எஸ்.ஐ.ஆர். பணிகளில் தமிழகத்தில் நடந்தது என்ன?
எழுதியவர்

கராத்தே தியாகராஜன்
23 அக்டோபர் 2026
Karate R. Thiagarajan State Secretary Tamil Nadu BJP Former Mayor (I/C) Chennai City
வாக்காளர் புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல் பக்கங்களைச் சரிபார்க்கும் அலுவலர்வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேடு நடந்ததாக இந்தியா கூட்டணி சார்பில் கடந்த 15.10.2026 அன்று சென்னையில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், “எஸ்.ஐ.ஆர். மூலம் மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டனர். மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்தச் சதி குறித்துத் தேர்தலுக்கு முன்பே ஸ்டாலினிடம் தெரிவித்தேன்” என்று சொல்லியிருக்கிறார்.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு முன்பு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சம் பேர். எஸ்.ஐ.ஆர். பணிகள் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சம்! அதாவது, 74 லட்சம் வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் நீக்கப்பட்டிருந்தனர்.
சென்னையைப் பொறுத்தவரை, 16 சட்டமன்றத் தொகுதிகளில் எஸ்.ஐ.ஆருக்கு முன்பு 40 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அன்றைக்குச் சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரியாக இருந்த சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். இதனை வெளியிட்டார். அதன்படி, சென்னையிலுள்ள 16 தொகுதிகளிலும் 28 லட்சத்து 30 ஆயிரத்து 936 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு முன்பும் பின்பும் ஒப்பிடும்போது, இறுதி வாக்காளர் பட்டியலில் 11 லட்சத்து 69 ஆயிரத்து 64 பேர் நீக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், முன்னாள் முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில், எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு முன்பு 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் இருந்தனர். அதாவது, அண்ணன் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 83,000 பேர் நீக்கப்பட்டிருந்தனர்.
தமிழகத்தில் மாநகராட்சி ஆணையர்களும் கலெக்டர்களும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாகச் செயலாற்றினர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து 10 கூட்டங்களை நடத்தினர்.
சென்னையில் மாவட்டத் தேர்தல் அதிகாரி குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில், திமுக மாநில வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்துரு, காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவுத் துணை ஒருங்கிணைப்பாளர் நவாஸ், அதிமுக மா.செ. பாலகங்கா, பாஜக சார்பில் கராத்தே தியாகராஜனாகிய நான், திருமாவளவனின் வி.சி.க. நிர்வாகி இளங்கோவன், சி.பி.எம். சார்பில் வடசென்னையைச் சேர்ந்த மா.செ. செல்வா மற்றும் சி.பி.ஐ., நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல, தமிழகத்தின் தேர்தல் ஆணைய CEO அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டங்களில், திமுக சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, வி.சி.க. சார்பில் ரவிக்குமார் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, 23.02.2026 அன்று சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் தொகுதிகள் வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, சில நாட்கள் இடைவெளியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் சென்னைக்கு வந்திருந்தார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஹோட்டல் லீலா பேலஸில் கூட்டம் நடத்தினார். அதில் திமுக சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, வி.சி.க. சார்பில் ரவிக்குமார் எம்.பி., சி.பி.எம். சார்பில் மாநிலச் செயலாளர் சண்முகம், சி.பி.ஐ. சார்பில் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இப்படி, சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி குமரகுருபரன், தமிழகத் தேர்தல் ஆணையர் CEO அர்ச்சனா பட்நாயக், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் ஆகியோர் எஸ்.ஐ.ஆர். பணிகள் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் நடக்கும் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பிரதாப் சிங், சிறப்புப் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர், கடந்த 20.4.2026 அன்று சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அது குறித்து ஒரு கூட்டம் நடத்தினார்.
இந்த 4 கூட்டங்களிலும் கலந்துகொண்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் யாரும் வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ எந்தப் புகாரையும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, எஸ்.ஐ.ஆர். திருத்தப் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாக யாரும் புகார் சொல்லவில்லை. அதுமட்டுமல்ல, தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால், வாக்குப்பதிவு நடந்தபோது பொதுமக்களிடமிருந்து பெரிய பிரச்சினை வெடித்திருக்கும். அப்படிப் பொதுமக்களிடமிருந்து தேர்தல் சமயத்தில் எந்தப் புகாரும் வரவில்லை.
இன்னும் சொல்லப்போனால், தேர்தல் அதிகாரிகளாக இருந்த கலெக்டர்கள், கமிஷனர்கள், ஈ.ஆர்.ஓ.க்கள், பி.எல்.ஓ.க்கள் என எல்லோருமே திமுக ஆட்சியில் அவர்களுக்கு வேண்டிய அதிகாரிகள்தான். அதாவது, திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் சிபாரிசுப்படிதான் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தவெகவில் உள்ள நெருங்கிய நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது, எஸ்.ஐ.ஆர். பணிகளில் வாக்காளர்கள் நீக்கம் பற்றியும் அது தொடர்பான பல விவரங்களையும் எடுத்துச் சொன்னேன். உடனே அவர், தவெகவின் மிக முக்கியமான பரபரப்புப் பிரமுகரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். அவர் தவெக ஆட்சியில் தற்போது முக்கிய அமைச்சராக இருக்கிறார். தொலைபேசியை என்னிடம் கொடுத்துப் பேசச் சொன்னார்.
நானும் அந்தப் பரபரப்புப் பிரமுகரிடம், இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் நீக்கம் வரப்போகிறது என்பதையும், அதில் தவெக வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுங்கள் எனவும் தெரிவித்தேன். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, வாக்காளர்கள் நீக்கத்தில் தவறு நடந்திருப்பதாக எந்தப் புகாரையும் தவெகவும் சொல்லவில்லை. ஆக, எஸ்.ஐ.ஆர். குறித்த விவரங்கள் தவெகவின் முக்கியப் பரபரப்புப் பிரமுகருக்கு மட்டுமல்லாமல், தவெகவின் நிர்வாகிகள் பலருக்கும் நன்றாகவே தெரியும்.
இப்படி மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் என மூன்று தரப்பிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. சிறப்புப் பார்வையாளர் தலைமையிலும் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். ஆனால், ஒரு முறைகூடப் பேச்சளவிலோ, எழுத்துப்பூர்வமாகவோ எஸ்.ஐ.ஆர். பணிகளில் தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக எந்தக் கட்சியும் புகார் தெரிவிக்கவில்லை.
உண்மை நிலவரம் இப்படி இருக்கையில், இன்றைக்குத் தேவையில்லாமல் பாஜகவையும் தேர்தல் ஆணையத்தையும் திருமாவளவன் குற்றம்சாட்டுவது தவறானது. தவறு நடந்திருப்பது உண்மையாக இருந்திருந்தால், எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக நடந்த கூட்டங்களில் திருமாவளவனின் வி.சி.க.வினர் புகார் தெரிவித்திருக்கலாமே! ஏன் தெரிவிக்கவில்லை என்பதுதான் கேள்வி.
அன்றைக்குத் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சென்னை ஆலோசனைக் கூட்டங்களில் காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட வழக்கறிஞர் நவாசிடமும், அர்ச்சனா பட்நாயக் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்ட காங்கிரஸ் தங்கபாலுவிடமும், இப்போது புதிதாகத் தலைவர் பொறுப்புக்கு வந்துள்ள மாணிக்கம் தாகூர் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
எஸ்.ஐ.ஆரில் சதி நடப்பதாகவும், திமுக தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலினிடம் முன்கூட்டியே சொன்னதாகவும் இன்றைக்குச் சொல்கிற திருமாவளவன், இதனை அப்போதே தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகாராகக் கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. கொடுக்காமல் தடுத்தது எது என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
இன்றைக்கு அரசியல் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. தவெக கூட்டணிக்குள் பாமக வந்துவிட்டால், விசிகவை முதல்வர் விஜய் புறக்கணித்துவிட்டால், அப்போது நமக்குப் போக்கிடம் இருக்காது என யோசித்து, திமுகவின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் அண்ணன் மு.க.ஸ்டாலினை நெருங்க, இப்படித் தவறான தகவலைத் தெரிவிக்கிறார் எனத் தோன்றுகிறது. அதனால், எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தவறான தகவல்களைப் பதிவு செய்வதைத் திருமாவளவன் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக, சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளின் தலைவர்கள் பாஜகவையும் தேர்தல் ஆணையத்தையும் குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல! எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் மேற்கண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது, எஸ்.ஐ.ஆரில் தவறு நடந்திருப்பதாக இவர்கள் யாரும் எழுத்துப்பூர்வமாகப் புகார் கொடுக்கவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்.
இப்படிக்கு,
கராத்தே தியாகராஜன்