றாகக் கலந்து முடிவு சொல்ல முடியாது.
அடுத்து statistical discrepancy பற்றிய வாதம்.
இங்கும் கார்கின் வாதத்திற்கு எதிராகவே எண்கள் நிற்கின்றன. Constant-price discrepancy +₹1.37 லட்சம் கோடியிலிருந்து -₹1.06 லட்சம் கோடியாக மாறியுள்ளது. அதாவது இந்த discrepancy GDP வளர்ச்சியை செயற்கையாக உயர்த்தவில்லை. மாறாக, GDP எண்ணிக்கையை கீழே இழுத்துள்ளது.
அதை நீக்கிப் பார்த்தால் expenditure components சுமார் 11.2% வளர்ச்சியை காட்டுகின்றன.
நிறுவன வருவாய் மற்றும் லாபம், வாகன விற்பனை, டிராக்டர் விற்பனை, வங்கி கடன், ஏற்றுமதி, தொழிற்துறை உற்பத்தி, capital goods என பல துறைகளிலும் வலுவான செயல்பாடு காணப்படுகிறது.
இந்த ஒவ்வொரு எண்ணும் தனியாக GDP வளர்ச்சியை நிரூபிக்காது. ஆனால் பொருளாதாரத்தின் பல முக்கிய துறைகள் ஒரே நேரத்தில் விரிவடையும் நிலையில், "இந்தியா உண்மையில் 2.6% மட்டுமே வளர்கிறது" என்று கூறுவதற்கு மிக வலுவான ஆதாரம் தேவை.
அந்த ஆதாரத்தை கார்கின் கணக்கு வழங்கவில்லை.
பிரச்சினை அரசின் GDP எண்ணிக்கையில் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை. Real GDP-யிலிருந்து மீண்டும் inflation-ஐ கழிக்கும் கணக்கில்தான் அடிப்படை தவறு உள்ளது.
2.6% என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் தலைப்பாக இருக்கலாம். ஆனால் பொருளாதாரக் கணக்காக அது நிலைத்திருக்கவில்லை.