வாக்காளர் பட்டியல் திருத்தம்: சர்ச்சைகளும் தேர்தல் ஆணையத்தின் விளக்கங்களும்!
எழுதியவர்
Oreynaadu Desk
22 அக்டோபர் 2026
புது தில்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் நிர்வாசன் சதன் — கோப்புப் படம்இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் (SIR), சுமார் 13.39 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. படிவம் 6 விவகாரம் மற்றும் தொழில்நுட்பக் குளறுபடிகள் குறித்த புகார்களுக்குத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ விளக்கங்களின் தொகுப்பு, கேள்வி - பதில் வடிவில் இங்கே:
1. கேள்வி: நாடு முழுவதும் 13.39 கோடி வாக்காளர்களின் பெயர்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டது ஏன்? இது வாக்குரிமையைப் பறிக்கும் செயல் இல்லையா?
பதில்: இது தன்னிச்சையான நீக்கம் அல்ல. சுமார் 10 லட்சம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று 95.40 கோடி வாக்காளர்களைச் சரிபார்த்தனர். இதில் 6.30 கோடி இடம்பெயர்ந்தவர்கள், 3.01 கோடி முகவரியில் இல்லாதவர்கள், 2.80 கோடி இறந்தவர்கள் மற்றும் 1.02 கோடி இரட்டைப் பதிவுகள் என சரியான விதிமுறைகளின்படியே பெயர்கள் நீக்கப்பட்டன. தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரின் உரிமையும் பறிக்கப்படவில்லை.
2. கேள்வி: படிவம் 6-ல் சட்டவிரோதமாக மாற்றம் செய்து, பெற்றோர் மற்றும் தாத்தாவின் பழைய வாக்காளர் விவரங்களைக் கேட்டது ஏன்?
பதில்: அடிப்படைச் சட்டப் படிவமான படிவம் 6-ல் எந்தத் திருத்தமும் செய்யப்படவில்லை. வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை உறுதி செய்யவும், ஊடுருவல்களைத் தடுக்கவுமே சிறப்புத் திருத்தக் காலத்தில் மட்டும் கூடுதல் இணைப்புப் படிவம் கேட்கப்பட்டது. இந்த நடைமுறையை நீதிமன்றமும் ஏற்றது. சிறப்புத் திருத்தம் முடிந்த மாநிலங்களில் செப்டம்பர் 30 முதல் இந்த இணைப்புப் படிவம் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது.
3. கேள்வி: தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாகச் செயல்படுவதாக சக ஆணையர்கள் பலமுறை எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறதே?
பதில்: ஆணையத்தின் அனைத்து கொள்கை முடிவுகளும் மூன்று ஆணையர்களின் ஒருமித்த ஒப்புதலுடனேயே எடுக்கப்படுகின்றன. அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முழு ஆணையத்தின் ஒப்புதலுடனேயே தொடங்கப்பட்டன. இனிவரும் காலங்களில் அனைத்துக் கூட்டங்களின் நிகழ்ச்சி நிரல்களும் முன்கூட்டியே பகிரப்பட்டு, அதிகாரப்பூர்வக் குறிப்புகள் முறையாகப் பதிவு செய்யப்படும்.
4. கேள்வி: தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அதிகாரத்தை மாற்றியது குறித்து ஆணையர்கள் அமைச்சரவைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியது உண்மையா?
பதில்: ஆணையர்கள் எழுதிய கடிதம் கொள்கை முடிவுகள் சார்ந்ததோ அல்லது தகவல் தொழில்நுட்பப் பிரிவு தொடர்பானதோ அல்ல. அது அயற்பணியில் இருந்த ஒரு அதிகாரியின் பணிச் செயல்பாடு குறித்த தனிப்பட்ட கடிதம் மட்டுமே. தொழில்நுட்பப் பிரிவின் கண்காணிப்பு அதிகாரமும் மாற்றப்படவில்லை.
5. கேள்வி: கணினித் தளத்தில் ஆவணங்களை சரி பார்க்கும் உரிமை சில கள அதிகாரிகளுக்கு மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா?
பதில்: வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் முழு அதிகாரமும் தேர்தல் பதிவு அலுவலர்களிடமே சட்டப்பூர்வமாக உள்ளது. இணையப் பக்கம் என்பது பணிகளை ஒருங்கிணைக்க உதவும் ஒரு தொழில்நுட்ப வசதி மட்டுமே. இந்த நடைமுறைகள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படுகின்றனவா என்பதை சரிபார்க்கவும், கள அதிகாரிகளின் இணையதள அணுகல் வசதியை முறைப்படுத்தவும் விரிவான ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6. கேள்வி: பட்டியலிலிருந்து தவறுதலாக நீக்கப்பட்ட சாதாரண மக்கள், மீண்டும் தங்கள் பெயரைச் சேர்க்க என்ன வழிமுறை உள்ளது?
பதில்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன், அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்களுக்காகத் தற்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தகுதியுள்ள எவரும் படிவம் 6 மூலம் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பித்து, தங்கள் பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் எளிதாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
7. கேள்வி: தர்க்கரீதியான முரண்பாடு என்ற பெயரில் கோடிக்கணக்கான வாக்காளர்களை நேரில் விசாரணைக்கு அழைத்து அலைக்கழிப்பது ஏன்?
பதில்: வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் விடுபட்ட தகவல்களைச் சரிசெய்யவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகத் தேவையில்லை; வாக்குச்சாவடி அலுவலர்களே வீடுகளுக்கு நேரில் சென்று ஆவணங்களைப் பெற்று இணையத்தில் பதிவேற்றுவார்கள்.
8. கேள்வி: தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்ற விமர்சனங்களுக்கு ஆணையத்தின் பதில் என்ன?
பதில்: அனைத்து நடவடிக்கைகளும் முழு வெளிப்படைத்தன்மையுடனேயே மேற்கொள்ளப்படுகின்றன. திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. எவரேனும் தவறான தகவல்களைப் பயன்படுத்தி வாக்காளர்களை நீக்க முயல்வதை தடுக்கவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவோர் மீது தேர்தல் சட்டங்களின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.