ஒரே நாடு
← கட்டுரைகள்

வரலாற்று நினைவுகள் கோரும் பொறுப்புணர்ச்சி!

எழுதியவர்

Oreynaadu Desk

15 செப்டம்பர் 2026

விநாயக் தாமோதர் சாவர்க்கர் — கோப்புப் படம்விநாயக் தாமோதர் சாவர்க்கர் — கோப்புப் படம்

ஒரு தேசம் என்பது, பாட்டி சொல்லும் பாசமிக்க கதைகளிலும், தலைமுறைகளைத் தாண்டியும் வாழ்ந்து வரும் தேசபக்திப் பாடல்களிலும், மக்கள் தாங்கள் பிறந்த மண்ணைப் பற்றி பேசும்போது வெளிப்படுத்தும் அமைதியான அன்பிலும்தான் வாழ்கிறது. அன்றாட வாழ்க்கையில் காணப்படும் இத்தகைய பிணைப்புகள், சாவர்க்கரின் கூற்றை நினைவு படுத்துகின்றன. மனிதநேயத்தோடு வாழ்வை அணுகுவதற்கான ஒரு வழியைச் சொல்லும் அந்த வார்த்தை, “இந்துத்துவம் என்பது ஒரு சொல் அல்ல; அது ஒரு தொடர் வரலாறு” எனும் அவரது மகத்தான சிந்தனையே!

இந்துத்துவம் குறித்து சாவர்க்கர் முன்வைக்கும் கருத்தில், வரலாற்று நினைவை ஒரு சமூகத்தின் கூட்டு அடையாளத்தின் மையத்தில் அவர் வைக்கிறார். இலக்கியம், மரபுகள், நாட்டுக்காக உழைத்த வீரர்கள் மற்றும் முன்னோர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் வழியாக நம் பாரம்பரியத்தை உணருமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். அவரது வாதம், நம்மை நோக்கி ஒரு ஆழமான தனிப்பட்ட கேள்வியை எழுப்புகிறது: நமக்கு முன் வாழ்ந்தவர்களிடமிருந்து நாம் எதைப் பெற்றுக்கொண்டோம்? நமக்குப் பின்னால் வருபவர்களுக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? என்பதே அக்கேள்வி!

தாயகத்திலிருந்து வெகு தொலைவில் வாழ்ந்தாலும், இன்றைய நவீன காலகட்டத்திலும் ஒரு குடும்பம் தனது தாய்மொழியைப் பாதுகாத்து வருவதை நினைத்துப் பாருங்கள்…அல்லது தங்கள் மூத்தோர் ஒரு காலத்தில் கொண்டாடிய ஒரு திருவிழாவுக்காக கிராம மக்கள் மொத்த பேரும் இன்றும் ஒன்று கூடி வருவதை நினைத்துப் பாருங்கள். முன்னோர்களின் தனிப்பட்ட உணர்வு என்பது காலத்தைக் கடந்தும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை இத்தகைய தருணங்கள் உணர்த்தும். முந்தைய தலைமுறைகளிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட பண்பாட்டுக்கு, இத்தகைய தாய்மொழிப் பாதுகாப்பும், தொடர்ந்து நடத்தும் திருவிழாக்களும் ஒருவித அரவணைப்பையும், பரிச்சய உணர்வையும், அன்றாட வாழ்க்கையில் ஒரு நிலையான இடத்தையும் அளிக்கின்றன.

முந்தைய நினைவுகளுக்கு அளிக்கப்படும் இந்த முக்கியத்துவம் ஒரு பொறுப்புணர்வுக்கான அழைப்பாக மாறலாம். ஒரு பாரம்பரியத்தை நேசிப்பது என்பது அதை உண்மையாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதையும், அதன் அரிய செல்வங்களைப் பாதுகாப்பதையும், அதன் கடினமான அத்தியாயங்களை நேர்மையாக ஆராய்வதையும் குறிக்கிறது.

அந்த பொறுப்புணர்வு நமது உறவுகளிலும் தடையின்றி வெளிப்பட வேண்டும்: அண்டை வீட்டாரை மதிப்பதில், கவனிப்பாரின்றி கைவிடப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பதில், குழந்தைகளுக்கு நமது இலக்கியப் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்துவதில்… என பொறுப்புணர்வு தொடர்ந்து பயணிக்க வேண்டும்

இந்த கண்ணோட்டத்தில் சாவர்க்கரின் தொடக்கக் கருத்தை மீண்டும் ஒரு முறை அசை போட்டுப் பாருங்கள்!... எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கைப் பயணங்கள் வழியாக, கடந்த காலம் நம் கைகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அவற்றை செவ்வனே நம் சிந்தனைகளோடு ஏற்றுக்கொண்டு, அடுத்த தலைமுறைக்குகளுக்கும் அதனை அக்கறையோடு கடத்த வேண்டியதே நமது தலையாய கடமை என்பது புரியும்.